/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இன்னும் நிறைய பெண் தலைமைகள் உருவாக வாய்ப்பு!
/
இன்னும் நிறைய பெண் தலைமைகள் உருவாக வாய்ப்பு!
PUBLISHED ON : ஏப் 27, 2024 12:00 AM

சென்னை, மணப்பாக்கத்தில் 17 மாடிகளில் பிரமாண்டமாக உருவாகி வரும், 'எல் அண்டு டி' தலைமை அலுவலகத்தின், புராஜெக்ட் தலைவரான கனகாம்பிகை:
'ஊர் கூடி இழுத்தால் தான் தேர் நகரும்' என்பர். இது பெண்கள் கூடி இழுக்கும் தேர். 'எல் அண்ட் டி' நிறுவனத்தின் 17 பெண் பொறியாளர்கள் தலைமையில் இந்த கட்டடம் எழுப்பப்பட்டு வருகிறது. 7 லட்சம் சதுர அடியில், 5,100 ஊழியர்கள் பணியாற்றும் இந்த அலுவலகத்தை ராப்பகலாக கட்டியெழுப்பி வருகிறோம்.
சிவில் இன்ஜினியரிங் துறையில், எனக்கு 22 ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது. இந்த புராஜெக்டுக்கு என்னை தலைவராக தேர்ந்தெடுத்தபோது, யோசிக்காமல் உடனே சம்மதிச்சிட்டேன்.
பெங்களூரில் இருந்த நான், என் கணவரோட வேலை, இரண்டு பெண் குழந்தைகளோட கல்வி என, எல்லாத்தையும் சென்னைக்கு மாத்திட்டு வந்துட்டேன்.
இந்த புராஜெக்டில் திட்டமிடல், தரம், பாதுகாப்பு, அக்கவுன்ட்ஸ், டைம் ஆபீஸ், செயலாக்கம்னு பல்வேறு துறைகள் பெண் பொறியாளர்கள் தலைமையில் இயங்குகின்றன.
கட்டுமான வேலை என்பது, 10:00 -- 6:00 மணி வரை செய்யுறது கிடையாது. 24 மணி நேரமும் கண்காணிச்சுகிட்டே இருக்கணும். இதனால கூடுதல் நேரம் வேலை பார்க்குற சூழல் இருக்கும்.
இந்த புராஜெக்டில் வேலை பார்க்கும் பல பெண்கள் ஏற்கனவே அலுவலகத்தில், 'ஏசி' அறையில் வேலை பார்த்துட்டு இருந்தவங்க. இப்ப புழுதி, வெயில், இரைச்சல் இருக்கிற களத்தில் வேலை செய்றாங்க.
கவச உடை, பாதுகாப்பு ஹெல்மெட், ஷூ... இதுதான் இவங்களோட டெய்லி காஸ்ட்யூம். 'மேக்கப் பண்ற நேரம் மிச்சம்'னு அதையும் பாசிட்டிவா எடுத்துக்கிறாங்க.
'பேஸ்மென்ட்' கட்டு மானத்துக்காக தரையில இருந்து, 12 மீட்டர் கீழே தோண்டிட்டு இருந்தோம். அந்த பகுதியில் நிலத்தடி நீரோட அளவு அதிகமாக இருந்ததால், 3 மீட்டர் தோண்டுனதுமே தண்ணீர் வர ஆரம்பிச்சிடுச்சு.
தொடர்ந்து தண்ணீரை வெளியேத்துறதுக்கான வேலைகள் நடந்தாலும், நீர் வர்றதைக் கட்டுப்படுத்த முடியல. உறை இறக்கி பிரச்னைக்கு தீர்வு காணலாம் என முடிவு செய்தோம். எங்கள் பொறியாளர்கள் அதுக்கான ஏற்பாடுகளை செய்து, ஒருநாள் இரவுக்குள்ளேயே நீர் வரத்தை கட்டுப்படுத்தி விட்டனர்.
எங்கள் நிறுவனத்தில் பெண்கள் தலைமையில் நடக்கும் முதல் புராஜெக்ட் இது. சரியான நேரத்துக்குள்ள முடிச்சு கொடுத்துடணும்னு உறுதியோட செயல்படுகிறோம். முழு வேலைகளும் நிறைவடைய சில மாதங்கள் தான் இருக்கு.
எதிர்பார்த்ததைவிட பெண்கள் டீம் சிறப்பாக வேலை செய்றதாக நிர்வாகத்துகிட்ட இருந்து பாராட்டுகள் வருது.
இந்த புராஜெக்டை நாங்க நல்லா முடிச்சி கொடுத்தால், இன்னும் நிறைய பெண் தலைமைகள் உருவாக வழி பிறக்கும்.

