/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
சென்னைக்கு ஒரு ட்ரிப் போக வேண்டும்!
/
சென்னைக்கு ஒரு ட்ரிப் போக வேண்டும்!
PUBLISHED ON : மே 30, 2024 12:00 AM

இலங்கை, யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்ற, ஓ.டி.பி., எனும், 'ஒரு ட்ரிப் போவமா?' என்ற தமிழ் படத்தை இயக்கி, நாயகனாகவும் நடித்திருக்கும் ஜோய் ஜெகார்த்தன்: இந்த படத்தின் வெற்றியை தமிழ் இளைஞர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த படம் முழுக்க முழுக்க யாழ்ப்பாணத்தின் வாழ்வியலையும், நிலவியலையும் பேசியிருக்கிறது.
எங்களது, 'பகிடியா கதைப்பம்' யு டியூப் சேனல் வீடியோவுக்கும் துவக்கத்தில் இருந்தே தமிழ் சொந்தங்கள் ஆதரவளித்தனர்.
எனக்கு யாழ்ப்பாணம் நல்லுார் தான் சொந்த ஊர். மேனேஜ்மென்ட் பட்டதாரியான நான், போருக்கு பிந்தைய காலகட்டத்தில் பதின்ம வயதில் இருந்தேன்.
உங்களுக்கு எப்படி யாழ்ப்பாணம் வியப்போ, அதுபோல எங்களுக்குத் தமிழ்... தமிழகம். தமிழ் புதினங்கள் படிப்பேன். தமிழ் சினிமாவை வெறித்தனமாக பார்ப்பேன். எனக்கு சினிமா ஆர்வம் வந்தது, தமிழ் படங்களை பார்த்து தான்.
என் அலைவரிசையோடு இருந்த நண்பர்களை இணைத்து, யு டியூப் வீடியோக்கள் உருவாக்கினேன். இலங்கை தமிழில் நாங்கள் செய்த காமெடி வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த பணத்தை வைத்து படமெடுக்க வந்து விட்டேன்.
மலையாளத்தில் மிக கம்மியான செலவில் நல்ல படங்களை எடுக்கின்றனர். அதை பார்த்தே எனக்கு நம்பிக்கை வந்தது.
நண்பர்களோடு இணைந்து, கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து, கிட்டத்தட்ட இலங்கை ரூபாயில், 20 லட்சம் மதிப்பில், இந்திய மதிப்பில், 5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து, ஓ.டி.பி., படத்தை எடுத்தோம்.
நண்பர்களே இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என அமைந்ததால், சம்பளம் வாங்காமல் என்னோடு உழைத்தனர். நடிகர்களும் என் நண்பர்கள் தான். ஒருவழியாக எல்லாம் நல்லபடியாக முடிந்தும் தமிழ் படங்களுக்கான வரிவிலக்கு, தியேட்டர்கள் கிடைக்கவில்லை.
ரொம்ப சோர்ந்து போன நேரத்தில், யாழ்ப்பாண கவர்னரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவருக்கு, எங்களுடைய நோக்கம் புரிந்தது; அதன்பின் அனுமதி கிடைத்து.
இலங்கை தமிழர்களின் முன்னெடுப்பில் பல நாடுகளில் இப்போது சிறப்பு காட்சிகளாக ஓடுகிறது. படத்துக்கு வரிவிலக்கும் கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
அடுத்த படத்துக்கான கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னும் நல்ல படைப்புகளை கொடுக்க வேண்டும்.
நேரம் காலம் பார்க்காமல் வீட்டுக்கு செல்லும் என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனைவி, பிள்ளைக்கு நன்றி சொல்ல வேண்டும். சென்னைக்கு ஒரு ட்ரிப் போக வேண்டும்.