/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தேடுதல் இருந்தால் எந்த வயசுலயும் ஜெயிக்கலாம்!
/
தேடுதல் இருந்தால் எந்த வயசுலயும் ஜெயிக்கலாம்!
PUBLISHED ON : மே 16, 2024 12:00 AM

கடந்த 11 ஆண்டுகளாக, 'ஆன்லைனில்' உருளி விற்பனை செய்து வரும், புதுவையை சேர்ந்த சுமதி: பிசினசில் வெற்றி பெற மாத்தி யோசிக்கணும்னு சொல்லுவாங்க. ஆனால், பழசை யோசிச்சா கூட ஜெயிக்க முடியுங்கிறதுக்கு நாங்களே உதாரணம்.
என்னோட, 43 வயதில் தயக்கத்தோட புது பிசினசை துவங்கினேன். 10 ஆண்டுகள் ஆகிருச்சு. இப்போது ஆண்டிற்கு 1 கோடி ரூபாய், 'டர்ன் ஓவர்' பண்றோம்.
என் கணவர், வீடுகளுக்கான வெளிப்புற அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் பிசினஸ் பண்ணிட்டு இருந்தாரு. நானும் அவருடன் பிசினஸை கவனிச்சுட்டு இருந்தேன். என் மகன், ஒரு கல்லுாரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறான்.
அப்போது நாங்க கட்டிட்டிருந்த வீட்டுக்கு ஒவ்வொரு பொருளும் தனித்துவமாக இருக்கணும்னு தேடினோம். பெரும்பாலும் அவை சீன தயாரிப்புகளாக இருந்தன.
பர்னிச்சர்கள் எல்லா கடைகளிலும் ஒரே மாதிரி டிசைனில் தான் இருந்தது. அப்போது தான் வீணையை மாடல் எடுத்து ஒரு கான்கிரீட் பென்ஞ் டிசைனை உருவாக்கி ஆர்டர் குடுத்து செய்து வாங்கினோம்.
அதை பார்த்துட்டு, அதே மாதிரி வேணும்னு நிறைய பேர் கேட்க துவங்கினர். அப்போது தான் இதையே பிசினசாக துவங்கலாம்னு ஐடியா வந்தது.
சில லட்சங்கள் முதலீடு செய்து நாற்காலிகள், சின்ன ஸ்டூல்கள் செய்து வாங்கி பிசினஸ் துவங்கினோம் ஆனால், மர வேலைப்பாடுகளில் பெரிதாக லாபம் இல்லை.
போட்டிகளும் அதிகமாக இருந்தன. அதனால், இதோடு சேர்த்து வேறு ஏதாவது பிசினஸ் துவங்கலாம்னு யோசித்தபோது, உருளி பிசினஸ் ஐடியா வந்தது.
ஆன்லைனில் தேடினபோது உருளி தயாரிப்புக்கு பெரிய அளவில் போட்டிகள் இல்லாதது தெரிந்தது.
மண்ணில் செய்யும் உருளிகளோட ஆயுள் குறைவு என்பதால், கான்கிரீட் கலவை கொண்டு செய்ய துவங்கினோம். ஒவ்வோர் உருளியையும் நான் தான் டிசைன் பண்ணி கொடுப்பேன்.
உருளியில் இதுவரை 20 டிசைன்கள் உருவாக்கியிருக்கேன். வெறும் வட்ட வடிவ பாத்திரமாக இல்லாமல் யானை முக உருளி, கடவுள் உருவங்கள், பூக்கள், சங்குன்னு வித்தியாசமான டிசைன்களை உருவாக்கினேன்.
முதலில் படமாக வரைந்து, அப்புறம் அதை டிஜிட்டலாக மாற்றி, கான்கிரீட் மெட்டீரியலில் ஹேண்ட்மேடா தயார் செய்கிறோம்.
புதுவையில் எங்க கடையில் விற்பனை செய்வது மட்டுமில்லாமல் அமேசான், எங்க இணையதளம், இன்ஸ்டாகிராம்னு ஆன்லைன்லயும் விற்பனை செய்ய துவங்கினோம்.
அடுத்த கட்டமாக, மேஜையில் வைக்குற செயற்கை நீர்வீழ்ச்சிகள், வீடுகளுக்கு வெளியே வைக்கக்கூடிய பெரிய அளவு செயற்கை நீர் வீழ்ச்சிகளையும் தயார் செய்கிறோம். தேடுதல் இருந்தால் எந்த வயசுலயும் ஜெயிக்கலாம்.