/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
வெளிநாட்டினரும் என் பண்ணைக்கு வந்திருக்காங்க!
/
வெளிநாட்டினரும் என் பண்ணைக்கு வந்திருக்காங்க!
PUBLISHED ON : ஏப் 16, 2024 12:00 AM

மதுரை மாவட்டம், மாத்துார் அருகே உள்ள செட்டிக்குளம் கிராமத்தில் 3.5 ஏக்கர் பரப்பில், மாதிரி வேளாண் சுற்றுலா தலம் உருவாக்கி, வருமானம் ஈட்டி வரும் விவசாயியும், பொறியாளரு மான அருள் ஜேம்ஸ்:
விவசாயிகள், தங்களுடைய வருமானத்தை அதிகப்படுத்த, பயிர் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை மட்டுமே சார்ந்திருந்தால் போதாது.
தங்களுடைய பண்ணையை வேளாண் சுற்றுலா தலமாகவும் பயன்படுத்த வேண்டும். வேளாண் சுற்றுலா திட்டத்தை ஊக்கப்படுத்த, தமிழக அரசு சிறப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இயந்திரமயமான நகர வாழ்க்கை, பணி மற்றும் குடும்பச் சூழலால் ஏற்படும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்படக்கூடிய மக்கள், ஓரிரு நாட்கள் அதில் இருந்து விலகி, இயற்கையான, அமைதியான சூழலில் புத்துணர்ச்சி பெற விரும்புகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, விவசாயம் தொடர்பான அடிப்படை விஷயங்களை, நிலத்தில் இறங்கி நேரடியாக தெரிஞ்சுக்கணும்கிற ஆர்வம் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் மத்தியில் அதிகமாகிட்டு இருக்கு.
வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய பொதுவான சுற்றுலா பயணியர் கோவில்கள், வரலாற்று புகழ்மிக்க இடங்களை பார்க்குறதோடு மட்டுமல்லாமல், அந்தந்த பகுதிகளில் உள்ள இயற்கை வேளாண் பண்ணைகளில் தங்கவும் விரும்புறாங்க.
கடந்த 2021ல், என்னோட பண்ணையில் வேளாண் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த துவங்கினேன். இங்க வரக்கூடியவங்க பல விதங்களிலும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட, மாட்டு வண்டி பயணம், செல்லப் பிராணிகளுக்கு உணவளிப்பது, காய்கறிகள் பறிப்பது...
நீர்நிலைகளில் குளிப்பது, மீன் பிடித்தல், விறகு அடுப்பில் பாரம்பரிய முறையில் சமையல் செய்தல், பல்லாங்குழி, பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளிட்ட இன்னும் பலவிதமான நிகழ்வுகள் இங்கு நடத்தப்படும். இதனால் இங்க சுற்றுலா வரக்கூடிய மக்கள் ரொம்பவே சந்தோஷப்படுறாங்க.
ஆரம்பத்தில், நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு, 150 ரூபாய் வாங்கினேன். அதன்பின், விலைவாசி உயர்வால் படிப்படியாக கட்டணத்தை உயர்த்தினேன். இப்ப நுழைவு கட்டணமாக, ஒரு நபருக்கு 350 ரூபாய் வாங்குறேன்.
காலை, 9:00 முதல் மாலை, 6:00 வரைக்கும் சுற்றுலா விருந்தினர்கள் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர். மதிய உணவை பொறுத்தவரை சைவமாக இருந்தால் 250, அசைவமாக இருந்தால், 350 ரூபாய் வசூல் செய்கிறேன்.
வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல் இத்தாலி, பிரான்ஸ், பெல்ஜியம், ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் என் பண்ணைக்கு வந்துட்டு போயிருக்காங்க.
தொடர்புக்கு:
98946 10778.

