/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நச்சுத்தன்மை இல்லாமல் நடக்கும் கொய்யா சாகுபடி!
/
நச்சுத்தன்மை இல்லாமல் நடக்கும் கொய்யா சாகுபடி!
PUBLISHED ON : ஆக 24, 2024 12:00 AM

கன்னியாகுமரி மாவட்டம், தேரிவிளை பகுதியைச் சேர்ந்த விவசாயி நாகராஜன்: இதுதான் எங்களோட பூர்வீக கிராமம். நாங்கள் விவசாய குடும்பம். போதுமான வருமானம் இல்லாததால், மந்தானம்புதுார் பகுதியில் செயல்படும் அன்புமனை என்ற இலவச தங்கும் விடுதியில் தான், 10ம் வகுப்பு வரை படித்தேன்.
அங்கு, மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, பல விதமான தொழில்கள் கற்றுக் கொடுத்தனர். நான் விவசாயத் தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டேன். 10ம் வகுப்பு முடித்ததும், விவசாயத்தில் இறங்க முடிவெடுத்தேன்.
எங்கள் மாவட்டத்தில், தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளில் சிலர், தங்களுடைய தென்னந்தோப்பை விவசாய தொழிலாளர்களின் பொறுப்பில் ஒப்படைத்து விடுவர்; அதற்கு பணம் வாங்குவதில்லை.
தொழிலாளர்கள் ஊடுபயிர்களாக பழங்கள், காய்கறிகளை சாகுபடி செய்து வருமானம் எடுத்துக் கொள்வர்.
அதே சமயம், தென்னை மரங்களை அந்த தொழிலாளர்கள் கண்ணும் கருத்துமாக பராமரித்து, வெற்றிகரமாக விளைய வைக்கின்றனர். இந்த ஒப்பந்த முறையில், பரஸ்பரம் இரு தரப்பினருமே பயன் அடைகின்றனர்.
இந்த ஒப்பந்த முறையில், 20 ஆண்டுகளாக ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்படுத்தி ஊடுபயிர்கள் சாகுபடி செய்ய ஆரம்பித்தேன்.
கொரோனா சமயத்தில், தொற்று தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டு, என் உருவமே மாறியது; அபாய கட்டம் வரை சென்று, உயிர் பிழைத்தேன்.
அப்போதுதான், 'நாமும் ஆரோக்கியமாக வாழணும்; நாம் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை சாப்பிடுவோரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும்' என்ற நோக்கத்துடன், இயற்கை விவசாயத்திற்கு மாறினேன்.
சுகுந்தகுமார் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் தென்னந்தோப்பில், மூன்று ஆண்டுகளுக்கு முன் தென்னங்கன்றுகள் நடவு செய்ததும், தைவான் பிங்க் ரக கொய்யா 750, அர்கா கிரண் ரக கொய்யா 750 செடிகளை ஊடுபயிராக நடவு செய்தேன்.
அடுத்த ஒன்றரை ஆண்டிலேயே 1,300 மரங்கள் காய்க்கத் துவங்கின. இயற்கை முறையில் சாகுபடி செய்வதால், தனித்துவமான சுவையும், சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது.
மக்களும் மிகவும் விரும்பி வாங்குகின்றனர். ஒரு கிலோவுக்கு 60 ரூபாய் வீதம் ஒரு மாதத்திற்கு 1,500 கிலோ கொய்யா பழங்கள் விற்பனை வாயிலாக, 90,000 ரூபாய் வருமானம் கிடைக்குது.
ஒரு மாதத்திற்கு 40,000 செலவு போக, மீதி 50,000 ரூபாய் லாபம் கிடைக்குது. மேலும், காய்கறிகள் விற்பனை வாயிலாக மாதத்திற்கு 8,000 ரூபாய் வரை வருமானம் கிடைத்தது.
'கொய்யா பழங்களை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். அதனால், அதை ரசாயன நச்சுத்தன்மை இல்லாமல், ஆரோக்கியமாக உற்பத்தி செய்து கொடுக்கிறோம்' என்ற மனநிறைவு கிடைக்கிறது.
தொடர்புக்கு: 87542 13861

