PUBLISHED ON : மே 20, 2024 12:00 AM

தமிழ் நாவல் உலகின் நட்சத்திர எழுத்தாளர் காஞ்சனா ஜெயதிலகர்: ஐம்பது ஆண்டுகளுக்கு முன், சிற்றிதழ்களில் சிறுகதைகள் எழுதியதன் வாயிலாக துவங்கிய என் எழுத்து பயணம், இலக்கிய மற்றும் வெகுஜன பத்திரிகைகளுக்கும் படர்ந்தது.
இதுவரை, 3,000த்திற்கும் அதிகமான சிறுகதைகளை எழுதியுள்ளேன். தற்போது, 84-வது நாவலை எழுதி வரும் நான், பரத நாட்டியம், கர்நாடக சங்கீதம் மற்றும் வீணை வாசிப்பு போன்ற கலைகளையும் கற்றுத் தேர்ந்துள்ளேன்.
படித்தது, ஆங்கில வழிக் கல்வி. கல்லுாரியில் தேர்ந்தெடுத்தது ஆங்கில இலக்கியம் என்றாலும், தமிழை தெளிவாகவே இரண்டு இடங்களிலும் கற்றுத் தந்தனர்.
அதனால், எழுத்து பிழை, பொருத்தமான வார்த்தைகளுக்காக துழாவும் பிரச்னை போன்றவை எனக்கு வந்ததே இல்லை. என், 7 வயதில் கற்கத் துவங்கிய பரதம், என்னை அடுத்ததாய் சங்கீதத்திலும் ஆசைவூட்டி, வீணையையும் மீட்ட வைத்தது.
சிறார் இலக்கிய பத்திரிகையின் ஆசிரியர் ஒருவர், 'எப்போது பார்த்தாலும் புத்தகம் வாசித்து கொண்டிருக்கிறாயே... என் சிற்றிதழுக்கு ஒரு கதை எழுதிக் கொடு' என்று கேட்க, அங்கிருந்து என் எழுத்துப் பயணம் துவங்கியது.
தொடர்ந்து, அவர் கேட்ட கதைகள் எனக்குள், 'நான் ஓரளவு நன்றாக எழுதுகிறேன்' என்ற எண்ணத்தை விதைத்தது.
கடந்த, 1980-ல் சிற்றிதழ்கள், இலக்கிய பத்திரிகைகள் மற்றும் கிறிஸ்துவ பத்திரிகைகளில் நான் எழுத துவங்கினாலும், 1992-ல் தான் முழு முயற்சியுடன் வெகுஜன பத்திரிகை உலகிற்குள் நுழைந்தேன்.
பிரபல பெண்கள் இதழ் ஒன்றுக்கு சிறுகதை ஒன்றை எழுதி அனுப்ப, அந்தக் கதை பிரசுரமானதோடு, எனக்கு தங்க மோதிரமும் பரிசாகக் கிடைத்தது. பல்வேறு மாத இதழ்களில் என் நாவல்கள் தொடர்ச்சியாக வெளியாக துவங்கின.
உலகம் சுற்றி வந்த அனுபவம், எழுத்தை வளமாக்கியது. பயண சுவாரஸ்யத்தை என் கதைகள் வாயிலாக வாசகர்களுடன் பகிர முடிந்தது.
என் புத்தகங்கள் சில, பல வெளிநாட்டு நுாலகங்களிலும் இடம்பெற்றிருப்பது தமிழ் எனக்களித்த பெருமிதம்.
நான் படித்த பள்ளியின் நுாற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் போது, என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அதே போல, நான் படித்த கல்லுாரியின் தமிழ் துறையை சேர்ந்த ஆசிரியர் ஒருவர், என் நாவல்களை தன், பிஹெச்.டி., ஆய்வுக்காக எடுத்து கொண்டார். இவை, என் மொழி எனக்கு கொடுத்த உச்சபட்ச அங்கீகாரம்.
தற்போது இளைஞர்கள் பலர் தமிழில் எழுத வருவதை பார்க்கும் போது, மனதிற்கு மகிழ்ச்சி. ஆனால், எழுத வருபவர்களுக்கு விஸ்தாரமான வாசிப்பு பழக்கம் அவசியம்.
அப்போது தான் மொழி வளம் வசப்படும். எழுத்தானது துல்லியமாகவும், கூர்மையாகவும் இருந்தால், அவை வாசகர்களை ரசிக்க வைக்கும். அப்போது, எழுத்தானது அழகாக பரிமளிக்கும்!

