/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கிராம மக்களுக்கு டி.டி.எஸ்., வரி ரூ.90 லட்சம் பெற்று தந்தேன்!
/
கிராம மக்களுக்கு டி.டி.எஸ்., வரி ரூ.90 லட்சம் பெற்று தந்தேன்!
கிராம மக்களுக்கு டி.டி.எஸ்., வரி ரூ.90 லட்சம் பெற்று தந்தேன்!
கிராம மக்களுக்கு டி.டி.எஸ்., வரி ரூ.90 லட்சம் பெற்று தந்தேன்!
PUBLISHED ON : ஆக 17, 2024 12:00 AM

'ஆடிட்டர் சாப்' என்ற ஆடிட்டிங் நிறுவனத்தை நடத்தி வரும், விழுப்புரத்தைச் சேர்ந்த ரகுநாதன்: விழுப்புரத்தில் பள்ளி படிப்பை முடித்து, மயிலாடுதுறையில் உள்ள ஏ.வி.சி., கல்லுாரியில் பி.காம்., படித்தேன். பள்ளியில் படிக்கும்போதே சி.ஏ., ஆக வேண்டும் என நினைத்தேன்.
கல்லுாரியில் படித்து முடித்தவுடன், சென்னையில் உள்ள ஆடிட்டிங் இன்ஸ்டிடியூட்டில் இரு ஆண்டுகள் படித்தேன்.
பள்ளியில் என் சீனியரான ராஜேஷ், விழுப்புரத்தில் ஆடிட்டிங் ஆபீஸ் ஒன்றை நடத்தி வந்தார். அவரிடம் வேலைக்கு சேர்ந்தேன். ஆறு மாதம் தான் வேலை செய்தேன்.
ஆடிட்டிங் தொடர்பான வேலையை நானே செய்ய நினைத்து தனியாக ஆபீஸ் துவங்கி விட்டேன்.
ஆபீசை திறந்து விட்டேன் என்றாலும், எனக்கென்று வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. எனவே, சிறு நிறுவனங்களுக்கு ஆடிட்டிங் வேலை செய்து தந்தேன்.
2006ல், திண்டிவனத்தில் இருந்து உளுந்துார்பேட்டை வரை பைபாஸ் சாலை அமைக்கும் திட்டத்தில், கிராம மக்களிடம் இருந்து நிலங்கள் வாங்கிய அரசு, அதற்கான இழப்பீட்டு பணம் தரும்போது டி.டி.எஸ்., வரி பிடித்து தந்தது.
இந்தப் பணத்தை எப்படி திரும்ப பெறுவது என்று தெரியாமல் கிராம மக்கள் விழிக்க, அந்த வேலையை நான் செய்ய ஆரம்பித்தேன்.
கிட்டத்தட்ட, 90 லட்சம் ரூபாய் பெற்று தந்தேன். இதனால், பல கிராமங்களில் என் பெயர் பரவி, அதன் காரணமாக விழுப்புரத்தில் உள்ள பிசினஸ் நிறுவனங்களுக்கு என்னை தெரிந்தது.
டெக்னாலஜி உதவி இருந்தால், விழுப்புரத்தை தாண்டி தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும், ஏன் இந்தியா முழுக்க ஆன்லைன் வாயிலாக ஆடிட்டிங் சேவையை தர முடியும் என்ற தெளிவு வந்தபின், நான் யோசிக்கும் விதமும் முழுக்க மாறியது.
அலுவலகத்தில் எந்த வகையான டாக்குமென்ட் வந்தாலும் அதை டிஜிட்டலாக்கி, காணாமல் போக வாய்ப்பே இல்லை என்ற நிலையை உருவாக்கினேன்.
சிறு, குறு நிறுவனங்களை பொறுத்தவரை மிகப் பெரிய பிரச்னை, கம்பெனியின் வரவு - செலவு கணக்குகளை சரியாக வைத்திருக்க மாட்டார்கள்.
அவர்களை சந்தித்து, கம்பெனியின் கணக்கு, வழக்குகளை சரியாக எழுத வேண்டியதன் அவசியத்தை எடுத்து சொல்லி, அவர்களுக்கு அந்த சேவையை தர ஆரம்பித்தோம். இதனால், நிறைய புதிய பெரிய வாடிக்கையாளர்கள் எனக்கு கிடைக்க, வருமானமும் வர ஆரம்பித்தது.
விழுப்புரத்தை தாண்டி பல மாவட்டங்களிலும் அலுவலகம் திறக்க வேண்டும். ஒவ்வொரு கிளை அலுவலகத்திலும் 100 மீடியம் பிசினஸ் கிளையன்ட்கள், 300 ஸ்மால் பிசினஸ் கிளையன்ட்களை பெற வேண்டும் என்ற இலக்குடன் உழைத்து வருகிறேன்.

