/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கோசாலையால் மன நிம்மதியும் ஆத்ம திருப்தியும் கிடைத்துள்ளது!
/
கோசாலையால் மன நிம்மதியும் ஆத்ம திருப்தியும் கிடைத்துள்ளது!
கோசாலையால் மன நிம்மதியும் ஆத்ம திருப்தியும் கிடைத்துள்ளது!
கோசாலையால் மன நிம்மதியும் ஆத்ம திருப்தியும் கிடைத்துள்ளது!
PUBLISHED ON : பிப் 27, 2025 12:00 AM

கன்னியாகுமரி மாவட்டம், குமாரகோவில் பகுதியில் கோசாலை நடத்தி வரும் ஜெகன்ராஜ்: ஐ.டி.ஐ.,யில், 'ஏசி மெக்கானிக்' தொழில்நுட்ப பயிற்சி முடித்து விட்டு, உணவு தொழிலில் இறங்கி விட்டேன். தற்போது, இரண்டு உணவகங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.
என் தம்பி ஜெனீஸ், நாட்டு பசு ஒன்று வளர்த்தான்; ஒரு குழந்தையை போல் அதை கவனித்து கொண்டான். அந்த பசுவும் என் தம்பி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தது.
இந்த நிலையில், 2012ல் ஒரு சாலை விபத்தில் என் தம்பி இறந்து விட்டான். அவனை பார்க்க முடியாததால், அந்த பசு பரிதவித்து போய் விட்டது. பல நாட்கள் சரியாக சாப்பிடாமல், துாங்காமல் இருந்தது.
அதனால், அந்த பசுவை நான் வளர்க்க ஆரம்பித்தேன். அதை கண்ணும், கருத்துமாக பார்த்துக் கொள்வதன் வாயிலாக, தம்பியின் ஆத்மா சாந்தியடையும் என்று நம்பினேன். அதிக எண்ணிக்கையில் நாட்டு மாடுகள் வளர்க்க வேண்டும் என்பது என் தம்பியின் பெருங்கனவு. அதை நிறைவேற்ற, படிப்படியாக மாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தேன்.
இதனால், 7 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வாங்கி, 2016ல் கோசாலை ஆரம்பித்தேன். இறைச்சிக்காக அனுப்பப்படும் நாட்டு பசுக்களை விலைக்கு வாங்கி, முறையாக தீவனங்கள் கொடுத்து ஆரோக்கியமாக வளர்க்கிறேன். தற்போது, 62 பசு மாடுகளும், ஏழு காளைகளும் இருக்கின்றன.
இடைப்பட்ட காலத்தில் சிறு, குறு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு பல மாடுகளை இலவசமாக கொடுத்திருக்கிறேன். கறவையில் தினமும் 30 லிட்டர் வரை பால் கிடைக்கும். 1 லிட்டர் 100 ரூபாய் என விற்பனை செய்கிறேன். மாடுகளின் சாணம், சிறுநீரை பயன்படுத்தி இயற்கை உரங்களும், சாண பவுடர் விபூதி, வறட்டி தயார் செய்து விற்பனை செய்கிறேன்.
பால் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை வாயிலாக கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் மாடுகளுக்கான அடர்தீவனம், மருத்துவம், கொட்டகை பராமரிப்பு, வேலையாட்களுக்கான சமபளம் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்கிறேன்.
லாப நோக்கத்தில் இந்த கோசாலையை நடத்தவில்லை. இதற்காக நான் நிறைய பணமும், நேரமும் செலவு செய்கிறேன்.
அதை பற்றி ஒருநாள் கூட கவலைப்பட்டதில்லை. காரணம், இந்த கோசாலை வாயிலாக எனக்கு கிடைக்கும் மன நிம்மதியும், ஆத்ம திருப்தியும் அளப்பரியது.
என் தம்பி உயிருடன் இருந்திருந்தால், இந்த கோசாலையை இன்னும் சிறப்பாக நடத்தியிருப்பான். இங்கு, நுாற்றுக்கணக்கான நாட்டு மாடுகள் இருந்திருக்கும். அது ஒருபுறமிருந்தாலும், அவன் ஆசையை என்னால் முடிந்த அளவு நிறைவேற்றி வருகிறேன்.
தொடர்புக்கு:
99445 96965.