/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நல்ல ஐடியாவும் உறுதியும் இருந்தால் தொழிலில் சாதிக்கலாம்!
/
நல்ல ஐடியாவும் உறுதியும் இருந்தால் தொழிலில் சாதிக்கலாம்!
நல்ல ஐடியாவும் உறுதியும் இருந்தால் தொழிலில் சாதிக்கலாம்!
நல்ல ஐடியாவும் உறுதியும் இருந்தால் தொழிலில் சாதிக்கலாம்!
PUBLISHED ON : மார் 09, 2025 12:00 AM

சமையலுக்கான பாரம்பரிய பாத்திரங்கள், ஆர்கானிக் பொருட்களுக்கான கடை, கபே, பேக்கரி, கைத்தறி சேலைகள் மற்றும் உடை விற்பனை என, பல விஷயங்களை ஒருங்கிணைத்து பிசினஸ் நடத்தி வரும், சென்னையைச் சேர்ந்த கயல்விழி:
நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னை தான். இன்ஜினியரிங் முடித்த பின், அமெரிக்காவில் பைனான்ஸ் தொடர்பாக படித்தேன்; அங்கேயே வேலை கிடைத்தது.
அங்கிருந்தபோதே திருமணம் ஆனது. குழந்தை பிறந்த பின், 'தாத்தா - பாட்டியுடன் வளர வேண்டும்' என்று ஆசைப்பட்டதால், இந்தியா திரும்பினேன். வங்கி ஒன்றில் வேலை கிடைத்தும், மன நிறைவு இல்லை.
பிசினஸ் செய்ய வேண்டும் என்று தோன்றியது. செய்யும் தொழில் இந்த சமூகத்துக்கும் உதவியாக, இயற்கை நலன் சார்ந்ததாக, நம் கலாசாரத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்றும் யோசித்தேன்.
'ஆர்கானிக் ஸ்டோர் வைக்கலாம்' என்று முடிவெடுத்து, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், 'எசென்ஷியல் டிரெடிஷன்ஸ்' என்ற கடை ஒன்றை ஆரம்பித்து, அதில் அரிசி, பருப்பு, காய்கறி, பழங்கள் என எல்லாமே வாங்கி விற்பனையை துவங்கினோம்.
இயற்கையான காய்கறிகளாக இருந்தாலும், அவற்றை சமைக்கும் முறையும் முக்கியம் என்று தேடியபோது அம்மிக்கல், ஆட்டுக்கல், இரும்பு பாத்திரங்கள், கல் சட்டி, மண் பானை, முறம், கூடை என்று எங்களின் பார்வை விசாலமானது.
முதலில் பலரும் வேடிக்கை பார்ப்பதற்கும், அது குறித்து பேசுவதற்கும் தான் வந்தனர். பின், பலரையும் அழைத்து வந்தனர். படிப்படியாக பிசினஸ் வெற்றியடைந்தது. ஆன்லைனிலும் விற்க ஆரம்பித்தோம். தற்போது ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் கடைகள் இருக்கின்றன.
இத்துடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்திலும், ஆர்கானிக் ஸ்டோருடன், ரெஸ்டாரன்ட், பேக்கரி, கைத்தறி துணிகள், சேலைகள், பாத்திரங்கள் என, ஐந்து தொழில்களும் செயல்பட்டு வருகின்றன.
நான் வங்கி வேலையை ராஜினாமா செய்தபோது, கடுமையான விமர்சனங்களை சந்தித்தேன். அம்மாவிடம் இருந்து, 25,000 ரூபாய் கடன் வாங்கி தான் முதல் அடியை எடுத்து வைத்தேன். இன்று ஆண்டுக்கு, 6 கோடி ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன்.
இவை எல்லாமே, ஒரே நாளில் நடக்கவில்லை. தொடர்ச்சியான உழைப்பும், இடைவிடாத முயற்சியும் தான் இதற்கு முக்கிய காரணம்.
பணம் இருப்போர் மட்டுமே தொழில் செய்ய வேண்டும் என்ற நிலை இப்போது மாறிவிட்டது. உங்களுக்கு தேவையெல்லாம் ஒரு நல்ல ஐடியாவும், அதை செயல்படுத்துவதற்கான உறுதியும் தான். தொடர்புக்கு: 98841 37070
************************
மனிதர்களுக்கு செய்யும் உதவி கடவுளுக்கு செய்வதற்கு சமம்!
தஞ்சையைச் சேர்ந்த, மஞ்சள் காமாலை மற்றும் குடல் நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் முரளி:
தஞ்சாவூர் மாவட்டம், குலமங்களம் என் பூர்வீக கிராமம். தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., - எம்.எஸ்., படித்தேன். அதன்பின், சென்னை மருத்துவக் கல்லுாரியில் குடல் அறுவை சிகிச்சை படிப்பை முடித்துவிட்டு, தஞ்சாவூருக்கே வந்து விட்டேன்.
பல பெரிய மருத்துவ மனைகளில் பணி
புரிய வாய்ப்பு வந்தது; ஆனால், ஆளாக்கிய பெற்றோரை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, இங்கேயே செட்டிலாகி
விட்டேன்.
பட்டுக்கோட்டையில் பிரபல மருத்துவர் ரத்தினம் சாரிடம் வேலை பார்த்த போது, அவர் 10 ரூபாய் தான் கட்டணம் வாங்குவார். கடைசி வரை அதை கொள்கையாகவே வைத்திருந்தார். அவர் தான் எனக்கு, 'இன்ஸ்பிரேஷன்'
என்றும் சொல்லலாம்.
கடந்த 2016ல் சொந்தமாக கிளினிக் ஆரம்பித்தேன். நானும் வறுமையின் வலியை கடந்து வந்தவன் என்பதால், பீஸ் கேட்க மனது வரவில்லை.
அதனால், 'பீஸ் வாங்கக்கூடாது' என்று உறுதி எடுத்துக்கொண்டு, வரவேற்பறையில் உண்டியல் வைத்து விட்டேன். 'உங்களால் முடிந்ததை உண்டியலில் போடுங்கள்' என்று கூறி விடுவோம். போடாமல் போனாலும் கேட்க மாட்டோம். இங்கு, 'எண்டோஸ்கோபி' உள்ளிட்ட அனைத்து வகையான பரிசோதனைகளுக்கும், மற்ற இடங்களை விட குறைவான கட்டணம் தான்.
பணம் இல்லை என்றாலும், கட்டாயப்படுத்துவது இல்லை; இலவசமாகவே பரிசோதனை செய்து விடுவோம். ஆன்மிகத்தில் எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. மனிதர்களுக்கு செய்யும் உதவி, கடவுளுக்கு செய்வதற்கு சமம் என்பதை நம்புகிறேன்.
அப்பா நினைவாக, அர்ப்பணம் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்துகிறேன். உண்டியலில் போடப்படும் பணம், திரும்பவும் மக்களிடமே செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஏழை குழந்தைகளின் கல்வி, மருத்துவம், அன்னதானம் போன்ற விஷயங்களுக்கு அந்த பணத்தை பயன்படுத்துகிறேன்.
கிளினிக் உள்ள இடத்துக்கான வாடகை, ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட செலவு போக, மிச்சசத்தில் என் வாழ்க்கை வண்டி தடுமாறாமல் ஓடிட்டு இருக்கு. பீஸ் வாங்காததால், எனக்கு பொருளாதார கஷ்டம் ஏற்படுகிறது. ஆனால், ஒரு நாளும் துன்பமாக நினைத்ததில்லை.
வலியுடன் வருவோரின் உதட்டில் புன்னகை பூக்க வேண்டும். இதுவே எனக்கான அறம். இதை மீறி விட்டேன் எனில், மருத்துவராக இருப்பதற்கான தகுதியை இழந்து விடுவேன். கஷ்டப்படுவோரின் கண்ணீரை துடைத்து, நோயை குணமாக்கி அனுப்புவதில் கிடைக்கும் நிம்மதியை கோடிகளால் ஈடு செய்ய முடியாது.
தொடர்புக்கு: 94432 55699.