/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
சாப்பாட்டில் லாபம் பார்ப்பது தவறு!
/
சாப்பாட்டில் லாபம் பார்ப்பது தவறு!
PUBLISHED ON : மார் 04, 2025 12:00 AM

திருச்சி, கீழப்புதுார் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை - ராஜேஸ்வரி தம்பதி: ஏழுமலை: அப்பாவும், அம்மாவும் சேர்ந்து, 40 ஆண்டுகளாக வீட்டிலேயே இடியாப்பம், புட்டு விற்கும் தொழிலை செய்து வந்தனர்.
நான், எம்.ஏ., - பி.எட்., பட்டதாரி. நிறைய பள்ளிகளுக்கு ஆசிரியர் வேலை தேடி சென்றேன்; 6,000 ரூபாய் வரை சம்பளம் கொடுத்தனர். அந்த வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியவில்லை; அதனால் அப்பாவின் தொழிலை எடுத்து நடத்தலாம் என்று முடிவு செய்தேன்.
படிப்பு வீணாக கூடாது என்று, டியூஷன் எடுக்க ஆரம்பித்தேன். மனைவி, 'சப்போர்ட் பண்றேன்'னு சொல்லி, என் எல்லா முடிவுகளுக்கும் துணையாக நின்றார்.
காலையில் இடியாப்பம் விற்கிறோம். மாலை டியூஷன் எடுப்போம். கிடைக்கும் நேரத்தில் மனைவி தையல் தொழிலும் செய்வார்.
தினமும் அதிகாலையில், 3:00 மணிக்கு இடியாப்பம் தயார் செய்ய ஆரம்பித்தால், இரண்டு மணி நேரத்தில் அதை அடுக்கி வைத்து விடுவோம்.
காலை 10:00 மணி வரை வேலை இருக்கும். ஈர அரிசியை லேசா காயவைத்து அரைத்து அவிக்கணும்; அதையும் காயவைத்து சலித்து எடுத்தால், இடியாப்பம் பிழிய எளிதாக இருக்கும்.
தினமும், 18 மணி நேரம் உழைக்கிறோம். இந்த வருமானத்தில் தான், எங்கள் இரு பிள்ளைகளையும் டிகிரி படிக்க வைக்கிறோம்.
ராஜேஸ்வரி: தற்போது, 1 இடியாப்பம் 2 ரூபாய்க்கு விற்கிறோம். நாள் ஒன்றுக்கு, 15 முதல் 20 கிலோ வரை விற்கும். முதல் நாளே ஆர்டர் வாங்கி தான் இடியாப்பம் தயார் செய்கிறோம்; அதனால் மீதமாகாது.
அப்படியே இடியாப்பம் மிச்சம், ஆனாலும் அதை காயவைத்து வடகம் செய்து விடுவோம். புட்டு மீதமானால், வேறு வழியில்லை; துாக்கிதான் போடவேண்டி இருக்கும்.
இரண்டாவது மாடியில் தான் தயாரிக்கிறோம். அதனால் கீழ்தளத்தில் கூடையுடன் கூடிய மணி ஒன்று வைத்துள்ளோம். வாடிக்கையாளர்கள் மணியை அடித்ததும், நான் மேல் இருந்து கயிறை இழுத்து கூடையை துாக்குவேன்.
கூடையில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள ரூபாய்க்கு ஏற்றார் போல், இடியாப்பத்தை வைத்து விட்டு, கூடையை கீழே இறக்குவேன். இது, எல்லாருக்கும் எளிதாக உள்ளது.
சமைக்க, விறகு அடுப்பு தான் பயன்படுத்துகிறோம். சைடு டிஷ் கிடையாது. குடும்பம் நடத்த போதுமான அளவு வருமானம் கிடைக்கிறது.
சாப்பாடு என்பது அனைவருக்குமான அடிப்படை தேவை; அதில் லாபம் பார்த்து அடுத்தவங்களை கஷ்டப்படுத்துவது, தவறு! தொடர்புக்கு 98949 87469