/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
27,000 பேருக்கு வேலை என்பது ஓர் ஆரம்பம் தான்!
/
27,000 பேருக்கு வேலை என்பது ஓர் ஆரம்பம் தான்!
PUBLISHED ON : செப் 10, 2024 12:00 AM

கடல் நீரை குடிநீராக்கும் தொழிலில், உலக அளவில், ஐந்தாவது பெரிய நிறுவனமாக விளங்கும், 'டெக்டான்' குழுமத்தை நடத்தி வரும், லக் ஷ்மணன்:
தென்காசி மாவட்டம், புளியங்குடி அரசுப் பள்ளியில், பிளஸ் 2 வரை படித்தேன். அதன்பின் தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் சிவில் இன்ஜினியரிங் சேர்ந்தேன்.
ஹாஸ்டல் செலவுக்கான பணம், 300 ரூபாயை ஒன்றிரண்டு மாதங்கள் வீட்டில் இருந்து வாங்கி கட்டினேன். அதன்பின் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து என் விடுதி கட்டணத்தை கட்டினேன்.
படித்து முடித்ததும், எல் அண்ட் டி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அதன்பின், லிபியா நாட்டில் வேலை இருப்பதாக ஒரு நாளிதழில் விளம்பரம் வெளியாகி இருந்தது. அதற்கு விண்ணப்பித்தேன். அந்த வேலையும் கிடைத்தது.
அங்கு இருந்த நண்பன் ஒருவன் துபாயில் இருந்தான். அவன் அழைப்பை ஏற்று துபாய்க்கு சென்றேன். அந்த நாடு எனக்கு பிடித்து விட்டது. இருந்தால் அங்கு இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து, லிபியா வேலையை ராஜினாமா செய்து விட்டு, துபாயில் வேறு வேலை தேடிக் கொண்டேன்.
அது, தண்ணீர் வினியோகத்திற்கான பைப் லைன்களை அமைக்கும் நிறுவனம். அந்த நிறுவனம் எடுத்திருந்த சிக்கலான புராஜெக்ட்களை இரவு பகலாக கண்விழித்து நல்லபடியாக முடித்து கொடுத்தேன்.
அதனால், அந்நிறுவனம் எனக்கு சி.இ.ஓ., பதவியை கொடுத்தது. அப்போது என் வயது, 27. அனைவரையும் அரவணைத்து, சரியாக திட்டமிட்டு வேலை செய்ததில் என் நிறுவனம் நன்கு வளர்ந்தது.
அதன்பின், 10 ஆண்டுகள் கழித்து சொந்தமாக தொழில் துவங்கும் முடிவை எடுத்தேன். அப்போது என்னிடம் 1 கோடி ரூபாய் இருந்தது. அதை முதலீடாக வைத்து, சொந்தமாக பிசினஸ் துவங்கினேன். கடுமையாக உழைத்ததில் பெரிய புராஜெக்ட்டுகள் கிடைக்க ஆரம்பித்தன.
உலக அளவில், 20 நிறுவனங்களை இன்று நடத்தி வருகிறேன். இந்த பிசினஸ் உள்ள நிறுவனங்களில் உலக அளவில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது என் டெக்டான் நிறுவனம். இந்த இடத்தை அடைந்த போது, அதன் வயது வெறும் 18 மட்டுமே.
இந்தியா உட்பட 15 நாடுகளில் நீர் தொழில்நுட்பத்தில், 'எண்டு டு எண்டு' சர்வீஸ் தரும் பிசினசை செய்து வருகிறேன். தமிழகத்தில் நெம்மேலி, துாத்துக்குடி, கல்பாக்கம், குஜராத்தின் போர்பந்தர் உட்பட இந்தியாவில் எட்டு இடங்களில், கடல் நீரை குடிநீராக்கும் பணிகளை செய்து வருகிறோம்.
இன்றைக்கு ஆண்டுக்கு பல பில்லியன் டாலர், 'டர்ன் ஓவர்' மற்றும் 27,000 பேருக்கு வேலை என்பதெல்லாம் எங்களுக்கு ஓர் ஆரம்பம் தான். இனிவரும் காலத்தில் டெக்டான் இன்னும் பெரிதாக வளர்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

