/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கஷ்டங்களை துாக்கிப் போடுங்கள் நிம்மதியாக வாழலாம்!
/
கஷ்டங்களை துாக்கிப் போடுங்கள் நிம்மதியாக வாழலாம்!
கஷ்டங்களை துாக்கிப் போடுங்கள் நிம்மதியாக வாழலாம்!
கஷ்டங்களை துாக்கிப் போடுங்கள் நிம்மதியாக வாழலாம்!
PUBLISHED ON : மார் 01, 2025 12:00 AM

மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் கீழச்சித்திரை வீதியில், கடந்த 55 ஆண்டுகளாக பேனா மெக்கானிக்காக இருக்கும், சீனிவாசன்: பெற்றோருக்கு ஒரே மகன் நான். அப்பா, பேனா மெக்கானிக். படிப்பு சரியாக வரவில்லை என்று, அப்பாவுடன் சேர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்து விட்டேன்.
அரசு அதிகாரிகள் பலர், அப்பாவிடம் தான் பேனா ரிப்பேர் செய்து வாங்கிச் செல்வர். அப்பா இறந்தபின், எனக்கும் இதுதான் வேலையானது.
ஒரு இங்க் பேனா ரிப்பேர் செய்து கொடுத்தால், 25 பைசா கிடைக்கும்; பேனா வாங்கி விற்கவும் ஆரம்பித்தேன்.
நல்ல வேலை இல்லாததால், காலதாமதமாக தான் திருமணமானது. மனைவி, கைத்தறி வேலைக்கு சென்றார்; இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர்.
அவர்களை என்னால் படிக்க வைக்க முடியாமல், தறி ஓட்டும் வேலைக்கு அனுப்பி விட்டேன். வீட்டில் மிகவும் பணக்கஷ்டம்.
அதனால், மனைவிக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, மனநோய்க்கு ஆளானார். வைத்தியம் பார்க்க வசதியில்லாததால், பள்ளி வாசலில் வைத்து தான் வைத்தியம் பார்த்துட்டு இருந்தேன். குழந்தைகளை கரை சேர்க்கிற கடமைக்காக ஓடினேன்.
ஆனால், அடுத்தடுத்து என் உறவுகளை இழக்க ஆரம்பித்தேன். எனக்கு உறுதுணையாக இருந்து என் மகள்களை பார்த்துக் கொண்ட என் அம்மா இறந்து விட்டார்.
அவருக்கு இறுதி சடங்கு செய்து முடிப்பதற்குள், என் மனைவி தவறி விழுந்து படுத்த படுக்கை ஆக, அவளை மூத்த மகள் தான் பார்த்துக் கொண்டார். ஆனால், உடல்நல குறைவால் என் மூத்த மகள் இறந்து விட்டாள்; 2020ல் மனைவியும் இறந்து விட்டார்.
கடந்த 10, 20 ஆண்டுகளாக தான் புதுப்புது பேனாக்கள் மார்க்கெட்டுக்கு வந்து, இங்க் பேனா வழக்கமே இல்லாமல் போய் விட்டது. பழைய மரக்கட்டை பேனா, 40 ஆண்டுகள் வரை உழைக்கும்.
அப்படி ஒரே பொருளை பல ஆண்டுகள் பயன்படுத்துவது என்பது எங்கள் தலைமுறைக்கு தான் பெருமையாக இருந்தது. இப்போது இருப்பவர்களுக்கு எதையும் நீடித்து ரொம்ப நாளைக்கு பயன்படுத்த பிடிக்கவில்லை. எல்லாவற்றையும் புதிதாக வாங்கியபடியே இருக்கின்றனர்.
ஆனால், இப்போதும் சிலர் வந்து என்னிடம் பேனா ரிப்பேர் செய்துவிட்டு போகின்றனர். மாதம் ஏதோ சிறிது வருமானம் வருகிறது; அதை என் இரண்டாவது மகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் கொடுப்பேன்.
என், 76 ஆண்டு வாழ்க்கையில் காலம் தான் ஒவ்வொரு துயரத்திலும் என்னை தட்டிக் கொடுத்து வாழ வைத்துள்ளது. இறந்தவர்களை நினைக்காமல் இருப்பவர்களை பார் என்று கூறியது.
மனித பிறவி எடுத்துவிட்டோம். என்ன கஷ்டம் வந்தாலும் துடைத்து போட்டுவிட்டு வாழ்ந்து தான் ஆகணும். புலம்பி என்ன ஆகப் போகிறது? பிழைப்பு தான் கடைசி வரைக்கும் கைவிடாது!