/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ரூ.100 கோடியை இந்த ஆண்டில் எட்டிடுவோம்!
/
ரூ.100 கோடியை இந்த ஆண்டில் எட்டிடுவோம்!
PUBLISHED ON : ஆக 10, 2024 12:00 AM

'தி மீட் ஷாப்' எனும் பெயரில், ஆடு விற்பனை தொழிலை, சென்னை அடுத்த குரோம்பேட்டையில் நடத்தி வரும், நான்கு நண்பர்களில் ஒருவரான நவாஸ்கான்: எங்கள் நால்வரின் பிசினஸ் ஆர்வமும், ஒரே அலைவரிசையில் இருக்கவே, தற்போது செய்து வரும் இறைச்சி பிசினசை ஆரம்பித்தோம். இறைச்சி விற்பனை தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு, தேவையான இறைச்சிகளை விற்பனை செய்கிறோம்.
கூடவே, தொழில்நுட்ப ஆலோசனைகள் முதல், விற்பனையை அதிகப்படுத்துவதற்கான உத்திகள் வரை, பல வகையிலும் அவர்களுக்கு, 'சப்போர்ட்' பண்றது தான், எங்கள் முதன்மையான வேலை.
உ.பி., - ம.பி., ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் தரமான ஆடுகள் வளர்க்கப்படுவதால், அங்கிருந்து தான் வாங்குகிறோம்; விலையும் கொஞ்சம் குறைவு. ராஜஸ்தானில் சிக்கர், உ.பி.,யின் கல்பி, ம.பி.,யின் மால்வா பகுதியில் தான் ஆடுகள் தரமானதாக கிடைக்கும். இதற்காக எங்கள் நிறுவன பணியாளர்கள் அங்கு வேலை செய்கின்றனர்.
அந்த வேலையை கவனிக்க, வாரம் ஒரு முறை வட மாநிலங்களுக்கு செல்வோம். எங்கள் பணியாளர்கள் கொள்முதல் செய்த ஆடுகளை வண்டியில் அனுப்பி வைப்பர். ஆரோக்கியமான, நோய் பாதிப்பற்ற தரமான ஆடுகளை தேர்வு செய்து வாங்குவோம்.
இங்கு வந்ததும், அவற்றின் பாலினம், எடை, பற்களின் எண்ணிக்கையை வைத்து வயது நிர்ணயம், ஆடுகளின் வகை, தோற்றம், உயரம், எலும்பு என, 24 வகையான கணக்கீடுகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஆட்டுக்கும் விலையை நிர்ணயிக்கிறோம்.
மேலும், 'பார் கோடு' உருவாக்கி, ஆடுகளின் காது பகுதியில் ஒட்டிடுவோம். ஆடு விற்பனையின் போது அந்த பார் கோடு மேல் ஸ்கேன் செய்தால், விலை தெரியும். இந்த முறையில் தான் ஒவ்வொரு வாரமும் சராசரியாக 2,000 ஆடுகளை விற்பனை செய்கிறோம்.
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் உயிர் எடையுடன் ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர்.
தவிர நாங்கள் நடத்தும் இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சி வியாபாரம் செய்யும் எங்கள் வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கும் இந்த ஆடுகளை தான் பயன்படுத்துகிறோம்.
தமிழகத்தில் ஆடுகள் வளர்க்கும் பலரும் எங்களிடம் விற்க முன்வருகின்றனர். இறைச்சி விற்பனைக்கு, 'தி மீட் ஷாப்' என்ற பெயரில் 'ஆப்' வைத்துள்ளோம்.
கடந்த மூன்று மாதங்களாக ஆடுகள் விற்பனையில் மட்டும் 7 கோடி ரூபாய், 'டர்ன் ஓவர்' பண்றோம். தவிர சில்லரை விற்பனையில், மாதத்திற்கு 1 கோடி ரூபாய், 'டர்ன் ஓவர்' பண்றோம். இந்த வகையில் 2024 - 2025ம் நிதியாண்டில் நிச்சயமாக 100 கோடி ரூபாய், 'டர்ன் ஓவர்' பண்ணிடுவோம்.