/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இயற்கை முறை சிகிச்சைகளில் பக்க விளைவு கிடையாது!
/
இயற்கை முறை சிகிச்சைகளில் பக்க விளைவு கிடையாது!
PUBLISHED ON : பிப் 26, 2025 12:00 AM

சென்னை அரும்பாக்கம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பேராசிரியை மங்கையர்க்கரசி: எந்த விதமான பாதிப்பு வந்தாலும், தன்னிச்சையாகவே குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டது மனித உடல். இதை தாண்டி, குணமாகாத நோய்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான வளம் இயற்கையில் உள்ளது.
இப்படி மூலிகைகள், உணவு பழக்கங்கள், உடற்பயிற்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் உதவியுடன் உடலையும், மனதையும் குணமாக்கும் மருத்துவ முறையையே இயற்கை மருத்துவம் என்கிறோம்.
நோயின் அடிப்படை காரணத்தை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிப்பதே இயற்கை மருத்துவத்தின் முக்கிய அம்சம். இயற்கை மருத்துவ முறையில் பலவிதமான சிகிச்சை முறைகள் உள்ளன.
உபவாச சிகிச்சை, இயற்கை உணவு சிகிச்சை, மண் சிகிச்சை, நீர் சிகிச்சை, மசாஜ் மற்றும் நறுமண சிகிச்சை, காந்த சிகிச்சை, நிற சிகிச்சை, அக்குபஞ்சர் சிகிச்சை, இயன்முறை சிகிச்சை, யோகா சிகிச்சை ஆகியவை முக்கிய சிகிச்சை முறைகளாக இருந்து வருகின்றன.
இயற்கை உணவு சிகிச்சை என்பது, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பச்சை காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், கிழங்குகள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வது.
இந்த உணவுகள் உடலை சுத்தமாக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உணவில், 80 சதவீதம் காரத் தன்மையும், 20 சதவீதம் அமிலத் தன்மையும் இருப்பதே ஆரோக்கியம். இயற்கை உணவின் சீரான பகிர்வு, உடல் நலத்தை மேம்படுத்தும்.
இயற்கை மூலிகை சிகிச்சை என்பது, இயற்கையில் கிடைக்கும் மூலிகைகள், செடி, கொடிகள் வாயிலாக நோய்களை குணப்படுத்துவதாகும். இம்மூலிகைகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
யோகா என்பது உடல், மனம் மற்றும் ஆவியை ஒன்றாக இணைக்கும் ஒரு சிகிச்சை முறை. யோகா வாயிலாக உடல் மற்றும் மனதை சீராகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க முடியும்.
இயற்கை முறை சிகிச்சைகளின் பெரிய சிறப்பம்சமே, அது பக்க விளைவுகள் இல்லாதது தான். அதுவும் எளிமையான முறையில் செலவுகள் இல்லாத சிகிச்சை முறையாக இருந்து வருகிறது. சிகிச்சைக்கு பின் முறையான உணவு பழக்கங்கள், உடற்பயிற்சிகள், யோகா என்று வழக்கப்படுத்திக் கொண்டால், வாழ்வியல் சார்ந்த நோய்களை எளிதாக தடுக்கலாம்.
இதனால், உடல் நீங்கள் சொல்வது போல் கேட்கும். உங்கள் அன்றாட பணிகளை எந்த தொய்வுமின்றி தொடரலாம். உடலை சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள முடியும். இங்கு சிகிச்சை முடிந்து செல்வோருக்கு, இதை தான் சொல்லி அனுப்புகிறோம்.
தொடர்புக்கு:
99947 09278.