/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அமைச்சர்கள் நேரு - மகேஷ் 'லடாய்' முற்றுகிறது?
/
அமைச்சர்கள் நேரு - மகேஷ் 'லடாய்' முற்றுகிறது?
PUBLISHED ON : டிச 06, 2025 03:08 AM

ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''புரோக்கர்கள் ராஜ்யம் தான் நடக்குது பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''எந்த துறையில ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''பெரம்பலுார் மாவட்டத்துல ஓடுற மண் மற்றும் மணல் லாரிகள், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணிகளை செய்யும் கான்ட்ராக்டர்களின் லாரிகள் விதிமீறல்ல ஈடுபட்டா, போலீசார் வழக்கு போடுவாங்க... இதுல இருந்து லாரிகளை காப்பாத்த, திருச்சியில சில புரோக்கர்கள் இருக்காங்க பா...
''சமீபத்துல, அனுமதியில்லாம கிராவல் மண் ஏத்திட்டு வந்த லாரியை, பெரம்பலுார் போலீசார் பிடிச்சி, ஆயுதப்படை வளாகத்துக்கு கொண்டு போனாங்க... லாரி உரிமையாளர், திருச்சியில ஒரு புரோக்கருக்கு ஒரு தொகையை வெட்டினாரு... அவ்வளவு தான், வழக்கே போடாம லாரியை விட்டுட்டாங்க பா...
''பெரம்பலுார் மாவட்ட போலீஸ்ல எந்த காரியம் ஆகணும்னாலும், திருச்சி புரோக்கர்களை பிடிச்சா போதும்... அந்த அளவுக்கு மாவட்ட போலீஸ் நிர்வாகத்தையே தங்களது கையில வச்சிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''என் சகலையோட நண்பர் பெரியசாமிக்கு என்னாச்சோ தெரியலீங்க... அடிக்கடி காசு கேட்டு தொல்லை பண்றாரு...'' என்றபடியே, தான் பேசிக் கொண்டிருந்த போனை அணைத்த அந்தோணிசாமி, ''லஞ்சத்துல தள்ளுபடி தர்றாருங்க...'' என, அடுத்த மேட்டரை தொடர்ந்தார்...
''பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கிறவங்க, அதே முகவரியில் தான் குடியிருக்காங்களா என்பதை, அந்தந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற உளவுத்துறை போலீசார், 'செக்' பண்ணி, 'ரிப்போர்ட்' குடுப்பாங்க...
''சென்னை தாம்பரம் கமிஷனரகத்தில் வர்ற தாழம்பூர் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற உளவு போலீஸ்காரர், இந்த பணியில் ரொம்பவே கறாரா இருக்காரு... அதாவது, ஒரு பாஸ்போர்ட் ஆய்வுக்கு, 1,000 ரூபாய் கேட்கிறாருங்க...
''ஒரே வீட்டில் ரெண்டு பேர் பாஸ்போர்ட் கேட்டிருந்தா, 500 ரூபாய் தள்ளுபடி பண்ணி, 1,500 ரூபாய் மட்டும் வாங்குறாரு... யாராவது தர மறுத்தா, 'விண்ணப்பத்தை திருப்பி அனுப்பிடுவேன்'னு மிரட்டுறாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''அப்பாதுரை, இதையும் கேட்டுட்டு கிளம்பும்...'' என, நண்பரை இழுத்து பிடித்த பெரியசாமி அண்ணாச்சி, ''கூட்டணி கட்சியை துாண்டி விடுதார்னு சொல்லுதாவ வே...'' என்றார்.
''எந்த கட்சி விவகாரம் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''திருச்சி மாநகராட்சி சார்பில், திருவெறும்பூர்ல சர்வீஸ் ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யக் கோரி, தி.மு.க., கூட்டணி கட்சியான, மா.கம்யூ.,வினர், சமீபத்துல தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினாவ வே...
''இதுல, அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா பேசுறப்ப, 'இது, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் தொகுதிங்கிறதால, தி.மு.க., மேயர் அன்பழகன் இதை புறக்கணிக்காரு... பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டத்தையும் சரியா பண்ணல... மாநகராட்சி திட்டங்கள் எல்லாம் அமைச்சர் நேருவின் திருச்சி மேற்கு மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிகளுக்கு தான் போகுது... மகேஷ் தொகுதியில் இருக்கிற அரியமங்கலம் குப்பை கிடங்கை அகற்ற மாநகராட்சி அக்கறை காட்டல'ன்னு சரமாரியா குற்றம் சாட்டினாரு வே...
''நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரா இருக்கிற நேருவும், அவரது ஆதரவாளரான மேயரும் சேர்ந்து, மகேஷ் தொகுதியை புறக்கணிக்கிறதா ராஜா பேசியதால, 'மகேஷ் தான், அவரை துாண்டி விட்டார்'னு நேரு ஆதரவாளர்கள் புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

