/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
காதலரை விட வேறு யாரும் நமக்கு பெரியவரல்ல!
/
காதலரை விட வேறு யாரும் நமக்கு பெரியவரல்ல!
PUBLISHED ON : மார் 02, 2025 12:00 AM

விழுப்புரம் மாவட்டம், திருவாமாத்துார் அடுத்த ஆரியூர் கிராமத்தை சேர்ந்த முரளி - விஜயபிரியா தம்பதி:
விஜயபிரியா: கணவர் வேலை பார்த்த ஐ.டி.ஐ.,யில், நான் இரண்டு ஆண்டுகள் எலக்ட்ரீஷியன் கோர்ஸ் படித்தேன். அவர் வகுப்பு நடத்தும்போது, என்னை பார்க்கவே மாட்டார். ஆனால், அவரை ஏனோ எனக்கு பிடித்துப் போக அவருக்கு சாப்பாடு, தின்பண்டம் எல்லாம் எடுத்துச் செல்வேன். அவரை எனக்கு பிடித்திருக்கிறது என்பது அவருக்கும் புரிந்தது.
அதனால், ஆயுத பூஜை அன்று அவர் நம்பரை என்னிடம் கொடுத்தார்; எனக்கும் சந்தோஷம். ஆனாலும் எங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற பயத்தால் அவருக்கு ஆசையை ஏற்படுத்த வேண்டாம் என்று, அந்த நம்பரை கிழத்து போட்டு விட்டேன். அதன்பின், 67 நாட்கள் கழித்து தொலைபேசியில், 'உங்களை மனதார விரும்புகிறேன்' என்றேன்.
என் வீட்டில் இதை கேட்டதும் அதிர்ச்சியாகி, 'இரண்டு கால்களும் செயலிழந்த அவன் எப்படி உன்னை நல்லா பார்த்துக் கொள்வான்?' என்று கேட்டனர். என் முடிவில் மட்டும் உறுதியாக நின்றேன். ஒன்பது ஆண்டுகள் எங்கள் வீட்டின் அனுமதிக்காக காத்திருந்தோம்.
ஒருமுறை அவசரமாக வேறு திருமண ஏற்பாடு செய்தபோது, வீட்டை விட்டு வெளியேறி, 4 கி.மீ., துாரம் நடந்தே சென்று, அவர் வீட்டை அடைந்தேன். அவர் வீட்டில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்; திருமணம் வீட்டிலேயே முடிந்தது.
என்னிடம் பலரும் கேட்கும் கேள்வி இதுதான்... 'இப்படி இருக்கிறவனை ஏன் காதலித்தாய்?' என்று, ஒரே பதில் தான்... நாம காதலிக்கிறவங்களை விட இந்த உலகத்தில் வேறு யார் நம் கண்களுக்கு நல்லா தெரிவாங்க?
எங்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். என் முகம் மாறவிட மாட்டார்; அவ்வளவு நன்றாக பார்த்துக் கொள்கிறார்.
முரளி: எனக்கு 1 வயதிலேயே போலியோ பாதிப்பு ஏற்பட்டிடுச்சு. இரண்டு கால்களும் செயலிழந்து போயிடுச்சு. படிக்க ஆசைப்பட்டேன். பெற்றோர் தான் என்னை பள்ளி, கல்லுாரிக்கு துாக்கிச் செல்வர்.
எம்.ஏ., முடித்து, ஐ.டி.ஐ., படித்து விட்டு, அதே கல்வி நிலையத்தில் ஆசிரியராக பணிக்கு சேர்ந்தேன். தற்போது, தனியார் அச்சடிக்கும் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாளைக்கு, 1,000 ரூபாய் சம்பாதித்தால் அதில், 300 ரூபாயை எவருக்காவது உதவ செலவிடுவேன். இதுவரை ஒரு வார்த்தை கூட, என் மனைவி என்னிடம் கேட்டதில்லை.
'உதவ நினைக்கிற உங்க மனசு தான் நம்மை உயர்த்தும்' என்று ஆதரவாகத் தான் பேசுவார். இதுவரைக்கும், அவங்க ஆசைப்பட்டு எதுவும் கேட்டதும் இல்லை. 'நீங்க என்கூட இருங்க; நான் உங்க கூட இருக்கேன். இதுபோதும் நமக்கு' என்று சொல்வார். எங்கும், யாரிடமும் என்னை விட்டுக் கொடுக்க மாட்டாங்க. குழந்தையை பார்த்துக் கொள்வது போல், என்னை பார்த்துக்கிறாங்க! தொடர்புக்கு: 96555 46260
********************************
முருங்கை பிசினிலும் வருமானம் உண்டு!
'மிராக்கிள் ட்ரீ லைப் சயின்ஸ்' என்ற நிறுவனம் வாயிலாக, முருங்கையில், 50க்கும் மேற்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும், மதுரையைச் சேர்ந்த சரவணகுமரன் - சுஜாதா தம்பதி:
சரவணகுமரன்: பி.இ., எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்துள்ளேன். 2007ல் கீழக்கரை கிராமத்தில் நிலம் வாங்கி, பலவித காய்கறி, பழங்கள், நிலக்கடலை, உளுந்து என, சாகுபடி செய்தோம்.
அதில், எதிர்பார்த்த அளவு லாபம் இல்லாததால் மர முருங்கை சாகுபடி செய்யலாம் என்று முடிவெடுத்து, திருச்செந்துார் - உடன்குடி நாட்டு ரக முருங்கையை பயிர் செய்தோம்.முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் இலை, பூ, காய், விதை, பிசின் உள்ளிட்ட அனைத்து பொருட்களிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கின்றன.
ஆனால், கொரோனா பரவலுக்கு பின்தான் முருங்கையின் மகத்துவம் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
எங்கள் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும், முருங்கையின் 50க்கும் மேற்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் அதிக வரவேற்பு இருக்கிறது. ஆண்டுக்கு கிட்டத்தட்ட, 3 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது.
சுஜாதா: ஆரம்பத்தில், முருங்கை இலையை பவுடராக்கி, 200 கிராம் 150 ரூபாய் என்று விற்பனை செய்தோம். அதன்பின் முருங்கை டீத்துாள், 'டிப்' டீத்துாள் செய்து விற்பனை செய்ய ஆரம்பித்தோம்.
மேலும், முருங்கை பவுடரில் நாட்டு சர்க்கரை, பாதாம் பருப்பு, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் கலந்து, முருங்கை, 'எனர்ஜி பார்' விற்பனை செய்கிறோம்.
முருங்கை பூவை இயற்கை முறையில் பதப்படுத்தி விற்பனை செய்கிறோம். இதை பாலில் போட்டு சாப்பிடலாம். முருங்கைப்பூ கேப்சூல், பதப்படுத்தப்பட்ட முருங்கைக்காய் ரெடிமிக்ஸ் உட்பட பலவித பொருட்கள் தயார் செய்கிறோம்.
முருங்கை மரத்தில் இருந்து சேகரிக்கும் பிசினை, டிரையரில் போட்டு காய வைப்போம்.அதன்பின் தேவைக் கேற்ப நெய் கலந்த பிசினாகவும், பவுடர் நிலையிலும் தயார் செய்து விற்பனை செய்கிறோம்.
முருங்கைத் தோட்டம் வைத்துள்ள விவசாயிகள், காய், கீரை விற்பனை வாயிலாக மட்டும் வருமானம் பார்ப்பதை நோக்கமாக வைத்திருக்க கூடாது. பிசினை சேகரித்து பதப்படுத்தி விற்பனை செய்யும் முயற்சிகளிலும் இறங்க வேண்டும். தொடர்புக்கு:
99763 27888