/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பச்சை மிளகில் ஊறுகாய் செய்து விற்கிறேன்!
/
பச்சை மிளகில் ஊறுகாய் செய்து விற்கிறேன்!
PUBLISHED ON : செப் 12, 2024 12:00 AM

இயற்கை முறையில் மிளகு சாகுபடி செய்து வரும், மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, அரையபுரம் கிராமத்தைச் சேர்ந்த, வீரமணி: நாங்கள் பல தலைமுறையாக விவசாய குடும்பம். அதனால், எனக்கு இயல்பாகவே விவசாயத்தில் ஆர்வம் அதிகம்.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் ஓய்வு பெற்ற பின், விவசாயத்தில் இறங்கி விட்டேன்.
எங்கள் குடும்ப சொத்தில் எனக்கான பங்காக, 15 ஏக்கர் நெல் வயலும், 2 ஏக்கர் தென்னந்தோப்பும் கொடுத்தனர். 12 ஆண்டுகளுக்கு முன் தேங்காய் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்த போது, மிகவும் கஷ்டப்பட்டேன்.
அப்போது, புதுக்கோட்டையில் தென்னந்தோப்பில் மிளகு சாகுபடி குறித்த கருத்தரங்கில் பங்கேற்றேன்.
அதில், தென்னைக்கு பாய்ச்சும் தண்ணீர் வாயிலாக கிடைக்கும் ஈரப்பதத்திலேயே மிளகு செழிப்பாக வளரும் என்றும், அதிக பராமரிப்பில்லாத பயிர் மிளகு எனவும் தெரியவந்தது. 100 மிளகு கன்றுகள் வாங்கி வந்தேன். அதில், 50 கன்றுகள் தான் வளர்ந்தன; மீதி கன்றுகள் காய்ந்து விட்டன.
விளைந்த 50 கன்றுகளில் இருந்தே புதிய கன்றுகள் உற்பத்தி செய்தேன். அவை வெற்றிகரமாக வளர்ந்து, விளைச்சல் கொடுக்க ஆரம்பித்தன. 2 ஏக்கர் தோட்டத்தில், 400க்கும் மேற்பட்ட மிளகு கொடிகளை தென்னை மரங்களில் ஏத்தி விட்டுள்ளேன்.
மிளகு சாகுபடியில் வெற்றிகரமாக விளைச்சல் எடுக்க, மண் வளம், வடிகால் வசதி, போதுமான அளவுக்கு நிழலும் அவசியம். எங்கள் ஊர் காவிரி படுகையில் இருப்பதால், இயல்பாகவே மண் வளமாக இருக்கும்.
மேலும், ரசாயன இடுபொருட்களை முற்றிலும் தவிர்த்து, ஊட்டமேற்றிய எரு நிறைய கொடுப்பதால், மண்ணின் வளம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. என் தோட்டத்தில் வடிகால் வசதி, சிறப்பாக இருக்கிறது.
தென்னை மரங்களில் மிளகு கொடிகள், 30 அடி உயரம் வரை ஏறியிருக்கும். ஏணி பயன்படுத்தி தான் காய்கள் பறிக்கிறேன். பறித்த பச்சை மிளகை துணி அல்லது சாக்கில் போட்டு கட்டி, வென்னீரில் ஒரு நிமிடம் நனைத்து எடுத்தால், கருப்பு நிறமாக மாறிவிடும்.
அதன்பின் வெயிலில் மூன்று நாட்கள் காய வைத்தால், மூன்றில் ஒரு பங்கு காய்ந்த தரமான மிளகு தயார்.
காய்ந்த மிளகு ஒரு கிலோ, 800 ரூபாய் என விற்பனை செய்து வருகிறேன். கடந்தாண்டு, 50,000 ரூபாய் கிடைத்தது. வரும் ஆண்டுகளில் இன்னும் கூடுதலான லாபம் கிடைக்கும்.
அதுமட்டுமல்லாது, பச்சை மிளகில் ஊறுகாய் தயார் செய்து விற்பனை செய்கிறேன். இது மிகவும் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும். இதை மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.
தொடர்புக்கு
94422 34193

