/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
வீரர்கள் நல்ல தொகையை வருமானமாக ஈட்ட முடியும்!
/
வீரர்கள் நல்ல தொகையை வருமானமாக ஈட்ட முடியும்!
PUBLISHED ON : ஆக 16, 2024 12:00 AM

இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவரான, தமிழகத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா:
இயக்கமே இல்லாமல் தேங்கி நின்ற கூடைப்பந்து சம்மேளனத்தை சுறுசுறுப்பாக இயங்க வைத்திருக்கிறோம். நாடு முழுதும் இருந்து பல வீரர், வீராங்கனையர் புதுடில்லிக்கு வந்து திருப்தியுடன் பயிற்சி மேற்கொண்டு செல்கின்றனர்.
சென்னை ஈ.சி.ஆரில் இந்திய வீரர், வீராங்கனையருக்கான நவீன வசதிகள் கொண்ட பயிற்சி முகாமை உருவாக்கி இருக்கிறோம்.
முன்பெல்லாம் வீரர்களுக்கு ஊக்கத்தொகை, பரிசுத்தொகை என்பதெல்லாம் வழங்கப்பட்டதே இல்லை.
நாங்கள் கடந்த ஓராண்டில் மட்டும், 1.30 கோடி ரூபாயை நன்றாக ஆடிய வீரர், வீராங்கனையருக்கு பரிசாக வழங்கி இருக்கிறோம். தலைசிறந்த இரண்டு வீரர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு கார் பரிசளித்திருக்கிறோம்.
இதெல்லாம் அவர்களுக்கு ஊக்கத்தை கொடுக்கிறது. சாதிப்பதற்கான தெம்பை கொடுக்கிறது. உபகரணங்களை இலவசமாக கொடுத்து வருகிறோம். அவர்களுக்கு மெடிக்கல் இன்சூரன்ஸ் ஏற்பாடு செய்து கொடுக்கப் போகிறோம்.
இந்தியாவில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் உயர்தர வசதிகளுடன் கூடிய மைதானங்கள் உள்ளன.
அவர்களுடன் இணைந்து இந்தியா முழுதும் இருந்து 60 வீரர், வீராங்கனையரை தேர்ந்தெடுத்து, அவர்களின் 12 முதல் 23 வயது வரையிலான அத்தனை செலவுகளையும் ஏற்று, உலகத்தரத்திலான பயிற்சிகளை அளித்து கொண்டிருக்கிறோம்.
இன்னும் பல திட்டங்கள் இருக்கின்றன. விரைவிலேயே அவற்றுக்கும் செயல் வடிவம் கொடுப்போம்.
விளையாட்டு வீரர், வீராங்கனையர் அரசுப் பணி பெறுவதைத் தான், முன்பு தங்களின் லட்சியமாக கொண்டிருப்பர். இப்போது, அரசுப் பணிகள் குறைந்து விட்டன.
தமிழகத்திலேயே கடந்த பல ஆண்டுகளாக வீரர், வீராங்கனையருக்கு அரசுப் பணி கொடுப்பதில் சிக்கல் இருக்கிறது.
அப்படியிருக்க, அதை மட்டுமே நம்பியிருக்க முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்புடன் இதே மாதிரியான லீக் போட்டிகளில் வீரர், வீராங்கனையர் ஆடும் போது நல்ல தொகையை வருமானமாக ஈட்ட முடியும்.
ஒவ்வொரு விளையாட்டுக்குமே குறைந்தபட்சமாக 10 - 15 உலகத் தரத்திலான பயிற்சி மையங்கள் இந்தியாவில் அமைந்தால், நம் வெற்றி பெரிதாக இருக்கும்.
பதக்கப் பட்டியலில் இந்தியாவின் பாய்ச்சலும் விஸ்வரூபமாக இருக்கும். அது, விரைவிலேயே நடக்க வேண்டும்.

