PUBLISHED ON : செப் 09, 2024 12:00 AM

'திருச்சி - மதுரை பைபாசில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனியில் இயங்கும், 'தட்சணா பிசியோதெரபி சென்டர்' உரிமையாளர் புவனேஸ்வரி:
சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விளானுார் என்ற குக்கிராமம். பிளஸ் 2 முடித்த போது, சென்னையில் உள்ள ஒரு கல்லுாரி ஒன்றில், 'பிசியோதெரபி'யில் சேர்ந்தேன்.
படிப்பை முடித்து, தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வுக்கு சென்னையில் இயங்கி வந்த ஒரு என்.ஜி.ஓ.,வில், அப்பெண்களுக்கு பிசியோதெரபி கொடுக்கும் பணியில் சேர்ந்தேன்.
நெகிழ்ச்சியான அந்த பணியை நான் முழு ஈடுபாட்டுடன் செய்ய, அந்த என்.ஜி.ஓ., நிர்வாகம் இரண்டு ஆண்டுகள் என்னை தைவான் நாட்டிற்கு அனுப்பி, தீக்காயம் பட்டவர்களுக்கான மறுவாழ்வு கொடுக்கும் பிசியோதெரபி பயிற்சிகளை கற்று வரும் வாய்ப்பை வழங்கியது.
என் திருமணம், காதல் திருமணம். பல எதிர்ப்புகளை மீறி காதல் திருமணம் செய்து கொண்டோம். சொந்தமாக ஒரு பிசியோதெரபி கிளினிக் துவங்கினால் என்ன என்று தோன்றியது.
ஆனால் கையில் பணமும் இல்லை; உதவ ஆளும் இல்லை. அப்போது தான் மாவட்ட தொழில் மையம் வாயிலாக மானியத்துடன் லோன் பெற முடியும் என்பது தெரிந்தது.
அதன்பின், திருச்சி மாவட்ட தொழில் மையத்துக்கு மூன்று மாதங்கள் அலைந்து, 25 சதவீத மானியத்துடன், 3 லட்சம் ரூபாய் லோன் பெற்றேன்.
கூடவே வழங்கப்பட்ட ஒரு வார பயிற்சிக்கு என் குழந்தையுடன் சென்றேன். கிடைத்த லோனில், 'தட்சணா பிசியோதெரபி' என்ற பெயரில், 2018ல் கிளினிக்கை துவக்கினேன்.
இங்கு வருவோர், என் சிகிச்சை குறித்து மற்றவர்களிடம் நல்ல விதமாக கூற, ஆறு மாதங்களில், இந்த பகுதியில் உள்ள, வி.ஐ.பி.,க்கள் உட்பட மாதம் 400 பேர் வரும் அளவுக்கு வளர்ந்தது என் கிளினிக்.
கனடாவில் இருந்து எனக்கு ஒரு, 'ஜாப் ஆபர்' வந்தது. ஆனால், பணியாளராக இருக்கும் மனநிலையில் இருந்து என்னை நாம் எப்போதோ விடுவித்துக் கொண்டு விட்டதால், அதை நிராகரித்து விட்டேன்.
இப்போது மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' எடுக்க முடிகிறது. என் கிளினிக்கை இன்னும் பெரிதாக்க வேண்டும். இன்னுமொரு கிளினிக்கை திறக்கும் முயற்சியிலும் இருக்கிறேன்.
படித்த படிப்புக்கு வேலைக்கு போகாமல், அந்த படிப்பு சம்பந்தப்பட்ட துறையில் நாம் ஒரு தொழில்முனைவோராக ஆவதற்கு வழிகள் என்னவென்று இதுவரை நீங்கள் யோசிக்காமல் இருந்திருக்கலாம்.
இப்போது யோசித்துப் பார்க்கலாமே... அரசு வழங்கும் கடனுதவிகளை பெற்று, திறம்பட நிர்வகித்து, திருப்தியாக வருமானம் பார்க்கலாம்!