/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இந்த பிசினஸ் தந்த வருமானம் ரூ.30 லட்சம்!
/
இந்த பிசினஸ் தந்த வருமானம் ரூ.30 லட்சம்!
PUBLISHED ON : ஆக 25, 2024 12:00 AM

'கூண்டு இல்லை; கயிறு இல்லை' என்ற நடைமுறையில் நாய்களுக்கான திறந்தவெளி விடுதியை நடத்தி, மாதம் 2 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வரும், சேலம் மாவட்டம் சின்ன திருப்பதியை சேர்ந்த ஷிப்னாஸ்:
என் சொந்த ஊரு குன்னுார். சிறு வயதில் எனக்கு நாய்கள் எனில் பயம். மேலும், எங்கள் முஸ்லிம் மதத்தை பொறுத்தவரை நாய்களை வளர்க்க கூடாது, தொடக்கூடாது என்று வீட்டில் சொல்வர். ஆனால், பள்ளியில் நாய்க்குட்டிகளை பார்த்த போது, அதை துாக்கி கொஞ்ச ஆசை வந்தது.
கல்லுாரி படிப்பை முடித்த போது முதன்முதலாக ஒரு நாய்க்குட்டியை வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். அதன்பின் எனக்கு திருமணமாகி, கணவரின் ஊரான சேலத்தில் வாழ்க்கை ஆரம்பித்தது. அப்போது கோல்டன் ரெட்ரீவர் நாய்க்குட்டி, எனக்கு பரிசாக கிடைத்தது. ஆசையாக வளர்த்தேன்.
வெளியே போகும் போது அதையும் அழைத்துச் செல்வோம். ஆனால், அப்படி கூட்டிட்டு போக முடியாதவர்கள் தங்களோட பெட் நாயை விட்டுட்டு போக ஒரு, 'டாக் போர்டிங்' ஆரம்பித்தால் என்ன என்று தோன்றியது. மேலும், இங்கு அதுபோல் நிறைய டாக் போர்டிங்குகள் இருந்தன.
அதிலிருந்து மாறுபட்டு, என்ன ஸ்பெஷலாக கொடுக்கலாம் என்று யோசித்த போதுதான், கட்டி போடாமல், திறந்தவெளியில் பராமரிக்கிற, 'ஓப்பன் டாக் போர்டிங்' யோசனை வந்தது.
முதலில் சிறிய அளவில் தான் பிசினஸ் ஆரம்பித்தோம். எங்களிடம் விட்டு செல்லும் செல்ல பிராணிகளை, அவங்க உரிமையாளர்கள் எப்படி பார்த்துக் கொள்வரோ, அதேபோன்று பாரமரித்தோம். அது, எங்களுக்கு நிறைய வாடிக்கையாளர்களை கொண்டு வந்து சேர்த்தது.
தற்போது குரூமிங், டிரெய்னிங் போன்ற சர்வீஸ்களையும் கொடுக்கிறோம். அதற்காக ஒரு கட்டடமும் கட்டி வருகிறோம். கூடவே, செல்ல பிராணிகளுக்கு ஒரு நீச்சல் குளமும் கட்டி வருகிறோம்.
தொழிலில் நிறைய சவால்களும் உண்டு. செல்லப் பிராணியாக இருந்தாலும், சிலர் தடுப்பூசி போடாமல் வளர்த்திருப்பர். சில நாய்கள் ரொம்ப ஆக்ரோஷமாக இருக்கும். ஆனால், உரிமையாளர்கள் அது குறித்து எதுவும் சொல்லாமல், விட்டுட்டு போயிருப்பர்.
சில நேரங்களில் நாய்கள் கடித்து விடும். இத்தனையும் தாண்டி தான் இந்த பிசினஸ் செய்ய வேண்டும். ஆனாலும் மனதிற்கு பிடித்து செய்கிறேன். இதை விட வேறு என்ன வேண்டும்?
ஆரம்பத்தில் முதலீடு என்று பெரிதாக பண்ணலை. தொழிலுக்கான பதிவை செஞ்சேன். குரூமிங், டிரெய்னிங் கோர்ஸ்களை முடித்தேன். தற்போது, நாங்கள் கட்டிட்டு வர்ற கட்டடத்துக்கு இதுவரை 30 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. அது, இந்த பிசினஸ் கொடுத்த வருமானம் தான். மாதம் 2 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
************
ஓய்வுக்காலத்தை பயனுள்ளதாக ஆக்கியுள்ளது இந்த பண்ணை!
இயற்கை விவசாயத்துக்கான இடுபொருட்களை, 'பயோ டைஜஸ்டர்' என்ற தொட்டி வாயிலாக தயாரித்து வரும், கிருஷ்ணகிரி மாவட்டம், மட்டமத்திகெரே கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிபதி:
ஏழடுக்கு முறையில் பல பயிர்கள் சாகுபடி செய்கிறோம். ஒவ்வொரு அடுக்குக்கும் இடைவெளி
விட்டுருக்கோம். மழைநீரை சேகரிக்கிறதுக்காகவும், பயிர்களின் வேர்களுக்கு காற்றோட்டம் ஏற்படுத்துறதுக்காகவும் அடுக்குகளுக்கு இடையில் 1 அடி அகலம், 2 அடி ஆழம் கொண்ட நீளமான குழிகள் எடுத்து உள்ளோம்.
பழ மரங்களுக்கு இடையில் மஞ்சள், காய்கறிகள் போன்ற பயிர்கள் சாகுபடி செய்கிறோம். சொட்டுநீர் பாசனம் தான் அமைத்து உள்ளோம். இயற்கை விவசாயத்துக்கு தேவையான நல்ல வீரியமான பல பயன் கொண்ட கரைசல்களை தனித்தனியாக கொடுப்பது தான் வழக்கம்.
ஆனால், அதற்கான வேலைகளை மிச்சப்படுத்தும் விதமாக பலவித சத்துக்கள் கொண்ட கரைசலை, எளிமையாக தயார் செய்றதுக்காகவே, 'பயோ டைஜஸ்டர்' என்ற அமைப்பை
ஏற்படுத்தி உள்ளோம்.
இதில் தயார் செய்யப்படும் கரைசலை தான் எல்லா பயிர்களுக்கும் கொடுக்கிறோம். 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டியை ஒருமுறை அமைத்து விட்டால் போதும்... பல
ஆண்டுகளுக்கு பலன் கொடுக்கும். அதிக அடர்த்தி கொண்ட பாலித்தீன் வாயிலாக செய்யப்பட்ட தொட்டி இது. இதற்கு பக்கத்தில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டிரம் அமைக்க வேண்டும். டிரம்முக்கும், தொட்டிக்கும் குழாய் இணைப்பு ஏற்படுத்த வேண்டும்.
இந்த தொட்டியை திறந்தவெளியிலும் வைக்கலாம். வெயில் பட்டாலும் பிரச்னையில்லை. ஆனாலும், பாதுகாப்பு கருதி நிழல் வலைகளை போர்த்தி விட்டுள்ளோம். அதுபோல் தரையிலும் வைக்கலாம்.
அதிக அடர்த்தி கொண்ட பாலித்தீன் தொட்டி என்பதால், எளிதில் கிழியாது. எதிர்பாராதவிதமாக லேசான கிழிசல் ஏற்பட்டாலும், பஞ்சர் ஓட்டுவது போல் ஓட்டி, சரி செய்துடலாம். முறையாக பராமரித்தால் 10 ஆண்டுகளுக்கு தாராளமாக தாங்கும்.
எங்களிடம் நாட்டு மாடுகள் ஐந்து உள்ளன. இடுபொருட்கள் தயாரிக்க, சாணம், சிறுநீர், மோர் உள்ளிட்ட பொருட்களை வெளியில் விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை.
அரிசி, வெல்லம் போன்ற பொருட்களை மட்டும் வெளியில் இருந்து வாங்கிக் கொள்கிறோம். ரம்புட்டான், மங்குஸ்தான், லகான், அபியூ, ஜபாட்டிகா, அவகேடோ, பிரேசில் கிரேப், கேரளா நட்ஸ் என பல வித பழப்பயிர்களும், கருமஞ்சள், முருங்கை, ரோஜா, வெட்டிவேர் பயிர்களையும் விளைவிக்கிறோம்.
இங்கு விளையும் பழங்கள், காய்கறிகளை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விற்கிறோம். என் ஓய்வுக் காலத்தை
பயனுள்ளதாக ஆக்குவதற்கு இந்த பண்ணை பெரிய அளவில் கை கொடுத்துட்டு இருக்கு.தொடர்புக்கு: 80734 20855