/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தமிழால் வாழ்ந்தோம் தமிழுக்காக வாழ்ந்தோம் என்பதே பெருமை!
/
தமிழால் வாழ்ந்தோம் தமிழுக்காக வாழ்ந்தோம் என்பதே பெருமை!
தமிழால் வாழ்ந்தோம் தமிழுக்காக வாழ்ந்தோம் என்பதே பெருமை!
தமிழால் வாழ்ந்தோம் தமிழுக்காக வாழ்ந்தோம் என்பதே பெருமை!
PUBLISHED ON : மார் 26, 2024 12:00 AM

'நல்லாசிரியர் விருது, நற்றமிழ் பாவலர் விருது, தமிழ்ச்செம்மல்' என, தமிழக அரசிடமிருந்து மூன்று விருதுகளை பெற்று, அசுர சாதனை படைத்துள்ள, வாலாஜாபேட்டையை சேர்ந்த, அரசு பள்ளி ஆசிரியை தமிழ்ச்செல்வி: நான் அறிவியல் ஆசிரியை. உயிரியல், உளவியல், ஆங்கிலம் என மூன்று முதுகலைகளையும், இரண்டு முனைவர் பட்டங்களையும் பெற்றிருக்கிறேன்.
அந்த பெருமை, என் அம்மா, தமிழ் ஆசிரியை சுசிலா பெருமாளையே சேரும். 'வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்க வேண்டும்' என்பது போல், நீ படிப்பது எதுவாக இருந்தாலும், தமிழில் புலமை பெற வேண்டும் என்று எனக்கு சிறு வயதிலேயே வெண்சங்கு பாலாடையில் தமிழ்ப்பாலை ஊட்டியவர் அவர்.
அரசுப் பள்ளி மாணவ - மாணவியர் தேர்வில் மதிப்பெண் குறைந்து போனால், தற்கொலை செய்து கொள்ளும் வேதனை சம்பவங்களைத் தடுக்க, தேர்வுகளுக்கு முன் தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகளில் பேசுவதில் தான் எனக்கு பெருமகிழ்ச்சி.
விலங்கியல், உயிரியல் ஆசிரியையாக நான் பொறுப்பேற்ற பின், 12 ஆண்டுகளாக, 100 சதவீதம் தேர்ச்சியை கொடுத்திருப்பதுடன், பணிக்கு சேர்ந்த நாள் முதல், மருத்துவ விடுப்பு உட்பட எந்த விடுப்பையும் எடுக்காத ஆசிரியையாக பணியாற்றிஇருக்கிறேன்.
இதுபோல், இப்பகுதியில் இருக்கும் தோல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு, 'ஓட்டுப்பதிவு, சிக்கனம், மொபைல் போன் பயன்படுத்துதல், புகையிலை நமக்குப் பகையிலை, பாலியல் வன்கொடுமை, ஈவ்டீசிங்' உள்ளிட்ட செயல்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
என்னுடைய பள்ளி மாணவர்களை பல்வேறு விதங்களில் மேடை ஏற வைத்து விடுவேன். 1,330 திருக்குறள்களில், உதடு ஒட்டாத திருக்குறள்களை, 500 மாணவர்களை ஒப்பிக்க வைத்து, உலக சாதனை நிகழ்வில் பங்கேற்க வைத்து, கலெக்டர் வாயிலாக சான்றிதழ் பெற வைத்திருக்கிறேன்.
தமிழை வெறும் மொழியாக எண்ணாமல் உணர்வாக, உயிராக நினைத்து நான் ஆற்றிய தமிழ்ப்பணிகள், ஆசிரியர் பணியை அறப்பணியாக நினைத்து, பணியாற்றி வருவதால் தான், டாக்டர் ராதாகிருஷ்ணன், 'நல்லாசிரியர் விருது' அகரமுதலி இயக்குனரகம் அளித்த, 'நற்றமிழ் பாவலர் விருது' தமிழ் வளர்ச்சி துறையின், 'தமிழ்ச்செம்மல் விருது'களை வழங்கி, சிறப்பித்துள்ளனர்.
'திருச்சி உலக தமிழ்ச் சங்கம்' சார்பில், பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ், ராணிப்பேட்டை மாவட்டம் சார்பில், 'ராஜ கலைஞன்' விருதை எனக்கு வழங்கி, கவுரவித்தார்.
'தமிழால் வாழ்ந்தோம்... தமிழுக்காக வாழ்ந்தோம்!' என்பதே தமிழச்சியான எனக்கு கிடைத்த பெருமை.

