/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நெசவாளர்களின் கதைகளையும் பதிவு செய்யணும்!
/
நெசவாளர்களின் கதைகளையும் பதிவு செய்யணும்!
PUBLISHED ON : ஏப் 20, 2024 12:00 AM

புடவை பிசினசில் புதுமை படைக்கும், சென்னையை அடுத்த கோவூரைச் சேர்ந்த சண்முகப்ரியா:
ஒரு பெண்ணின் வாழ்க்கை எந்த திசையில், எப்படி பயணிக்கப் போகிறது என்பதை பெரும்பாலும் அவளது திருமண வாழ்க்கையே தீர்மானிக்கிறது.என் விஷயத்திலும் அப்படியே நடந்தது. மாமியார் இறந்ததும், என் குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக வேலையை விட வேண்டியிருந்தது.அதே சமயம், பொருளாதார ரீதியாக நான் யாரையும் சார்ந்திருக்கக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தேன். இறப்புக்கு முன், என் மாமியார் துணி வியாபாரம் செய்து கொண்டிருந்தார்; அதையே நானும் தொடர நினைத்தேன்.
'யுனிக் திரெட் சாரீஸ்' என்ற பெயரில் பிசினசை துவங்கினேன். 'வாட்ஸாப்'பில் விற்பனை செய்தே நல்ல லாபம் பார்க்க முடிந்தது.
பிசினஸ் துவங்கி, 10 ஆண்டுகள் ஆன நிலையில், எனக்கு ஒரு மாறுதலும், புதுமையும் தேவைப்பட்டது. என்னுடன் பயணித்த நெசவாளருக்கே பிசினசை விற்றுவிட்டு, 'சாரீஸ் ஸ்டோரீஸ் வித் சண்முகப்ரியா' என்ற பெயரில் புதிய பயணத்தை துவங்கினேன்.
இந்த கான்செப்ட்டில், ஒவ்வொரு ரக புடவைக்கும் பின்னால் ஒளிந்திருக்கும் கதைகளை தேடிச் சென்று தெரிந்து, கதைகளோடு புடவைகளையும் விற்பது என யோசித்தேன்.
என் வாடிக்கையாளர்கள் புடவைகளை வெறும் உடையாக நினைத்து வாங்காமல், அதில் மறைந்திருக்கும் உணர்வுகளை, கதைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன். காளஹஸ்தி, மங்களகிரி, வெங்கடகிரி என நான் பயணித்த ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கதை இருந்தது.
உதாரணத்துக்கு, மேற்கு வங்கத்தின் சாந்திபூர் என்ற ஊரில், ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் புடவைகளுக்கான சந்தை நடைபெறும். நள்ளிரவு 12:00 மணிக்கு துவங்கி, அடுத்த நாள் பகல் 1:00 மணி வரை நடைபெறும்.
கர்நாடகாவில் தயாராகும், 'பட்டேடா ஆன்ச்சு' என்ற புடவையின் கதை மிகவும் சுவாரசியமானது. அந்த புடவை, மாமியார் மருமகளுக்கு கொடுப்பது. இந்த வழக்கம், அங்கே தலைமுறைகள் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நாம் பருவநிலைக்கேற்ப உடைகளை உடுத்துவதை போல, காலநிலைகளுக்கு ஏற்ப தான் நெசவாளர்கள் தறி நெய்வராம்.
ஒரே மாதிரியான தறி நெய்யும் முறையை பின்பற்றினாலும், அது துணியாக இறுதி வடிவம் பெறும்போது பருவநிலை மற்றும் அந்த ஊரின் தண்ணீரின் தன்மைக்கேற்ப வித்தியாசப்படும் என்பதை ஒரு நெசவாளர் சொல்ல கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது.
இந்தியாவில் இருக்கிற அனைத்து மாநிலங்களுக்கும் சென்று, அங்கு நெய்யப்படும் புடவைகளை பற்றியும், அவற்றை சுற்றியிருக்கும் கதைகளையும், நெசவாளர்களின் கதைகளையும் பதிவு செய்ய வேண்டும். அதையெல்லாம் ஒரு தொகுப்பாக எழுத வேண்டும்.

