/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
என்னிடம் இல்லாத புத்தகங்களே கிடையாது!
/
என்னிடம் இல்லாத புத்தகங்களே கிடையாது!
PUBLISHED ON : பிப் 23, 2025 12:00 AM

பல்வேறு மொழிகளில் பாட நுால்கள், இலக்கியங்கள் உள்ளிட்ட மிக பழமையான மருத்துவ நுால்களை, சென்னை கே.கே.நகர் சிக்னல் பகுதியில் விற்பனை செய்து வரும், 'நுால்' பாண்டியன்:
என் அப்பா, புத்தகங்களை மிகவும் விரும்பி படிப்பார். அவர் ஒரு புத்தகப் புழு. நான் 10ம் வகுப்பு தான் படித்திருக்கிறேன். ஆரம்பத்தில் சென்னை மயிலாப்பூரில் குடியிருந்தோம். பள்ளியில் படிக்கும்போதே காலையில் வீடுகளுக்கு பேப்பர் போடுவேன். 1980களில், கே.கே.நகருக்கு பேப்பர் போட யாரும் போக மாட்டார்கள்; கடுமையான நாய் தொல்லை.
நான் அந்த பகுதியை கேட்டு வாங்கி போடுவேன். ஒரு செட், 60 பேப்பர். ஒரு நாளைக்கு ஆறு செட் போடுவேன். பேப்பர் போட்ட வீடுகளில் பழக்கம் பிடித்து, போட்ட பேப்பரை எல்லாம் திரும்ப வாங்குவேன்.
அப்படி பழைய பேப்பரை வாங்கும்போது, அவர்களிடம் இருந்த புத்தகங்களையும் சேர்த்து கொடுப்பர். அப்படி சேர்ந்த புத்தகங்களே, 2,000த்திற்கும் மேல்!
இதையே ஏன் விற்பனை செய்யக்கூடாது என தோன்றியதால், பிளாட்பாரத்தில் அடுக்கி வைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தேன்; பலர் தேடி வர ஆரம்பித்தனர். சிலர் என்னிடம் இல்லாத புத்தகங்களை கேட்டனர். அவர்களுக்கு தேடி வாங்கி கொடுக்க ஆரம்பித்தேன்.
அப்படித்தான் சென்னையில் இருக்கிற பழைய புத்தகங்கள் ஹோல்சேல் மார்க்கெட் உடன் தொடர்பு கிடைத்தது. அதனால் வாடிக்கையாளர்கள் நிறைய ஆகிட்டாங்க.
வீட்டிலிருந்து காலை 7:00 மணிக்கு கிளம்புவேன்; வீடு திரும்ப இரவு 11:00 மணி ஆகிவிடும். என்னிடம் இல்லாத புத்தகங்களே கிடையாது. பழைய புத்தகம் எனில் குப்பை என, பலர் நினைக்கின்றனர். இதற்கு பின்னால் என் வாழ்க்கையே இருக்கு.
இதையெல்லாம் தேடிப்பிடித்து வாங்குவது, பாதுகாப்பது என்பது எல்லாம் சாதாரண வேலையா? குவியலாக இருக்கும் இதற்குள் எவ்வளவு பொக்கிஷங்கள் இருக்கு தெரியுமா?
வெளியூரில் இருந்து கேட்டால், கூரியரில் அனுப்பி வைப்பேன். பாதி வாழ்நாள் இந்த புத்தகங்களுக்குள்ளே போயிடுச்சு.
நான் இப்படியொரு வேலையை செய்ய, எனக்கு என் மனைவி தான் முழு ஆதரவு தருகிறார். கட்டுக்கட்டாக வந்து சேரும் புத்தகங்களை இரவு, பகல் பாராமல் பிரித்து, பிரிவு வாரியாக அடுக்குவது அவர் தான். என் பிள்ளைகளுக்கும் இதில் ஆர்வம் இருக்கிறது. சிறிது காலம் கழித்து, அவர்கள் கையில் இதை ஒப்படைத்து விடலாம் என்று நினைக்கிறேன்.
தொடர்புக்கு: 94444 29649.
*************
12 மணி நேரம் வேலை செய்ய தயங்கியதே இல்லை!
மிகவும் அரிதாக கிடைக்கும், 'ஸீ கிராஸ்' எனப்படும் புற்களை கொண்டு, கைப்பைகள், கூடைகள் உட்பட பல கைவினை பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வரும், சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த நிஷா துரை:
மிக எளிமையான குடும்பத்தில் பிறந்தேன். சிறு வயது முதலே, ஓவியத்தின் மீதும், கைவினைப் பொருட்கள் மீதும் எனக்கு ஆர்வம் அதிகம்.
ஒருசமயம் கணவருடன் அசாம் சென்றிருந்தேன். அங்கு சில பெண்கள், ஸீ கிராஸ் என்ற ஒரு வகை புற்களால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதை பார்த்தேன்.
அவை மிகவும் அழகாக இருந்ததுடன், நீடித்து உழைக்கக் கூடியதாகவும் இருந்தன. நானும் பை ஒன்றை வாங்கி வந்தேன். பலரும் என்னிடம், 'இந்த பை ரொம்ப அழகா இருக்கே... எங்கே வாங்குனீங்க... இங்கு கிடைக்குமா' என்று கேட்டு
நச்சரித்து விட்டனர்.
அப்போது தான், நாமே இவற்றை தயாரித்தால் என்ன என்று முடிவு செய்து, இந்த பைகளை தயாரிப்பதற்கு மூலப்பொருளான ஸீ கிராஸ் புற்களை வளர்க்கும் முறைகளையும், அவற்றில் இருந்து பைகள், கூடைகள் என பலவற்றை தயாரிக்கும் முறைகளையும் கற்றுக் கொண்டேன்.
எனக்கு இந்த தொழிலில் முன் அனுபவம் கிடையாது. முறையாக கற்று, இந்த தொழிலில் ஈடுபட ஆரம்பித்து, 10 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது, இந்த புல்லில் இருந்து, 50 வகை பொருட்களை தயாரிக்கிறேன்.
பூஜை பொருட்களை கொண்டு செல்ல, மளிகை பொருட்கள் வாங்கி வர, மணி பர்ஸ் போல் உபயோகிக்க, சுற்றுலா செல்லும் போது எடுத்துச் செல்ல என, இந்த பைகளின் பயன்பாடுகள் ஏராளம்.
எங்களுடைய தயாரிப்புகள் அனைத்துமே கைகளாலேயே உருவாக்கப்படுகின்றன. எடை குறைவானவை; எளிதில் எடுத்துச்
செல்லக்கூடியவை.ஈரத்துணியால் துடைத்து, சுலபமாக சுத்தம் செய்து விடலாம். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கக் கூடியவை. எளிதில் மட்கிப் போகும் தன்மை கொண்டுள்ளதால், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காது.
ஸீ கிராஸ் புல் வகை எளிதாக கிடைக்காது. இதை உற்பத்தி செய்ய ஆறு மாதங்கள் தேவை. இது முழுக்க முழுக்க தண்ணீரில் வளரக்கூடியது. தண்ணீர் பற்றாக்குறை இருந்தால் உற்பத்தி நின்று விடும். எனவே, அவை வளரும் இடத்தில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்வது சவாலான விஷயம்.
இந்த சவால்களை எல்லாம் சமாளிக்க, ஓராண்டுக்கு தேவையான மூலப்பொருளை முன்கூட்டியே சேகரித்து பதப்படுத்தி வைத்துக் கொள்வோம். தரமான பொருட்களை தயாரிப்பதும், வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசுவதும் தான் என் வெற்றிக்கு காரணம். தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய நானும், எங்கள் பணியாளர்களும் எப்போதும் தயங்கியதே இல்லை.
தொடர்புக்கு:
97153 33777.