/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
விவசாய வேலைக்கு பணியாளர் கிடைப்பதில்லை!
/
விவசாய வேலைக்கு பணியாளர் கிடைப்பதில்லை!
PUBLISHED ON : மே 14, 2024 12:00 AM

'சாப்ட்வேர்' கம்பெனி யில் டிசைனராக பணிபுரிந்தபடியே, இயற்கை விவசாயத்தில் சாதிக்கும், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சாமிரெட்டி கண்டிகையை சேர்ந்த முத்து:
தமிழகத்தில், பாரம்பரிய நெல் விதைப்பை கையாளும் லட்சக்கணக்கான விவசாயிகளில் நானும் ஒருவன். விவசாயத்துக்கு என்று நேரம் ஒதுக்கி முழு ஈடுபாட்டுடன் செய்கிறேன்.
இன்னொரு பக்கம், சாப்ட்வேர் கம்பெனியில் டிசைனராக இருக்கிறேன். இது பிழைப்புக்காக; விவசாயம் விருப்புக்காக என, இரண்டையும் நல்ல புரிதலோடு பிரித்துக் கொண்டு செயல்படுகிறேன்.
வயலில் இருக்கும்போது என்னை நீங்கள் சாப்ட்வேர் ஆளாக பார்க்க முடியாது. அப்படி தெரியவும் மாட்டேன். அலுவலகம் போய் விட்டால், விவசாயி முத்துவை நீங்கள் பார்க்க முடியாது.
துவக்க நாட்களில் எல்லாரையும் போல், ரசாயன உரங்களை மண்ணில் கொட்டி, களைக்கொல்லி மருந்துகளையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி தான் நானும் விவசாயம் மேற்கொண்டு வந்தேன்.
பின், சோதனை முயற்சியாக மரபார்ந்த, பாரம்பரிய வேளாண்மை முறையில் எந்த ரசாயனத்தையும் பயன்படுத்தாமல், காலம் காலமாக நம் பாட்டனும் பூட்டனும் விதைத்த நெல்மணிகளை வைரமணிகளாக எண்ணி விதைத்து பார்த்தேன்.
நல்ல வெற்றி கிடைத்தது. சாமிரெட்டி கண்டிகை முழுதும் நீர்வழித்தடம் அதிகமுள்ள பகுதியாகும்.
எள்ளுக்கும், நெல்லுக்கும் எப்போதும் நீர் தேவையாகவே இருக்கும். அதற்கேற்றாற்போல இந்த பகுதியின் நீர்வளமும் உதவிகரமாக இருக்கிறது.
ஆனால், நெல்லையும், எள்ளையும் தவிர்த்து மற்ற பயிர்களுக்கு நிலத்தில் தண்ணீர் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் தான் மற்ற பயிர்களை நான் விளைவிப்பதில்லை.
உழுவதற்கு டிராக்டர் மற்றும் களை எடுக்க, நடவு நட, அறுவடை செய்ய இயந்திரங்களை தான் பயன்படுத்துகிறேன். 'டிராக்டர் சாணி போடாதே...' என்கிற ஜே.சி.குமரப்பாவின் பசுமை மொழியை நான் மறக்கவில்லை.
இயந்திரங்களை நான் பயன்படுத்த போதிய காரணமிருக்கிறது. முதல் விஷயம் விவசாயத்துக்கென வயலில் இறங்கி வேலை செய்ய எங்கள் பகுதியில் ஆட்கள் கிடைப்பதில்லை. அதனால் தான் இயந்திரங்களின் பக்கம் சாய வேண்டியிருக்கிறது.
புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் வேண்டுமானால் நஷ்டம் ஏற்படலாம். என்னை பொறுத்தவரையில் பாரம்பரிய நெல் உற்பத்தி லாபகரமாக தான் இருக்கிறது.
உடல் ஆரோக்கியத்தை விரும்புகிற எவரும், 'ஹைபிரிட்' முறையில் உருவான அரிசி, தானியங்கள், காய், கனிகளை திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்.

