PUBLISHED ON : ஜூலை 28, 2024 12:00 AM

மிகுந்த மனநிறைவு தரும் பாரம்பரிய நெல் சாகுபடி!
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சிவாயம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி மணிவண்ணன்:
நாங்கள் விவசாய குடும்பம். அப்பாவும், சகோதரர்களும் தான் விவசாயத்தை கவனிச்சுட்டு இருந்தாங்க. பி.காம்., படிச்சுட்டு, ராணுவத்தில் வேலைக்கு சேர முயற்சி செஞ்சுட்டு இருந்தேன். அது கிடைக்காமல் போனதால், சொந்த தொழில் செய்ய முடிவெடுத்து, பொக்லைன் இயந்திரம் வாங்கி, வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டேன். அதில் நல்ல வருமானம் கிடைத்தது.
அந்த தொழிலில் படிப்படியாக வளர்ச்சி அடைந்து, நான்கு பொக்லைன் இயந்திரங்கள் வாங்கி வாடகைக்கு விட்டேன். நாளடைவில் அந்த தொழிலில் போட்டிகள் அதிகமாகவே, 2019-ல் விவசாயத்தை கவனிக்க துவங்கினேன். எங்க குடும்பத்துக்கு மொத்தம், 15 ஏக்கர் நிலம் இருக்கு. 2020-ல், சம்பா பட்டத்தில் 3 ஏக்கரில் பாரம்பரிய நெல் ரகங்களை, இயற்கை முறையில் சாகுபடி செய்ய துவங்கினேன்.
இந்த ஆண்டு சம்பா பட்டத்தில், 3 ஏக்கரில் தங்கச்சம்பா, ஆத்துார் கிச்சலி சம்பா, மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட நான்கு ரகங்கள் சாகுபடி செய்தேன். கொஞ்சம் கூட பூச்சி, நோய் தாக்குதல்களே இல்லை. மொத்தம், 93 மூட்டை மகசூல் கிடைத்தது.
சிதம்பரம் வண்டல் மண் இயற்கை விவசாயிகள் குழுவை சேர்ந்த சுரேஷ் வாயிலாக, என்னோட நெல்லை விற்பனை செய்துட்டு இருக்கேன். ஒரு மூட்டைக்கு குறைந்தபட்சம் 1,600ல் இருந்து அதிகபட்சம், 2,200 ரூபாய் வரை கிடைக்கிறது. சராசரியாக ஒரு மூட்டைக்கு 1,800 ரூபாய் வீதம், 93 மூட்டை நெல்லுக்கும், 1 லட்சத்து 67,400 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
வைக்கோல் மதிப்பு, 9,000 ரூபாயை சேர்த்து கணக்கு பார்த்தோம்னா, 1 லட்சத்து, 76,400 ரூபாய் கிடைக்கும். இதில், 1 ஏக்கருக்கு, 25,000 ரூபாய் வீதம், 3 ஏக்கர் நெல் சாகுபடிக்கு, 75,000 ரூபாய் செலவு போக, மீதி 1,01,400 ரூபாய் லாபமா கிடைக்கும்.
பாரம்பரிய நெல் ரகங்களை பொறுத்தவரைக்கும் என் அனுபவத்தில், ஒரே ரகத்தை அதிக பரப்பில் சாகுபடி செய்றதை விட, பல ரகங்கள் சாகுபடி செய்றது தான் நல்லது. ஒரு ரகத்தில் மகசூல் குறைஞ்சாலும், இன்னொரு ரகத்தில் கூடுதல் மகசூல் கிடைச்சு, இழப்பை ஈடு செஞ்சுடலாம்.
சில ரகங்களுக்கு விலை குறைவாக கிடைச்சாலும், மற்ற ரகங்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும். அது மூலமாகவும் வருமானத்தை ஈடு செஞ்சுடலாம். இயற்கை விவசாயமும், பாரம்பரிய நெல் சாகுபடியும் எனக்கு மிகுந்த மனநிறைவை கொடுத்துட்டு இருக்கு.
தொடர்புக்கு - 88385 08754.
***
கடின உழைப்புடன் தொழில் குறித்த 'அப்டேட்'டும் இருக்கணும்!
மாதம், 10 லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்யும், 'மைக்கில்ஸ்' ஐஸ்கிரீம் உரிமையாளரான திருச்சியைச் சேர்ந்த ஜூலியட் வளர்மதி:அப்பா சென்னையில் ஐஸ்கிரீம் கடை வைத்திருந்தார். அதனால் ஐஸ்கிரீம் பற்றிய அடிப்படை விஷயங்கள் தெரியும்.
'இன்ட்ஸ்ரூமென்டேஷன் டெக்னாலஜி'யில் டிப்ளமா முடித்தேன். பின் திருச்சி ஆர்.இ.சி., கல்லுாரியில் பி.இ., முதல் ஆண்டு படித்த போது எனக்கு திருமணமானது.கணவர் மைக்கேல்ராஜ் குடும்பம், திருச்சியில் மைக்கில்ஸ் ஐஸ்கிரீம் உரிமையாளர்கள். பல ஆண்டுகளாக ஐஸ்கிரீம் உற்பத்தியும், விற்பனையும் செய்து வந்த குடும்பம். திருமணமான ஓராண்டுக்கு பின் கணவரிடம், 'நாமும் சொந்தமாக ஒரு ஐஸ்கிரீம் கடை வைப்போமே' என கேட்க, 'தொழில் நஷ்டமாகி, என்னிடம் பணம் கேட்டு வரக்கூடாது' என கறாராக
மாமனார் கூறி விட்டார்.ஆயினும் நம்பிக்கையில், 1993ல் தொழிலை ஆரம்பித்தோம். மைக்கில்ஸ் என்ற பெயரில் வெனிலா, சாக்லேட், ப்ரூட் சாலட்னு மூன்று ப்ளேவரில் ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்தோம்.
ஏற்கனவே மக்களுக்கு அறிமுகமான பெயர், நாங்கள் கொடுத்த தரம், சுவை என ஒரு மாதத்திலேயே தொழில், 'பிக்கப்' ஆனது. ஒரு கட்டத்தில் வாடிக்கையாளர்கள் அதிகமாகவே, ஐஸ்கிரீம் வகைகளை அதிகப்படுத்தி மூன்று கடைகளாக நடத்தினோம். நல்ல சேல்ஸ்.
மூன்று ஊழியர்களுடன் ஆரம்பித்த இத்தொழிலில் தற்போது 15 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அனைவரும் பெண்களே.எங்கள் வளர்ச்சியை பார்த்த மாமனார், 'பரவாயில்லையே... இப்போது நான் உங்ககிட்ட பணம் கேட்டு வரலாம் என்ற
அளவுக்கு வளர்ந்திருக்கீங்களே'ன்னு பாராட்டினார்.
தொழில் விரிவடைந்ததால், ஐஸ்கிரீம் உற்பத்திக்கு பேக்டரி கட்ட, இயந்திரங்கள் வாங்க என் நகையை அடகு வைத்து, உற்பத்தியை துவக்கினோம். தற்போது பெரம்பலுார், காட்டூர் என இரண்டு இடங்களில் துவங்கியிருக்கிறோம். தமிழகம் முழுக்க ஆர்வம் உள்ளோருக்கு எங்கள் பிராண்டை பிரான்சைஸ் கொடுக்க நினைக்கிறோம்.
வழக்கமாக, ஒரு நாளில் 700 வாடிக்கையாளர்கள் வருவர். அதுவே விடுமுறை விசேஷ தினங்களில் 1,000 பேர் என தொழில் அருமையாக நடக்கிறது.எட்டு ரூபாய் துவங்கி, அதிகபட்சம் 15 ரூபாய் வரை தான் எங்கள் ஐஸ்கிரீம் விலை. இதனால், 20,000க்கும் மேற்பட்ட ரெகுலர் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
மாதம் 10 லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' அளவுக்கு வளர்ந்திருக்கோம். கடின உழைப்புடன், தொழில் குறித்த, 'அப்டேட்'டும் இருந்தால் நம் தொழிலில் நாம் தான் ராணி. அதற்கு நானே சாட்சி!
*********************