/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
எல்லாருக்கும் ஏற்றம் தரும் தொழில் இது!
/
எல்லாருக்கும் ஏற்றம் தரும் தொழில் இது!
PUBLISHED ON : ஜூலை 04, 2024 12:00 AM

'டிரான்ஸ்போர்ட் ஏஜென்சி' துறையில் அசத்தும் ஷோபனா நட்ராஜ்: பூர்வீகம் கோவை. எம்.இ., முடிச்சுட்டு, தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் புரொபசராக இருந்தேன். எங்கப்பா, கமர்ஷியல் பார்சல் சர்வீஸ் தொழில் பண்ணிட்டிருந்தார்.
பல்வேறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பொருட்களை, வாடிக்கையாளர்களிடம் நேரில் கொண்டு சென்று சேர்ப்பது தான் அவரோட வேலை.
திடீரென உடல்நிலை சரியில்லாமல் அப்பா இறந்து விட்டார். இதனால், மருத்துவ செலவு, தொழிலில் வர வேண்டிய, கொடுக்க வேண்டிய நிலுவை தொகை, குடும்ப செலவு, என 30 லட்சம் ரூபாய் கடன் இருந்தது.
அதனால், வீட்டில் ஒரே மகளான நான், கடனுக்கான பொறுப்பை ஏற்று வரவு, செலவையெல்லாம் சரி செய்து, அவரோட தொழிலை எடுத்து நடத்த முடிவெடுத்தேன்.
'டிரான்ஸ்போர்ட் தொழிலை ஆண்களால் தான் செய்ய முடியும்; உன்னால் முடியாது' என, பலரும் நெகட்டிவாகவோ பேசினர்.
'உன் விருப்பப்படி செய்' என அம்மாவும், கணவரும் சொல்லவே, களத்தில் இறங்கினேன். -தொழில் ரீதியான நட்பும், அனுபவமும் இல்லாததால், பலரும் எனக்கு ஆர்டர் தர முன்வரலை. எனக்கு ஆர்டர் கிடைக்காமலும் சில போட்டியாளர்கள் சூழ்ச்சி செய்தனர். எங்கப்பாவின் முந்தைய வாடிக்கையாளர் ஒருவர் மட்டும் தான் நம்பி ஆர்டர் கொடுத்தார்.
எங்கள் துறைக்கான முக்கிய வாடிக்கையாளர் உற்பத்தி நிறுவனங்களை அணுகினேன். சின்ன ஆர்டர்களில் துவங்கி, ஓராண்டுக்குள் இந்த தொழிலில் என்னை நிரூபித்தேன்.
அதுவரை செலவை கட்டுப்படுத்த, வீட்டில் இருந்தபடியே தான் தொழிலை நடத்தினேன். ஆர்டர் பிடிப்பதற்கு மட்டும் நேரில் சென்றேன். வேலையாட்களை பயன்படுத்தி, லோடு அனுப்புற ஏற்பாடுகளை போன் வாயிலாகவே செய்து முடித்தேன்.
பல மாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் படிப்படியாக அதிகரித்தன. உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்புகளை, அவர்கள் வாடிக்கையாளர்களின் இடத்துக்கு சென்று சேர்ப்பது தான் எங்கள் பொறுப்பு.
இந்த வகையில் டன் கணக்கிலான சரக்குகளை, 'டிரக், கன்டெய்னர், டிரெய்லர்' போன்ற கனரக வாகனங்களில் கொண்டு சேர்க்கிறோம்.
பேப்பர், பருத்தி, ஸ்டீல் பேப்ரிகேஷன், கால்நடை தீவனம், ஆட்டோமொபைல், உணவுக்கான எண்ணெய், மருந்து பொருட்கள், ஜவுளி உள்ளிட்ட சரக்குகள் என் நிறுவனத்தின் வாயிலாக இந்தியா முழுக்க டெலிவரி செய்யப்படுகின்றன. தனிநபர் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பொருட்களை வெளிநாடுகளுக்கும் விமானம் வாயிலாக அனுப்பி வைப்போம்.
இந்த துறையில், 90 சதவீதத்திற்கும் அதிகமாக ஆண்கள் தான் இருக்கின்றனர். அதனால், பாலின ரீதியிலான பாகுபாடுகள் முன்பெல்லாம் இருந்துச்சு.
அதெல்லாம் இப்போது கணிசமாக குறைந்துள்ளது. இந்த தொழிலுக்கான நடைமுறைகளை சரிவர செய்தால், எல்லாருக்குமே டிரான்ஸ்போர்ட் தொழில் ஏற்றத்தை கொடுக்கும்.