/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
திருநங்கையர் மீதான தவறான பார்வையை மாற்றும் கருவி நான்!
/
திருநங்கையர் மீதான தவறான பார்வையை மாற்றும் கருவி நான்!
திருநங்கையர் மீதான தவறான பார்வையை மாற்றும் கருவி நான்!
திருநங்கையர் மீதான தவறான பார்வையை மாற்றும் கருவி நான்!
PUBLISHED ON : மார் 24, 2024 12:00 AM

தெற்கு ரயில்வேயின் முதல் டிக்கெட் பரிசோதகர் என்ற சாதனையை படைத்திருக்கும் திருநங்கை சிந்து கணபதி:
சொந்த ஊர் நாகர்கோவில். அப்பா, ரயில்வே கேட் கீப்பராக இருந்தார். அப்பா உடல்நலக் குறைவால் இறந்து விட, நான் பிளஸ் 2 முடித்த பின், ரயில்வே துறையில் வாரிசு வேலை கிடைத்தது.
பள்ளியில் படித்தபோதே, என் உடலில் மாற்றங்கள் ஆரம்பமாகின. 18 வயது முதல் பணி காரணமாக வெளியூரில் தங்கியதால், மாற்றம் பற்றி குடும்பத்தினர் அதிகம் அறியவில்லை.
இந்த நிலையில் ரயில்வே தேர்வு எழுதி, சீனியர் எலக்ட்ரீஷியனாக பதவி உயர்வில், திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்தேன்.
இரண்டு ஆண்டுகளாக பணி செய்து கொண்டிருந்த போது அறுவை சிகிச்சை செய்து, முழுமையாக பெண்ணாக மாறுவதற்கான மன தீவிரம் அதிகமானது. அதனால், சென்னைக்கு சென்று சக திருநங்கையருடன் சேர்ந்தேன்.
அவர்களுடன் சேர்ந்து யாசகம் பெற்று என நாட்கள் திசை மாறின. அந்த பணத்தை சேர்த்து வைத்து பெங்களூரு சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். ஆனால், மீண்டும் யாசகம் பெற செல்லக்கூடாது என்று முடிவெடுத்தேன்.
மக்கள் என்னை ஒரு புழுவாக பார்த்ததை தாங்கிக் கொள்ள இயலவில்லை. எனவே, மீண்டும் ரயில்வே பணியில் சேர தீர்மானித்து, ரயில்வே உயரதிகாரிகளை சந்தித்து என் நிலையை விளக்கமாக கூறினேன்.
அவர்கள் ரயில்வே மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டு, 'டிரான்ஸ்ஜெண்டர்' என்று சான்றளித்து, மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டனர்.
குடும்பத்தினர், சக ஊழியர்கள் என அனைவரும் அப்படியே ஏற்றுக் கொண்டனர். மூன்றாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் வலது கையில் காயம் ஏற்படவே, தொழில்நுட்ப பணியில்லாத மாற்றுப்பணி வழங்கியது ரயில்வே நிர்வாகம்.
ஆனால், நான் மக்களுடன் தொடர்பில் இருக்கும்படியான டிக்கெட் பரிசோதகர் பணியில் இருக்க விரும்பினேன்.
அப்போது தான், திருநங்கையர் மீதுள்ள தவறான பார்வை மாற நான் ஒரு கருவியாக இருக்க இயலும் என்று நினைத்து, ரயில்வே தேர்வுக்கு தயாராகி, முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று, திண்டுக்கல்லில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.
ஒரு திருநங்கை தெற்கு ரயில்வேயில் முதல் டிக்கெட் பரிசோதகராக தேர்வான பெருமை கிடைத்ததில் என் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் மகிழ்ச்சி. திருநங்கை சமூகத்துக்கு நான் ஒரு உதாரணமாகி உள்ளதால், எனக்கு அதை விட மகிழ்ச்சி.
டிக்கெட் பரிசோதகர் பயிற்சிக்காக, திருச்சியில் விடுதியில் தங்கியிருந்த போது பயிற்சிக்காக வந்திருந்த பெண்கள் என்னை சக பெண்ணாக அரவணைத்தனர். எவ்வித வேறுபாட்டையும் நான் உணரவில்லை. இந்த மாற்றம் சமூகத்திலும் உருவாக வேண்டும்.
கிண்டல் செய்தோரும் மதிக்கிற நிலைக்கு வளர்ந்திருக்கோம்!
மொட்டாக இருக்கும்போதே பறித்து, முழுமையாக மலர்வதற்கு முன்பே விற்பனை செய்யப்படும் அலங்கார தேவைக்கான உயர் ரக பூக்கள் தான் கொய்மலர்கள். இதற்கான வர்த்தகத்தில் ஈடுபட்டு, ஆண்டுக்கு, 50 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டும், ஓசூரை சேர்ந்த திவ்யஸ்ரீ:
வளர்ந்ததெல்லாம் கர்நாடகாவில் தான். தாய்மொழி தெலுங்கு என்பதால், தமிழ் ஓரளவிற்கு தான் தெரியும். எங்கள் பண்ணையில் வேலை செய்யும் வடமாநிலத்தவரிடம் பேசும் அளவிற்கு ஹிந்தி தெரியும்.
சிறு வயதிலேயே திருமணமாகி விட்டது. 2016ல் பாகப்பிரிவினை நடந்து 3 ஏக்கர் விளை நிலமும், 1 ஏக்கரில் பசுமைக்குடிலும் எங்களுக்கு கிடைத்தன. தற்போது 3 ஏக்கரில் பசுமைக்குடில் அமைத்திருக்கிறேன்.
அதிக தேவை உடைய தாஜ்மஹால் ரெட்ரோஸ் எனும் அடர் சிவப்பு நிற ரோஜா உட்பட 12 வகையான ரோஜா மலர்களை உற்பத்தி செய்கிறேன். முறையாக பராமரிப்பு இருந்தால் ஒவ்வொரு செடியும் எட்டு ஆண்டுகள் வரை பலன் தரும்.
அறுவடை முடிந்ததும், 16 மணி நேரத்திற்கு குளிர்பதன கிடங்கில் பூக்களை வைத்திருப்போம். இதனால் மலர்களின் பிரகாசம், தரம் அதிகமாகும். இதற்காக, சொந்தமாகவே குளிர்பதன கிடங்கு அமைத்திருக்கிறோம்.
காதலர் தினத்தன்று மட்டும், வழக்கத்தை விட ஓசூரில் இருந்து அதிக அளவில் ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும். அந்த நேரத்திலும், முகூர்த்த தினங்களிலும் மலர்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும்.
இதில், 1 ஏக்கருக்கு 150, 'பஞ்ச்'கள் வீதம், 3 ஏக்கருக்கு 450 பஞ்ச் பூக்கள் கிடைக்கும். ஒரு பஞ்சுல 20 மலர்கள் இருக்கும்.
ஒரு பஞ்சுக்கு 150 முதல் 200 ரூபாய் வரை கிடைக்கும். 450 பஞ்சுக்கு 67,500 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் பூ பறிப்போம்.
மாதத்தில் 15 நாட்கள் பறிப்பு இருக்கும். இதன் வாயிலாக மாதத்திற்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைக்கும்.
ஒரு ஆண்டுக்கு 1.25 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். அதில் எல்லா செலவு களும் போக, 50 லட்சம் ரூபாய் லாபம் நிற்கும்.
மலர் உற்பத்தி விஷயங்களை என் கணவர் பார்த்துக் கொள்வார். வரவு - செலவுகளை நான் கவனித்து கொள்வேன். வாக்குறுதிப்படி கொடுக்கல் - வாங்கலில் நியாயமாக இல்லையெனில், பிசினஸ் செய்வதை நிறுத்தி விடுவேன்.
பல நேரங்களில் பூக்களுக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டமும் வரும்.
என்ன நடந்தாலும் சோர்ந்து போய் உட்கார மாட்டோம். ஆரம்பத்தில், எங்களை கிண்டலா பேசினவங்களும் மதிக்கிற நிலைக்கு வளர்ந்திருக்கோம்.
உழைப்பதற்கு தெம்பு இருக்கும்போதே, நல்லா சம்பாதித்து விட்டால், வயதான காலத்தில் சிரம மில்லாமல் வாழலாம்.

