/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தரிசு நிலத்தையும் பொன் விளையும் பூமியாக மாற்றியுள்ளோம்!:வீணை இசைக்கு வகுப்புகள் துவங்கணும்!
/
தரிசு நிலத்தையும் பொன் விளையும் பூமியாக மாற்றியுள்ளோம்!:வீணை இசைக்கு வகுப்புகள் துவங்கணும்!
தரிசு நிலத்தையும் பொன் விளையும் பூமியாக மாற்றியுள்ளோம்!:வீணை இசைக்கு வகுப்புகள் துவங்கணும்!
தரிசு நிலத்தையும் பொன் விளையும் பூமியாக மாற்றியுள்ளோம்!:வீணை இசைக்கு வகுப்புகள் துவங்கணும்!
PUBLISHED ON : செப் 01, 2024 12:00 AM

தமிழகம் முழுதும் பல்வேறு விதமான பண்ணைகளை வடிவமைத்து தரும், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இயங்கி வரும் இயற்கை விவசாய கூட்டமைப்பான, 'தேன்கனி' குழுவைச் சேர்ந்த ஜெ.கருப்பசாமி:
மாறி வரும் பருவநிலை மாற்றத்தால், தற்போதைய பருவ காலத்தில், சுட்டெரிக்கும் வெயிலும், கோடை காலங்களில் குளிர்ந்த பனிப்பொழிவு சூழலும் நிலவுகிறது.
இதனால், பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரங்களிலும், உடலிலும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.
இவற்றில் இருந்து விடுபடுவதற்காகவும், தற்காத்துக் கொள்வதற்காகவும் நிலம் உள்ளோர், தங்களுடைய பழைய நிலங்களை மீட்டெடுத்தும், நிலம் இல்லாதவர்கள் புதிய நிலங்களை தேடியும் வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, சமூக வலைதளங்களில் தொடர்ந்து தேடி வருவதுடன், நண்பர்களுடைய பண்ணைகளை பார்வையிட்டும், தாமும் அதுபோல் உருவாக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
இவற்றில், பண்ணை வடிவமைப்பு என்பது, ஆரம்பத்தில் தெளிவற்ற புரிதலுடன் தவறுதலாக செய்து விட்டால், பின் அவற்றை சீரமைப்பது சிரமம்.
அதைக் கருத்தில் கொண்டுதான், எங்கள் குழுவினர் கடந்த எட்டு ஆண்டுகளாக வெவ்வேறு விதமான சூழ்நிலையில், வெவ்வேறு விதமான பண்ணைகளை, நிலத்திற்கேற்றார்போல், நிலம் உள்ளவர்களின் விருப்பத்திற்கேற்ப, பண்ணைகளை சிறப்பாக வடிவமைத்துக் கொடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளோம்.
உதாரணமாக நிலங்களில் உயிர்வேலி அமைப்பது, வரப்புகளில் அகழி அமைப்பது, பண்ணை குட்டை அமைப்பது, மழைநீர் தன் நிலத்தை விட்டு வெளியில் செல்லாதது போல் நிலங்களை மாற்றி அமைப்பது, அந்தந்த சூழலுக்கு ஏற்றார் போல், நாட்டு மரங்களை தேர்வு செய்து நடவு செய்வது...
தண்ணீர் தேவைக்கேற்ப சொட்டுநீர் அமைத்து கொடுப்பது போன்ற மானாவாரிக்கு ஏற்ற நிலங்களை வடிவமைப்பது, இயற்கை விவசாயம், இயற்கை வாழ்வியல், தற்சார்பு வாழ்வியல், கால்காணி விவசாய பயிற்சி.
கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை புனரமைப்பது என, எண்ணற்ற வேலைகளை எங்கள் குழுவினர் அமைத்து, அதற்கான ஆலோசனைகளையும் கொடுத்து வருகிறோம்.
பண்ணை வடிவமைப்பு முடிந்த பின் தொடர்ந்து நில உரிமையாளர்களிடம் பேசி, அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவது என, குழுவாக பயணிக்கிறோம்.
உப்பான கிணற்று நீரை, விவசாயத்திற்கு ஏற்றார்போல் நல்ல தண்ணீராக மாற்றி பயன்படுத்துவது, ஒன்றுக்கும் பயன்படாத நிலத்தையும், பல தானிய விதைப்புகளை விதைத்து பொன்விளையும் பூமியாக மாற்றிஉள்ளோம்.
வீணை இசைக்கு வகுப்புகள் துவங்கணும்!
தன், 25 வயதிற்குள், 700 வீணை கச்சேரிகளை நடத்தியிருக்கும், வீணை கலைஞர் ஸ்ரீநிதி:
நான்
பிறந்து, வளர்ந்தது, திருமணமானது எல்லாமே கரூர் தான். ஆனால், தற்போது
தமிழகம் முழுக்க மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களுக்கும் போய் வந்துட்டு
இருக்க காரணம், இசை தான்.
என் பெற்றோர், கணவர் வீடு என, எந்த
பக்கமும் இசை சார்ந்த குடும்பம் இல்லை. ஆனால், இசை தான் என் உலகமாகி
விட்டது. வீணை தான் என் அடையாளம் என்றாலும், 7 வயது முதல், பியானோ, கீ
போர்டு போன்ற இசை கருவிகளை முறைப்படி கற்றிருக்கிறேன். மேலும், கர்நாடக
சங்கீதமும், பரதநாட்டியமும் தெரியும்.
என், 13வது வயதில் தொடர்ந்து,
15 மணி நேரம் வீணை வாசித்து, 2011ல், 'இந்தியா புக் ஆப் ரெக்கார்டில்'
இடம் பிடித்தேன். அந்த ஆண்டே இந்திய அரசால் வழங்கப்படும், 'பால சக்தி
புரஸ்கார்' அவார்டு வாங்கினேன்.
இதெல்லாம் வீணை மீதான ஆர்வத்தை
இன்னும் அதிகரிக்க வைத்தது. இப்படித் தான், 7 வயதில் ஆரம்பித்து, 25
வயதிற்குள், 700 இசை நிகழ்ச்சிகளுக்கு மேல் செய்து விட்டேன்.
வீணை
வாசிப்பதில் எனக்கு ஒரு தனித்துவ இடம் கிடைத்ததற்கு காரணம், என் குருக்கள்.
என் வீணை நிகழ்ச்சிகளில் கர்நாடக சங்கீதத்தை விட, திரையிசை பாடல்களே
அதிகம் இடம்பெறும்.
ஏனெனில், எல்லா வகை இசையும் மகத்துவமானது.
பெரும்பாலும், திரையிசை பாடல்களை தேர்ந்தெடுக்க காரணம், மக்கள் அந்த
அலைவரிசையில் தான் பெரும்பாலும் உணர்வுப்பூர்வமாக லயிக்கின்றனர்.
அவர்களுக்கு
பிடித்த இசை வடிவத்தில், அவர்கள் மனதுடன் நேரடியாக பேச, உணர்வு தீண்டல்
செய்ய, திரையிசை பாடல்கள் எனக்கு அதிக வாய்ப்பு கொடுப்பதாக நினைக்கிறேன்.
எந்தளவுக்கு பிடிக்கிற, பரிச்சயமான இசையை மக்களுக்கு நாம் கொடுக்கிறோமோ, அந்தளவுக்கு அவர்கள் அதை மனதார பெற்று அனுபவித்து ரசிப்பர்.
அமெரிக்காவின்
அட்லாண்டா தமிழ் சங்கத்தில் வீணை வாசித்தது, புதுடில்லி தமிழ் சங்கத்தில்
வீணை வாசித்தது எல்லாம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்கள்.
என்னை
இசையில் வளர்த்தெடுக்க என் பெற்றோர் செய்த முயற்சிகள், தற்போது என் கணவர்
தரும் ஆதரவு என, இதெல்லாம் தான் இசை மயமாக என்னை வாழ வைக்கிறது.
வீணையை பலரிடம் கொண்டு போய் சேர்க்கும் வகையில், வகுப்புகள் ஆரம்பிக்க வேண்டும் என்பதே அடுத்த இலக்கு.