/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
50,000 விதைப்பந்து தயாரித்து வீசினோம்!
/
50,000 விதைப்பந்து தயாரித்து வீசினோம்!
PUBLISHED ON : செப் 15, 2024 12:00 AM

மாணவர்களுக்கு விவசாயம் குறித்து கற்று தரும், கரூர் மாவட்டம், சின்னசேங்கல் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஜெரால்டு ஆரோக்கியராஜ்:
என் சொந்த ஊர் கரூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளுத் தண்ணிப்பட்டி. எனக்கு இயல்பாகவே இயற்கை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகம். 2009ல் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் பணிக்கு சேர்ந்தேன்.
ஓய்வு நேரங்களில், மாணவர்களை விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தினேன்.
அதன்பின், திருச்சிக்கு மாறுதலில் சென்றேன். அங்கு, இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, அந்த மாணவர்கள் வாயிலாக மண்புழு உரம் தயாரிக்கும் திட்டததை நடைமுறைப்படுத்தி, 500 கிலோ மண்புழு உரம் தயார் செய்து, அப்பகுதி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கினேன்.
கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளராக, 2015 - 2021 வரை பதவி வகித்தேன்.
அந்த காலகட்டத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள 1,064 பள்ளி ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, 'கரூர் இயற்கை நண்பர்கள்' என்ற வாட்ஸாப் குழுவை துவங்கி, இயற்கை விவசாயம், சிறுதானிய உணவுகள், காய்கறி தோட்டம், மூலிகை தோட்டம் போன்ற பணிகளை ஊக்கப்படுத்தினேன்.
மேலும், நான் பணியாற்றும் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் பிறந்த நாள் மரம் வளர்ப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறேன்.
மரக்கன்றுகளை நட்டு, முறையாக பராமரித்து வளர்த்து, ஒவ்வொரு மாதமும் புகைப்படம் எடுத்து, அது எவ்வளவு உயரம் வளர்ந்திருக்கிறது என்பதை எனக்கு தெரியப்படுத்துகின்றனர்.
கடந்த 2021ல் இந்தப் பள்ளிக்கு இடமாறுதலாகி வந்தேன். இங்குள்ள மாணவர்கள் வாயிலாக, நாட்டு மர விதைகளை கொண்ட, 50,000 விதைப்பந்துகள் தயாரித்து, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் வீசினோம்.
அது மட்டுமல்லாமல், இந்த பள்ளி வளாகத்தில், 11 சென்ட் பரப்பில், எலுமிச்சை புல், துளசி, சித்தரத்தை, இன்சுலின் செடி, திருநீற்றுப்பச்சிலை, ஓமவல்லி உள்ளிட்ட, 27 வகையான மூலிகை செடிகள் அடங்கிய தோட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.
இதை எட்டாம் வகுப்பு மாணவர்கள் தான் பராமரிக்கின்றனர். எங்கள் மாணவர்களுக்கு இங்குள்ள அத்தனை மூலிகைகளின் பெயர்களும் அத்துப்படி.
சுற்றுவட்டார பகுதியில் உள்ள 20 பள்ளிகளை சேர்ந்த 2,000க்கும் அதிகமான மாணவர்களை, களப்பயணம் என்ற பெயரில் கடவூர் மலைக்கு அழைத்து சென்று, அங்குள்ள இயற்கை சார்ந்த விஷயங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்தினேன்.
பசுமை பணிகளில் நான் தொடர்ச்சியாக ஈடுபடுவதை பாராட்டி, அதை அங்கீகரிக்கும் விதமாக, கடந்தாண்டு எனக்கு நல்லாசிரியர் விருது வழங்கி தமிழக அரசு கவுரவப்படுத்தி இருக்கிறது.
தொடர்புக்கு:
94428 85196.
********************************
வர்ம சிகிச்சையால் 120 பெண்களுக்கு சுகப்பிரசவம்!
மாநில அளவில் சிறந்த சித்த மருத்துவர் என்ற விருதை பெற்றுள்ள, தேனி மாவட்டம், கண்ட மனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் மு.கல்பனா:தேனி மாவட்டம், போடியில் பிறந்து வளர்ந்தேன். பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லுாரியில் படித்தேன். முதல் பணி, விழுப்புரம் மாவட்ட மருத்துவமனையில் மூன்று ஆண்டுகள். பின், ஏற்காடு மலை பிரதேசத்தில் 10 ஆண்டுகள், கண்டமனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 11 ஆண்டுகள் என, 24 ஆண்டுகள் மக்களுடன் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.ஏற்காடு, நாகலுார் அரசு சித்த மருத்துவ பிரிவில் பணியாற்றிய போது, மலை கிராம பெண்களின் ஆரோக்கியத்துக்காக 64 மலை கிராமங்களுக்கும் நடந்தே சென்ற
மருத்துவ முகாம்களை நடத்தினேன்.ஒவ்வொரு குடியிருப்புக்கும் சென்று, வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்வதில் உள்ள ஆபத்தை, பொறுமையாக
பேசி புரிய வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.
இதையடுத்து, மலை கிராம பெண்களுக்கு ஒரே மாதத்தில், 30 பிரசவங்கள் அரசு மருத்துவமனையில் நடந்தன. எலும்பு, தசை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிறந்த முறையில் வர்ம சிகிச்சை வழங்கி வருகிறேன். கர்ப்பிணிய ருக்கும் வர்ம சிகிச்சை
வழங்குகிறேன்.தேனி மாவட்டத்தில் அன்றாட தோட்ட வேலை, கூலி வேலை என பார்க்கும் குடும்பங்களில் அறுவை சிகிச்சை பிரசவம் நிகழ்ந்தால் செலவு, அதிக நாள் ஓய்வு என்று அவர்கள் சிரமப்பட வேண்டி இருக்கும்.அந்த பெண்கள் உள்ளிட்ட கர்ப்பிணியருக்கு சுகப்பிரசவத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், உடலில் உள்ள வர்ம புள்ளிகளில் விரல்கள் வாயிலாக அழுத்தம் கொடுக்கும் வர்ம சிகிச்சை அளிக்கிறேன். ஏற்கனவே சித்த மருத்துவ படிப்பில் வர்ம சிகிச்சை முறைகள் குறித்து கற்றறிந்த போதிலும், 2018ல் திருவண்ணாமலையில் ஐந்து மாதங்கள் நான் கற்ற வர்ம சிகிச்சை தான், எனக்கு புலமை கொடுத்தது.கடந்த ஐந்து ஆண்டுகளில் என்னிடம் சிகிச்சை பெற்ற, 120 பெண்களுக்கு சுகப்பிரசவம் நடந்துள்ளது.மருத்துவமனை பணியுடன், பள்ளி, கல்லுாரிகளுக்கும் சென்று மாணவ - மாணவியருக்கு மருத்துவ விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். குறிப்பாக, மாணவியருக்கு ரத்த சோகை அதிகமாக காணப்படுகிறது.
இதனால், அவர்களுக்கு மாதவிடாய் பிரச்னை ஏற்படலாம். இது எதிர்காலத்தில் குழந்தைப்பேறில் சிக்கல் ஏற்படுத்தலாம். இதையெல்லாம் அவர்களுக்கு எடுத்துக்கூறி, பரிசோதனை நடத்தி, மருந்துகள் வழங்கி வருகிறேன்.நாம் அடைய நினைக்கும் முயற்சிகள், வெற்றிகள், சாதனைகள், சந்தோஷங்கள் அனைத்துக்கும் அடிப்படை நம் உடல் தான். அதை பத்திரமாக பார்த்து கொள்வதே, நம் முதல் கடமை.
தொடர்புக்கு: 89407 47645.