/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தினமும் 20 மணி நேரம் உழைக்கிறோம்!
/
தினமும் 20 மணி நேரம் உழைக்கிறோம்!
PUBLISHED ON : செப் 03, 2024 12:00 AM

சிறுதானிய உணவு மற்றும் சிற்றுண்டிகளை தயாரித்து விற்பனை செய்து வரும், நெல்லை மாவட்டம், செங்கம் கிராமத்தின் அல்லி மற்றும் அழகு மயில் மகளிர் குழுக்களை சேர்ந்த பழனியம்மாள்:
நாங்கள், ஐந்து பெண்கள் தான் இக்குழுக்களை நடத்துகிறோம். போன வருஷம் வரை 100 நாள் கூலிகளா வேலை பார்த்துட்டு இருந்தோம்.
அப்போது தான் அரசு, மகளிர் குழுவினருக்கு சிறு தானிய உணவு தயாரிக்க பயிற்சிகள் கொடுத்தது. நாங்கள் மகளிர் குழுவில் இருந்ததால், எங்களுக்கு அந்தப் பயிற்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.
எங்கள் ஏரியாவை சேர்ந்த இரண்டு குழுவில் இருந்து, ஐந்து பேரை தேர்வு செய்தனர். நாங்கள் திருச்சியில் தங்கி, ஐந்து நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்டோம். பயிற்சியில் சிறுதானிய உப்புமா, லட்டு வகைகள், வடை, பாயசம் என சில ரெசிப்பிகள் சொல்லி கொடுத்தனர்.
வீட்டில் மிகவும் வறுமையான சூழல். அந்த நிலையில் வீட்டில் இருந்த நகைகளை விற்று, ஒவ்வொருவரும், 5,000 ரூபாய் முதலீடு செய்து, சிறுதானிய ஸ்நாக்ஸ் தயாரிப்பு தொழிலை துவங்கினோம்.
முறுக்கு, அதிரசம், சேவு, காராபூந்தி, இனிப்பு பூந்தி, லட்டு வகைகளை 1 கிலோ, 2 கிலோ என குறைந்த அளவில் தயார் செய்து, 100 கிராம், 200 கிராம் என பாக்கெட் போட்டு விற்பனை செய்வோம். 'டேஸ்ட் நல்லாயிருக்கு' என அனைவரும் கூறினர்.
வாய்வழி விளம்பரம் வாயிலாக, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமானது. வீட்டு விசேஷங்களுக்கு, 'ஸ்நாக்ஸ்' ஆர்டர் வர ஆரம்பித்தது. மாதம் 20,000 ரூபாய் வரை வருமானமும் வர ஆரம்பித்தது.
திருப்புமுனையாக, நெல்லை கலெக்டர் அலுவலக வாசலில் ஒரு கடை வாடகைக்கு கிடைத்தது. அதுவரை இந்தத் தொழில் வாயிலாக எங்களுக்கு கிடைத்த பணத்தை முதலீடு செய்து சிறுதானிய, 'கபே' துவங்கினோம்.
சிறுதானிய இட்லி, தோசை, பொங்கல், பூரி, வடை, மீல்ஸ், வெரைட்டி ரைஸ், பாயசம் போன்றவற்றை தயாரித்து, விற்பனை செய்ய ஆரம்பித்தோம்.
தினமும் புது எண்ணெய், தரமான பொருட்களை பயன்படுத்துவது என, தரத்தை தக்க வைக்க நிறைய மெனக்கெட்டோம். காலையில், 4:00 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்து விட்டு, கடைக்கு வந்து வேலைகளை பிரித்துக் கொள்வோம்.
இரவு 7:00 மணிக்கு கடையை அடைத்து விட்டு, ஸ்நாக்ஸ் ஆர்டருக்கான வேலைகளுக்காக கூடுதல் நேரம் இருந்து உழைப்போம். தினமும், 20 மணி நேரம் உழைக்கிறோம்.
எங்கள் உழைப்பு தான், எங்கள் குழந்தைங்க படிப்பு செலவுக்கும், எங்களோட அடிப்படை செலவுக்கும் பயன்படுது. உழைக்க தயாராக இருந்தால், குடும்பச் சூழல் நிச்சயம் மாறும்; அதை, நாங்கள் மாற்றி இருக்கிறோம்.