/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
எங்களுக்கு மரியாதை கிடைத்துள்ளது!
/
எங்களுக்கு மரியாதை கிடைத்துள்ளது!
PUBLISHED ON : ஆக 26, 2024 12:00 AM

சின்னஞ்சிறிய கிராமத்தில் இருந்தபடியே, 'யு டியூப்' சமூக வலைதளத்தில், 'சைடிஷ் ரெசிப்பீஸ்' எனும் சேனலில், 30 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கவர்ந்துள்ள, கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வண்ணக்கிளி:
நான் மூன்றாம் வகுப்பு வரை தான் படித்துள்ளேன். என் வீட்டுக்காரரும் படிக்காதவர் தான். வறுமை, கஷ்டம், வாழ்வாதார போராட்டம் என இதெல்லாம், இதுக்கு முன்னாடி வரைக்கும் எங்களோட அடையாளம்.
என் மூன்றாவது பையன் குமரன், டிப்ளமோ படித்திருக்கிறான். 2018ல் அவன் கம்பெனி வேலைக்கு சென்று கொண்டிருந்த போது தான், அவன் வாயிலாக சேனல் ஆரம்பித்தோம்.
நாங்கள், 'குக்கரி வீடியோஸ்' தான் பதிவிட்டோம். அதெல்லாம் நல்லா போச்சு. அப்போது, ஒரு தனியார் செயலி நிறுவனத்தினர் எங்களை அணுகினர்.
மொபைல் போனில் செயல்படும் அவர்களின் செயலிக்கு, தொடர்ந்து சமையல் வீடியோக்களை எடுத்துக் கொடுத்தோம். சேனலை ஆரம்பித்து எட்டு மாதமாகியும், 1,000 சப்ஸ்கிரைபர்ஸ் தான் இருந்தனர்.
அப்போது வீட்டில் உள்ளோர், 'யு டியூப், சமையல் வீடியோலாம் தேவை தானா... எதற்கு இந்த வெட்டி வேலை...' என்று பலரும் பேசினர். என் கணவரும் அப்படியே பேசினார்.
ஒரு நாள், பேஸ்புக்கில் இருந்து எங்களை அணுகி, 'பேஸ்புக்கில் பேஜ் ஆரம்பித்து, ரெகுலரா வீடியோஸ் போடுங்க. மாதமானால் நிலையான வருமானம் தர்றோம்' என்றதால் அதிலும் பதிவிட்டோம்; நல்ல வருமானம் கிடைத்தது.
நானும், பையனும் இதையே முழுநேர வேலையாக அமைத்துக் கொண்டோம். வீட்டில் காஸ் அடுப்பு இருந்தாலும், பெரும்பாலும் திறந்தவெளியில் தான் விறகடுப்பு வாயிலாக சமைப்பேன்.
நான் சமைக்கும் போது, பின்னாடி குடிசை வீடு தெரியும். அதில் தான், 30 ஆண்டுகள் வாழ்ந்தோம். மழை வந்தால் வீட்டின் உள்ளே தண்ணீர் அருவியாக கொட்டும்.
இப்போது, கிடைக்கும் பணத்தில், அந்த வீட்டுக்கு பக்கத்தில் நல்ல தரமான வீடு கட்டியிருக்கிறோம்.
எனக்கு கலகலப்பாக பேச வராது. என் போக்குல பேசி சமைப்பேன். பொதுமக்கள் எங்கள் வீடியோக்களை ஏன் பார்க்கின்றனர்; என்னென்ன கமென்ட்ஸ் வருது; எவ்ளோ வருமானம் வருது என எதுவும் தெரியாது. என் பையனோட சந்தோஷத்துக்காக மட்டும் தான் சமைக்கிறேன்.
முன்னாடி, கூலி வேலைக்கு போன போது, நாள் முழுக்க உழைத்தாலும் ஒரு வாரத்துக்கே 1,000 ரூபாய்க்குள் தான் வருமானம் வரும். இப்போது கைநிறைய சம்பாதிக்கிறோம்.
என் வீட்டுக்காரர் உட்பட சொந்த பந்தங்கள் பலரும், எங்க யு டியூப் சேனல் தொழிலை பெருமையாக பார்க்கின்றனர். 'கூலிக்காரங்க' என்று ஒரு காலத்தில் எங்களை பலரும் ஏளனமாக பேசினர். இப்போது மதிப்பும், மரியாதையுமாக பார்க்கின்றனர்!