தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/‘3 ஆண்டுகளில் 12 பேருக்கு அரசு வேலை!’

‘3 ஆண்டுகளில் 12 பேருக்கு அரசு வேலை!’

‘3 ஆண்டுகளில் 12 பேருக்கு அரசு வேலை!’


PUBLISHED ON : நவ 18, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தை இலவசமாக நடத்தி வரும், கோவை மாவட்டம், சூலுாரைச் சேர்ந்த இனிதா குமார்:

என் அப்பா சு.ர.தங்கவேலு, சூலுார் பேரூராட்சியின் முன்னாள் தலைவர். பெரியப்பா, ‘சூலுாரின் தண்ணீர் தந்தை’ என்று அழைக்கப்பட்ட எஸ்.ஆர்.சுப்பிரமணியம். நான் கட்டுமான பொறியியல் படித்துள்ளேன். கணவரின் வேலை காரணமாக, திருமணத்துக்கு பின் வெளிநாட்டில் குடியேறினேன்; 37 ஆண்டுகள் வெளிநாட்டில் தான் இருந்தோம்.

இந்தியாவுக்கு வந்து சமூகப்பணி செய்ய வேண்டும் என்று நான் ஆசைப்பட்டதற்கு காரணமே எங்கப்பா தான். எங்கள் ஊரில் உள்ள கழிவுநீர் எல்லாம் சூலுார் சின்ன குளத்தில் கலந்திருந்தது. இதனால், என் அப்பா 2004-ல் உலக வங்கி நிதி உதவியோடு, சூலுாரில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை உருவாக்கினார். காலப்போக்கில் அது பயன்பாடு இல்லாமல் போய் விட்டது. அதை மீட்டெடுக்கணும்னு சூலுார் நீர்நிலைகள் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் ஆனேன்.

கடந்த 2019-ல் மீண்டும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தோம். அப்பா உருவாக்கிய எஸ்.ஆர்.எஸ்., அறக்கட்டளை மூலம் கலை, இலக்கிய போட்டிகள், பொங்கல் திருவிழா, சூலுார் சுற்றுவட்டார பள்ளிகளில் முதல் மூன்று இடம் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல உதவிகளையும் செய்ய ஆரம்பித்தோம்.

என் அப்பா நுாலகம் ஒன்றை நடத்தி வந்தார். அவர் இறந்த பின், அந்த நுாலகத்தை மூடலாம் என்று நினைத்தோம். அங்கு வந்து படிக்கும் பெண்கள், ‘இந்த நுாலகத்தை நாங்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராக பயன்படுத்திக் கொள்ளலாமா?’ என்று கேட்டனர்.

இதனால், நுாலகத்தை மூடும் எண்ணத்தை கைவிட்டு, அந்த இடத்தை பயிற்சி மையமாக மாற்ற முடிவு செய்து, 2022-ல் இலவச பயிற்சி மையத்தை உருவாக்கினோம்.

கல்லுாரி மாணவர்கள், திருமணமான பெண்கள், குழந்தைகளுடன் வரும் பெண்கள் என பலரும் இங்கு பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை வழங்குவதோடு, பயிற்சிகளையும் நடத்தி, வாரத்தில் இரண்டு நாட்கள் மாதிரி தேர்வுகளும் நடத்துகிறோம்.

சில மாணவர்களுக்கு நேரில் வந்து தேர்வு எழுதுவதில் சிரமம் இருப்பதால், இணையவழி தேர்வு எழுதும் வாய்ப்பையும் வழங்கி வருகிறோம். ஒருவராவது அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று, இந்த மையத்தை 2023ல் ஆரம்பித்தோம். இப்போது வரை எங்கள் இலவச பயிற்சி மையத்தில் இருந்து, 12 பேர் அரசு வேலைக்கு சென்றுள்ளனர். தற்போது, 60க்கும் மேற்பட்டவர்கள் இங்கே பயிற்சி பெற்று வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us