/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
முதல் தலைமுறை பட்டதாரிகளாக உருவான 272 பேர்!
/
முதல் தலைமுறை பட்டதாரிகளாக உருவான 272 பேர்!
PUBLISHED ON : செப் 27, 2024 12:00 AM

ஓய்வுபெற்ற தலைமைச்செயலர் இறையன்பு வழிகாட்டுதலுடன் சென்னை, கண்ணகி நகரில் செயல்படும், 'முதல் தலைமுறை கற்றல் மையம்' என்ற அமைப்பை முன்னெடுத்து நடத்தும் மாரிச்சாமி: கடந்த 2004ல் கண்ணகி நகருக்கு வந்தேன்.
இங்கு இருப்பதிலேயே பெரிய பிரச்னை... மாணவர்கள் கல்வி கற்காமல் பாதியில் நிற்பது.
வகுப்பறையில் இருந்து வெளியே விட்டுவிட்டால், வயதுக்கு மீறிய நட்பால் பாதை மாறி விடுவர். எப்படியாவது அவர்களை பள்ளிக்குள் தக்கவைக்க நினைத்தோம். அதற்காகவே, 'டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மக்கள் நல சங்கம்' என்ற ஒன்றை அமைத்தோம்.
இந்த பகுதியில் இருக்கும் பள்ளிகளுக்குச் சென்று, சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி கேட்டோம். ஆனால், எங்களை உள்ளே கூட அனுமதிக்கவில்லை.
சோர்ந்து போய் உட்கார்ந்திருந்த நேரத்தில், 'எனக்கு இறையன்பு சாரை தெரியும். போய் பார்ப்போம்' என்றார் நண்பர் ஒருவர். உடனே சந்தித்தோம்.
அப்போது அவர், தொழில் முனைவோர் புத்தாக்க நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருந்தார்.
முதல் சந்திப்பிலேயே மிகவும் உற்சாகப்படுத்தினார். பள்ளிகளில் பேசி, சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி வாங்கி தந்தார்.
அடிக்கடி விசாரிப்பார்; ஆலோசனை சொல்வார். அவர்தான் முதல் தலைமுறை கற்றல் மையம் என பெயர் வைத்தார்.
பயன்படாமல் இருந்த ஒரு கட்டடத்தை பெற்று தந்தார். தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனம், 25 கி.வா., சோலார் பேனலை அமைத்து தந்தது. வித்துஷா என்ற தொண்டு நிறுவனம், 30 கம்ப்யூட்டர்கள் கொண்ட ஹைடெக் லேப் கொண்டு வந்தது.
அவர் வழிகாட்டுதலில் தான் ஒன்று முதல் பிளஸ் 2 வரை, 10 இடங்களில் டியூஷன் நடத்துகிறோம். 450 பிள்ளைகள் படிக்கின்றனர். 54 தன்னார்வலர்கள் ஆசிரியர்களாக இருக்கின்றனர்.
தினமும் மூன்று பேட்ச் கம்ப்யூட்டர் வகுப்புகள் நடக்கின்றன. பலர் படித்து முடித்து பெரிய கம்பெனிகளில் வேலை பார்க்கின்றனர்.
வார இறுதி நாட்களில் பறையிசை, பொம்மலாட்டம், சிலம்பம், ஸ்போக்கன் இங்கிலீஷ், கராத்தே, பாக்சிங், ஓவியம், கிராப்ட் ஒர்க் பயிற்சிகள் நடக்கும்.
செவ்வாய், சனிக்கிழமைகளில் பரதநாட்டிய பயிற்சி நடக்கும். ஒரு மாணவர், இரண்டு பயிற்சிகளில் பங்கேற்கலாம்.
இதுவரை, 272 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகளாக உருவாகி இருக்கின்றனர். அனைவருடைய படிப்புக்கும் இறையன்பு சார் தான் பொறுப்பேற்றார்.
தற்போது, கற்றல் மையத்தை அவர்கள் தான் நிர்வகிக்கின்றனர். இறையன்பு சார் மாதம் ஒருமுறையாவது வந்து விடுவார். அவர் வழிகாட்டுதலில், இன்னும் பெரிதாக இதை விரிவுபடுத்த வேண்டும்.
தொடர்புக்கு: 98413 04415

