/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
'ஸ்கேட்டிங்'கில் பரதநாட்டியம் ஆடும் 8 வயது சிறுமி!
/
'ஸ்கேட்டிங்'கில் பரதநாட்டியம் ஆடும் 8 வயது சிறுமி!
'ஸ்கேட்டிங்'கில் பரதநாட்டியம் ஆடும் 8 வயது சிறுமி!
'ஸ்கேட்டிங்'கில் பரதநாட்டியம் ஆடும் 8 வயது சிறுமி!
PUBLISHED ON : ஆக 26, 2025 12:00 AM

பெங்களூரில் வசிக்கும், 8 வயது சிறுமி இனியா, 'ஸ்கேட்டிங்' உடன் கூடிய பரதநாட்டியம் ஆடி சாதனை படைத்துள்ளார். அவரது தாய் உமா: எங்கள் பூர்வீகம், தமிழகத்தின் விழுப்புரம். வேலை நிமித்தமாக, குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறேன். என் மகளுக்கு இனியா என்ற பெயரை தேர்வு செய்தபோது, 'இனி' அவள் தான் என் இமையாக இருப்பாள் என்று நினைத்தேன்.
அப்போது என் அப்பா என்னிடம், 'இனியா தான் இனி உனக்கு எல்லாம்' என்று கூறினார். ஆம்... அது, 100 சதவீதம் உண்மையும் கூட!
கணவர் என்னை விட்டு சென்ற பின், நான் மிகவும் தனிமையில் இருப்பது போல் உணர்ந்தேன். என் மகள் இனியா என் விரலை பிடித்தபோது தான் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்பட்டது. என் பார்வை, நோக்கம், குறிக்கோள், லட்சியம், வாழ்க்கை, உலகம், சுவாசம் எல்லாமே இனியா தான்.
தற்போது மூன்றாம் வகுப்பு படிக்கிறாள்; திறமையானவள். நடனம், பாடல், கராத்தே, நகைகள் செய்தல், ஸ்கேட்டிங் என்று பல்வேறு கலைகளை கற்று வருகிறாள்.
அவளுடைய ஐடியா தான், ஸ்கேட்டிங்குடன் கூடிய பரதநாட்டியம். அவளுக்கு பரதநாட்டியம் மிகவும் பிடிக்கும். இனியாவின் ஸ்கேட்டிங் மாஸ்டர், குடியரசு தினத்தன்று ஒரு நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.
'அம்மா, நான் ஸ்கேட்டிங்கில் பரதம் ஆடவா?' என்று ஆர்வத்துடன் கேட்டாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், கீழே விழுந்து அடிபட்டு விடுமோ என்று எனக்கு சிறிது பயம் இருந்தது.
ஆனால், அவளோ பிடிவாதமாக, 'என்னால் நிச்சயம் முடியும்' என்று நம்பிக்கையுடன் கூறி, ஸ்கேட்டிங் செய்தபடியே, 17 நிமிடங்கள், 48 வினாடிகள் பரதம் ஆடினாள்.
இதன் வாயிலாக, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' ஆகிய சாதனைகளை படைத்திருக்கிறாள். அது மட்டுமல்லாமல் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாள்.
இந்த சாதனைகளுடன் நிறுத்திக்கொள்ள இனியாவிற்கு விருப்பமில்லை. வயலின் வாசித்தபடியே ஸ்கேட்டிங் செய்ய வேண்டும் என்று மிகவும் ஆர்வத்துடன் தயாராகி வருகிறாள். அவளின் இந்த கனவுகள் நிறைவேற, தொடர்ந்து அவளை ஊக்கப்படுத்தி வருகிறேன்.