/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ரூ.5,000 முதலீட்டில் ஆரம்பித்த தொழில் ரூ.16 கோடியாக வளர்ந்துள்ளது!
/
ரூ.5,000 முதலீட்டில் ஆரம்பித்த தொழில் ரூ.16 கோடியாக வளர்ந்துள்ளது!
ரூ.5,000 முதலீட்டில் ஆரம்பித்த தொழில் ரூ.16 கோடியாக வளர்ந்துள்ளது!
ரூ.5,000 முதலீட்டில் ஆரம்பித்த தொழில் ரூ.16 கோடியாக வளர்ந்துள்ளது!
PUBLISHED ON : ஜூலை 26, 2025 12:00 AM

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே, அப்பம்பட்டு கிராமத்தில் உள்ள, சையத் ஸ்வீட்ஸ் முட்டை மிட்டாய் கடை உரிமையாளர் சையத் உஸ்மான்:
கடந்த, 1970ல் என் அப்பா சையத் கப்பார், அப்பம்பட்டு கிராமத்தில் சிறிய ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்தார். அதில், முஸ்லிம் இல்ல நிகழ்ச்சிகளில் செய்யப்படும், முட்டை மிட்டாயை அறிமுகப்படுத்தினார். கிராமம் என்பதால் ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு, 1 கிலோ விற்பனை செய்தாலே பெரிய விஷயம்.
வெகு விரைவில் எங்களுடைய முட்டை மிட்டாய், அதனுடைய தனித்துவமிக்க சுவையால் வாடிக்கையாளர்களை வரிசையில் நிற்க வைத்தது; அந்த அளவுக்கு அமோக விற்பனை. நானும், குடும்ப சூழல் காரணமாக பிளஸ் 2 முடிக்கும் முன்பாகவே, படிப்பை நிறுத்திவிட்டு, 1995ல் அப்பாவுக்கு உதவியாக வந்து விட்டேன்.
நிர்வாகத்தை படிப்படியாக கற்றுக் கொண்ட பின், கடையின் முழு பொறுப்பையும் என்னிடம் ஒப்படைத்தார் அப்பா.
குடும்ப சூழல் காரணமாக படிப்பை நிறுத்தியிருந்தாலும், படிப்பை விடக்கூடாது என்று வியாபாரத்திற்கு இடையிலும் தொலைதுார கல்வி வாயிலாக, பி.காம்., - எம்.காம்., - எம்.பில்., படித்து முடித்தேன்.
ஹோட்டல் பொறுப்பு என் கைக்கு வந்ததும், திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு முட்டை மிட்டாயை செய்து கொடுக்க ஆரம்பித்தோம். விருந்தில் அதை சாப்பிடுவோர், 'இது என்ன ஸ்வீட்... புதிதாக இருக்கிறதே...' என கேட்டு, எங்களை தேடி வந்து வாங்க ஆரம்பித் தனர். அப்படித்தான் வியாபாரம் வளர ஆரம்பித்தது. அடுத்து, செஞ்சியில் எங்களின் முதல் கிளையை திறந்தோம். தற்போது, 20க்கும் மேற்பட்ட கிளைகள் இருக்கின்றன.
பசும்பாலை, 8 மணி நேரம் காய்ச்சி, அதில் முட்டை, சர்க்கரை, நெய் போன்றவற்றை சேர்த்து வேக வைத்தால், நம் நாவை அடிமையாக்கும் முட்டை மிட்டாய் தயாராகிவிடும். இது, சிறியவர்கள் அதிகம் விரும்பி உண்ணும் இனிப்பு என்பதால், தரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்வதில்லை. முக்கியமாக, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கும் பசும்பாலை மட்டுமே பயன்படுத்துகிறோம்.
இந்த மிட்டாயை மூன்று நாட்கள் வெளியில் வைத்து சாப்பிடலாம். பிரிஜ்ஜில் வைத்தால், 35 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். 5,000 ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முட்டை மிட்டாய் பிசினஸ், இப்போது ஆண்டுக்கு, 16 கோடி ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
இதை சாத்தியப்படுத்தியது எங்கள் வாடிக்கையாளர்களும், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊழியர்களும் தான்!