தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ பூ கட்டி விற்கும் பல் மருத்துவர்!

 பூ கட்டி விற்கும் பல் மருத்துவர்!

 பூ கட்டி விற்கும் பல் மருத்துவர்!


PUBLISHED ON : ஏப் 28, 2026 01:06 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 28, 2026 01:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல் மருத்துவராக இருந்தாலும், பூ கட்டி விற்பனை செய்யும், திண்டுக்கல் மாவட்டம், அணைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, 29 வயதான நித்யகல்யாணி:

என் சிறு வயதிலேயே அம்மாவும், அப்பாவும் பிரிந்து விட்டனர். எனக்கு இரு தம்பிகள். அம்மாவிடம் தான் வளர்ந்தோம்.

அம்மா பூ கட்டுவது, கூரை வேய்வது என்று சிறு சிறு வேலைகள் செய்து, குடும்ப செலவுகளையும் பார்த்துக் கொண்டு, எங்களையும் படிக்க வைத்தார்.

கடந்த, 2014ல் சென்னையில் பல் மருத்துவக் கல்லுாரியில் பி.டி.எஸ்., படிக்க இடம் கிடைத்தது. வங்கி கடன் வாங்கி படித்து விடலாம் என்று நினைத்தேன்.

வங்கியில் ஏதேதோ காரணம் சொல்லி அலைக்கழித்தனரே தவிர, வங்கி கடன் கிடைக்கவே இல்லை.

அம்மாவின் நகைகள், அவரிடம் இருந்த கொஞ்சம் சேமிப்பை வைத்து, இரண்டு ஆண்டு படிப்பை முடித்தேன். மூன்றாவது ஆண்டு கல்லுாரி கட்டணம் கட்ட முடியாமல், இடையில் நின்று விட்டேன்.

கூரை வேய்வது, பூ பறிப்பது, பூ கட்டும் வேலை என, கிடைக்கிற வேலைகளை செய்து வந்தேன். படிக்க முடியவில்லையே என்று சில நேரங்களில் மனம் மிகவும் உடைந்து விடும். வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என்று யோசித்த நாட்களும் உண்டு.

அப்போதெல்லாம், 'நம்ம அம்மா பட்ட கஷ்டத்துக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமே இல்ல... அம்மாவை எப்படியும் பெருமைப்படுத்தணும்' என்று மனதை உறுதியாக்கி கொண்டேன். இரண்டு ஆண்டுகள் வீட்டிலேயே இருந்தேன்.

எங்களுக்கென கடைசியாக இருந்த ஒரு சிறு இடத்தையும் விற்று, கல்லுாரி கட்டணம் செலுத்தி, 2018ல் மறுபடியும் கல்லுாரிக்கு சென்றேன். வீட்டில் இருந்த இரண்டு ஆண்டுகள் எனக்கு ஏற்பட்ட வலி, அவமானம், கேலி, கிண்டல்கள், என்னை மனதளவில் உறுதியாக்கின; வெறித்தனமாக படிக்க ஆரம்பித்தேன்.

அந்த சமயத்தில் எனக்கு திருமணமும் நடந்தது. மனநல ஆலோசகரான என் கணவர், என் படிப்பு செலவை ஏற்றுக்கொண்டார். 2020ல் படிப்பை முடித்து, பல் மருத்துவராக வெளியே வந்தேன். பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் பலன் கிடைத்தது; என் அம்மா பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

என் கணவர், திண்டுக்கல்லில் சிறிய மருத்துவமனை வைத்து கொடுத்தார். தினமும் காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை மருத்துவமனையில் நோயாளிகளை பார்ப்பேன்.

மதியம் 2:00 முதல் இரவு 10:00 மணி வரை, தாடிக்கொம்பு பெருமாள் கோவில் வாசலில் பூ கட்டி, விற்பனை செய்கிறேன்.

பல் மருத்துவராக எனக்கு நல்ல வருமானம் வருகிறது. பலரும், 'நீ தான் டாக்டர் ஆகிட்டல்ல... அப்புறம் ஏன் இன்னும் பூ கட்டிட்டு இருக்க' என்று கேட்கின்றனர். எங்களை வளர்த்து ஆளாக்க என் அம்மா செய்தது, இந்த பூ கட்டும் வேலை தான். அதை செய்வதில், எனக்கு எந்த கூச்சமும் இல்லை; இது தான் என்னோட வேர்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us