/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ரூ.10 லட்சம் முதலீட்டுக்குள் நிறைய தொழில்!: அப்துல் கலாம் பசுமை கனவை நிறைவேற்றி வருகிறேன்!
/
ரூ.10 லட்சம் முதலீட்டுக்குள் நிறைய தொழில்!: அப்துல் கலாம் பசுமை கனவை நிறைவேற்றி வருகிறேன்!
ரூ.10 லட்சம் முதலீட்டுக்குள் நிறைய தொழில்!: அப்துல் கலாம் பசுமை கனவை நிறைவேற்றி வருகிறேன்!
ரூ.10 லட்சம் முதலீட்டுக்குள் நிறைய தொழில்!: அப்துல் கலாம் பசுமை கனவை நிறைவேற்றி வருகிறேன்!
PUBLISHED ON : ஏப் 27, 2025 12:00 AM

சிறு முதலீட்டில் தொழில் துவங்குவதற்கான ஆலோசனைகளை, 'ஆன்லைன்' வாயிலாக வழங்கி வரும், கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த சுரேஷ் ராதாகிருஷ்ணன்:
அப்பா, மளிகைக் கடை வைத்திருந்தார். குடும்பத்தில் நான்தான் முதல் தலைமுறை பட்டதாரி. பி.இ., முடித்ததும் சென்னையில் ஐ.டி., கம்பெனியில் வேலை கிடைத்தது. ஆனால், அந்த வேலை போரடித்தது.
அலுவலக இடைவேளை நேரத்தில் டீ குடிக்க செல்வோம். தள்ளுவண்டி கடைதான். எப்போதும் நல்ல கூட்டம். ஒரு நாளைக்கு 500 டீக்கு மேல் விற்பனை ஆகும். டீ, சிற்றுண்டி எல்லாம் சேர்த்து, ஒரு நாளைக்கு 10,000 ரூபாய்க்கு விற்பனை நடக்கும்.
ஆனால், அந்த இடம் சுத்தமாக இல்லை; டீயும் தரமாக இல்லை. ஆனாலும் கூட்டம் வரும். சுவையான, சுத்தமான, தரமான டீ கிடைத்தால், இன்னொரு முறை டீ குடிக்க பலர் தயங்க மாட்டார்கள். எனவே, டீக்கடை ஆரம்பித்தேன்.
நீலகிரி, வால்பாறை என பல மாவட்டங்கள் அலைந்து, பல டீத்துாள் வாங்கி தொடர் முயற்சிக்கு பின், ஒரு நிலையான, 'பிளேவர்' கிடைத்தது. அதனால் ஓரளவிற்கு வரவேற்பும் கிடைத்தது.
அப்போது நண்பர்கள், 'ரெவின்யூ ஷேரிங்' அடிப்படையில் முதலீடு செய்ய முன்வந்தனர். 'சாய் காந்த்' என்ற பெயரில், 'பிராண்டிங்' செய்து, கற்பூரவல்லி டீ, கருப்பட்டி டீ என, 21 வகையான டீக்களை தந்தோம். அடுத்தடுத்து எட்டு கடைகளானது.
அந்த நேரம், கொரோனா ஊரடங்கால் முடங்கி, 50 லட்சம் ரூபாய் கடன் சுமையானது. லாக்டவுனிலும், மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் இருக்க முடியவில்லை. நண்பர்களுடன் ஆன்லைனில் பேசி, எனக்கு தெரிந்த விஷயங்களை, இணையதளம் வாயிலாக சொல்லித்தர ஆரம்பித்தேன்.
நாளாக நாளாக ஆன்லைனில் கூட்டம் அதிகமானது. சிறு கட்டணத்துடன் சமூக வலைதளத்தில் சொல்லித்தர ஆரம்பித்தேன். 'நீங்கள் சொன்னதை வைத்து கடை ஆரம்பித்துள்ளேன்' என்று, டில்லியில் இருந்து ஒருவர் பதிவிட்டார். இதுதான் அடுத்த கட்டத்துக்கான வழி என்று புரிந்தது.
டீக்கடைகள் ஆரம்பிப்பதை நிறுத்திவிட்டு, இணையதளத்தில் சொல்லிக் கொடுக்கும் வேலையாக மாற்றிக் கொண்டேன். நிறுவனத்திற்கு, 'மை பிரினர்' என்ற பெயர் வைத்தேன்.
டீத்துாள் எங்கு வாங்க வேண்டும் என்பது முதல், கடையில் கிச்சன் எங்கு வைக்கலாம் என்பது வரை முழுதாக கற்றுக்கொடுத்து விடுவோம்.
இங்கு, 10 லட்சம் ரூபாய் முதலீட்டுக்குள் செய்ய நிறைய தொழில்கள் உள்ளன. அதையெல்லாம் அடுத்தடுத்து கொண்டு வர இருக்கிறோம். இந்தியாவில் இந்த வேலையை செய்வது நாங்கள் மட்டும்தான்.
ஒருவேளை, இதிலும் பிரச்னை எனில், இதை வைத்தே இன்னொன்றை உருவாக்க முடியும். இந்த நம்பிக்கைதான், இதுவரை நான் சம்பாதித்ததில் மிகப்பெரியது.
தொடர்புக்கு
98945 84241
அப்துல் கலாம் பசுமை கனவை நிறைவேற்றி வருகிறேன்!
'பூமித்ரா
நர்சரி கார்டன்' நடத்தி வரும், சென்னை போரூர், காரப்பாக்கத்தைச் சேர்ந்த
வெங்கடேஷ்: என் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம், மேல்பனையூர். விவசாயம்
பொய்த்துப் போனதால், 1970ல் வேலை தேடி என் பெற்றோர் சென்னைக்கு வந்தனர்.
வறுமை காரணமாக, நான் பள்ளிக்கு செல்ல வில்லை. பல்வேறு வேலைகள் செய்தேன்.
கடந்த 2006ல், மலேஷியாவுக்கு வேலைக்கு சென்றேன். அங்கு தோட்டம் அமைத்துக் கொடுக்கும் பணியில் என் உறவினர் ஈடுபட்டிருந்தார்.
அவருடன்
இணைந்து வேலை செய்தேன். தோட்டம் அமைக்கும் நுணுக்கங்களைக் கற்றுக்
கொண்டபின், நானே தனியாக தோட்டம் அமைக்கும் பணிகளை செய்யத் துவங்கினேன்.
மலேஷிய
தலைநகரான கோலாலம்பூரில் உள்ள தமிழர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளுக்கு
அலங்காரத் தோட்டம் அமைக்கும் பணிகளை செய்து கொடுத்தேன்.
மலேஷியாவில்
நிற்க நேரம் இல்லாமல், தோட்டம் அமைக்கும் பணிகள் வந்துகொண்டே இருக்கும்.
மற்றவர்களைவிட என் பணி தனியாக தெரியும்படி இருக்கும். காரணம், நான் இயற்கை
இடுபொருட்களை மட்டுமே பயன்படுத்துவேன்.
கடந்த 2020ல் கொரோனா
நேரத்தில், மலேஷியா தோட்ட பராமரிப்பு பணிகளை, அங்குள்ள நண்பர்களிடம்
ஒப்படைத்துவிட்டு சென்னை திரும்பினேன். முதலில், மதுரவாயல் பகுதியில்
நர்சரி வைத்திருந்தேன்.
பெரிய இடம் தேவைப்பட்டதால், இந்த வாடகை
இடத்துக்கு மாற்றினேன். அரசியல்வாதிகள், சினிமா, சின்னத்திரை
நட்சத்திரங்கள் என்று, இந்தப் பகுதி வழியாக செல்வோர், நர்சரிக்குள் வந்து
செடிகள் வாங்கிச் செல்கின்றனர்.
என்னை பொறுத்தவரை செடி வாங்குவதற்கு
யார் வந்தாலும், எதற்கு செடி வாங்குகின்றனர், அதை எப்படி வளர்ப்பர் என்று
தீர விசாரித்து தான் கொடுப்பேன்.
நர்சரிக்கு நடுவில் சிறுதானிய
உணவகமும் நடத்தி வருகிறேன். சாப்பிட வருவோர் செடி வாங்கிச் செல்வர்; செடி
வாங்க வருவோர் சாப்பிட்டுச் செல்வர்.
செடி விற்பனை, உணவகம், தோட்ட
பராமரிப்பு வாயிலாக எனக்கு வருமானம் வருகிறது. நான் பெற்றதில் ஒரு பகுதியை,
மக்களுக்கு திருப்பிக் கொடுக்க நினைக்கிறேன்.
ஆகையால், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பும் மரக்கன்றுகளை, 5 ரூபாய்க்கு கொடுத்து வருகிறேன்.
மேலும், பள்ளி, கல்லுாரி, பொது இடங்களில் மரக்கன்றுகள் வைக்க இலவசமாகவும் கொடுத்து வருகிறேன்.
அப்துல்
கலாம் அய்யா மரம் வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசி வந்தார்.
அவரின் பசுமைக்கனவை, என்னால் முடிந்தவரை நிறைவேற்றி வருகிறேன்.
தொடர்புக்கு:
90036 45517