PUBLISHED ON : மார் 28, 2026 02:31 AM

பிரபல தவில் வாத்திய கலைஞர் அமிர்தவர்ஷினி:
எங்களுடையது ஆறு தலைமுறைகளுக்கும் மேல் இசைக் குடும்பம். வீட்டில் எப்போதும், யாராவது ஒருவர் ஒரு இசைக் கருவியை வாசித்தபடியே இருப்பர். சிறு வயதில் இருந்தே எனக்கும் தவிலின் தாளம் பிடிக்கும்.
என் அப்பா பிரபல நாதஸ்வர கலைஞர் ஏ.பி.மணிசங்கர், அம்மா வயலின் கலைஞர் ஜெயந்தி. பல கச்சேரிகளில் தவிலை பார்த்து, கையில் தாளம் போட்டுக் கொண்டு இருப்பேன்.
என் பெற்றோர் கச்சேரிகளுக்கு தவில் வாசிக்கும், ஆதிச்சபுரம் ஏ.பி.ராமதாஸ் தாத்தா எங்களுக்கு பக்கத்து வீடுதான்.
அவரை பார்க்கும் போது எல்லாம், 'தவில் கற்றுக் கொடுங்க தாத்தா' என்று நச்சரிக்க ஆரம்பித்தேன். ஏதோ விளையாட்டாக கேட்கிறாள் என்று நினைத்து சென்று விடுவார்; நான் விடவில்லை.
ஒரு கட்டத்தில், என் தொந்தரவு தாங்காமல், 'சரி வா உட்காரு' என்று சொல்லி, முதலில் கையில் தாளம் போட்டு தான் ஆரம்பிக்கணும் என்று, ஒரு பாடத்தை சொல்லிக் கொடுத்து விட்டு வீட்டுக்கு செல்வார்.
நான் அவர் பின்னாடியே சென்று, அவருக்கு அதை போட்டுக் காட்டி, 'அடுத்ததை சொல்லிக் கொடுங்கள்' என்று கேட்பேன்.
அப்போது என் வயது, 7. அதன்பின், ராமதாஸ் தாத்தா முழுமையாக சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். என், 10வது வயதில் முதல் கச்சேரி, ஹரித்துவாரமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் நடந்தது.
தவிலை துாக்கி கையாள்வதற்கே தனியா க சாப்பிட வேண்டும். மடியில் வைத்து மணிக்கணக்கில் வாசிப்பது மிகச் சிரமம். வாசிப்பதற்கு பயிற்சி எடுப்பதை போலவே, பராமரிப்பதற்கும் பயிற்சி தேவை.
பெற்றோர் வாசிக்கும் கச்சேரியில், ராமதாஸ் தாத்தா ஒரு தவிலும், நான் இன்னொரு தவிலும் வாசிப்பேன்.
தியாகராஜர் ஆராதனை, திருவையாறு தமிழிசை விழா என்று நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.
பிரபல புல்லாங்குழல் கலைஞர் மாலா சந்திரசேகர், வயலின் கலைஞர் கன்னியாகுமரி போன்ற மூத்த கலைஞர்கள் பலரும் என் மீது பெரும் பிரியம் கொண்டு, தங்கள் கச்சேரிகளுக்கு விரும்பி அழைத்து வாசிக்க வைக்கின்றனர்.
கங்கைகொண்ட சோழபுரம் விழாவுக்கு, பிரதமர் மோடி வந்த போது வாசித்தேன். இப்போது, 'யுவ தாள் தரங்' என்று ஒரு புதுவிதமான குழுவை உருவாக்கி உள்ளோம்.
வழக்கமாக, தவிலை பக்கவாத்தியமாக பயன் படுத்துவர். ஆனால், எங்கள் கச்சேரியில் தவில் தான் பிரதான வாத்தியம். இது மட்டுமில்லாமல், பெண்கள் மட்டுமே வாசிக்கிற ஒரு குழுவையும் ஆரம்பித்து இருக்கிறோம்.
