PUBLISHED ON : அக் 17, 2024 12:00 AM

மும்பையில் உள்ள, ஏ.பி.எம்.சி., மார்க்கெட்டில், வெற்றிகரமாக தேங்காய் வியாபாரம் செய்து வரும், துாத்துக்குடி மாவட்டம், வாழவல்லான் என்ற ஊரைச் சேர்ந்த, சங்கர் ராஜ்: கடந்த, 1984ல் பட்டப் படிப்பை முடித்துவிட்டு, அடுத்து என்ன செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, மும்பையில் வசிக்கும் எங்கள் ஊர்க்காரர்கள் ஊருக்கு வந்திருந்தனர். அவர்கள்தான் என்னை அழைத்தனர்.
அவர்களுக்கு, மும்பை அந்தேரி பகுதியில், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் தேங்காய் கடை இருந்தது.
அந்த கடையில் சில மாதங்கள் வேலை செய்தேன். அதன்பின், தெருவில் சில்லரை வியாபாரத்தை ஆரம்பித்தேன். அப்போது உறவினர் ஒருவர், மொத்த வியாபாரக் கடை உரிமையாளரிடம், 'இவன் கேட்கும் பொருட்களை, கடனில் கொடுங்கள்' என்று சொல்லி சென்றார்.
அப்படித்தான் என் வியாபாரம் துவங்கியது. அதில் எனக்கு வருமானமும், லாபமும் கிடைக்க துவங்கியது. இதில் கிடைத்த அனுபவத்தை வைத்து, வியாபாரத்தை விரிவுபடுத்த முடிவு செய்தேன்.
அந்தேரியில் வாடகைக்கு ஒரு கிடங்கு எடுத்து, மொத்த சந்தையில் இருந்து லாரிகளில் வாங்கி வரப்படும் வெங்காயம், உருளைக் கிழங்கு மற்றும் தேங்காயை சேமித்து, அங்கிருந்து சிறிய வாகனங்களில் அருகில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்ய ஆரம்பித்தேன்; வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
அப்போது, சிறிது சிறிதாக பங்குச் சந்தையிலும் முதலீடு செய்து வந்தேன். அவ்வாறு சேர்த்த பணத்தில், 1 கோடி ரூபாயை எடுத்து, 2017ல் தேங்காய் மொத்த வியாபாரத்தை துவங்கினேன். தமிழகத்தில் இருந்து மும்பைக்கு தேங்காய்கள் வந்து சேர, இரண்டு நாட்கள் பிடிக்கும்.
இடைப்பட்ட நேரத்தில் தேங்காய் விலையில் மாற்றம் ஏற்பட்டு விடுகிறது; இதனால் இழப்பு ஏற்பட்டது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, இங்கிருக்கும் வியாபாரிகள் சேர்ந்து, நேரடியாக கொள்முதல் செய்ய ஆரம்பித்தோம்.
தமிழகத்தின் பேராவூரணியில், தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்திருக்கிறோம்; அங்கும் கிடங்கு இருக்கிறது.
தமிழகத்தில் இருந்து, 80 சதவீதம் தேங்காய்களை கொள்முதல் செய்கிறோம். மஹாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் மற்றும், 'டி மார்ட்' போன்ற கடைகளுக்கும் சப்ளை செய்கிறோம்.
இதுதவிர, மும்பை முழுக்க லாரிகளில் எடுத்துச் சென்று, தேங்காயை கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறோம்.
இன்று தேங்காய் வியாபாரத்தில் முழுமையாக கவனம் செலுத்தினாலும், ஏற்கனவே செய்து வந்த வெங்காயம், உருளைக்கிழங்கு வியாபாரத்தையும் தொடர்ந்து செய்து வருகிறோம். ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது.

