/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
மண்புழு உரம் விற்பனையில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் லாபம்!
/
மண்புழு உரம் விற்பனையில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் லாபம்!
மண்புழு உரம் விற்பனையில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் லாபம்!
மண்புழு உரம் விற்பனையில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் லாபம்!
PUBLISHED ON : அக் 22, 2025 12:00 AM

மண்புழு உரம் தயாரிப்பு தொழிலில் கணிசமான லாபம் ஈட்டும், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்த ரேவதி:
என் சொந்த ஊர் மதுரை; கணவர் ஊர் நிலக்கோட்டை. எம்.பில்., முடித்துள்ளேன்; திருமணத்துக்கு பின், தனியார் கல்லுாரியில் விரிவுரையாளராக, ஏழு ஆண்டுகள் பணியாற்றினேன். குடும்ப பொறுப்புகளையும், குழந்தையின் படிப்பையும் கவனிக்க வேண்டி இருந்ததால், வேலையை விட்டேன்.
வீட்டில் இருந்தபடியே, ஏதாவது தொழில் செய்யலாமா என்ற தேடலில் இறங்கியபோது, குறைந்த முதலீட்டில் மண்புழு உரம் தயாரிப்பு எனக்கு ஏற்ற தொழிலாக தெரிந்தது.
என் மாமனாருக்கு சொந்தமான இடத்தில், 2018ல், 30,000 ரூபாய் முதலீட்டில், மண்புழு உரம் உற்பத்தி நிலையத்தை துவக்கினேன். எங்களிடம் உள்ள இரண்டு மாடுகள் வாயிலாக கிடைக்கும் சாணத்தை பயன்படுத்தி, ஆரம்பத்தில் குறைவான அளவு மண்புழு உரம் தயார் செய்தேன்.
அதை, சோதனை முயற்சியாக எங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், மரங்களுக்கும் வைத்தேன். வழக்கத்தை விட கூடுதல் விளைச்சல் கொடுத்ததை கண்கூடாக பார்த்தேன்.
எங்களுக்கு தெரிந்த சில விவசாயிகளுக்கு மண்புழு உரம் கொடுத்தேன். அவர்கள் அதை பயன்படுத்திய பின், 'மிகவும் அருமையாக இருக்கிறது. பயிர்கள் செழிப்பாக வளருது' என கூறினர். விற்பனை வாய்ப்புகள் அதிகரிக்க ஆரம்பித்தன. நிச்சயம், இந்த தொழிலில் பெரிய அளவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.
சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தியதன் வாயிலாகவும், வேளாண் கண்காட்சிகள், விதை திருவிழா நிகழ்ச்சிகள் வாயிலாகவும், பல விவசாயிகளின் தொடர்புகள் கிடைத்தன. சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக மாடித்தோட்டம் அமைப்பவர்களும் என்னிடம் உரம் வாங்கினர்.
ஆண்டுக்கு சராசரியாக, 150 டன் மண்புழு உரம் கிடைக்கிறது. டன் ஒன்றுக்கு சராசரியாக, 7,000 ரூபாய் என, விற்பனை செய்வதன் வாயிலாக, 10.50 லட்சம் ரூபாய் வருமானம் ஆண்டு க்கு கிடைக்கிறது. அனைத்து செலவுகளும் போக, ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
மண்புழு உரம் உற்பத்தியில் ஈடுபட விரும்புவோர், தோட்டத்தில் சிறிய குழி தோண்டி, அதில் ஈர சாணத்தை போட்டு, சர்க்கரை கரைசல் மற்றும் தயிர் கரைசலை ஊற்றி, மண்ணை போட்டு மூடி வைக்க வேண்டும்.
அந்த குழியின் சுற்றுப்பகுதியில் தண்ணீர் தெளித்து ஈரம் ஏற்படுத்த வேண்டும். 15 நாட்களுக்கு பின், குழியை தோண்டி பார்த்தால், நிறைய மண்புழுக்கள் உருவாகி இருக்கும்.
தொடர்புக்கு:
90422 12077