/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பிடித்து செய்தால் எந்த காரியமும் மன அழுத்தத்தை போக்கிடும்!
/
பிடித்து செய்தால் எந்த காரியமும் மன அழுத்தத்தை போக்கிடும்!
பிடித்து செய்தால் எந்த காரியமும் மன அழுத்தத்தை போக்கிடும்!
பிடித்து செய்தால் எந்த காரியமும் மன அழுத்தத்தை போக்கிடும்!
PUBLISHED ON : அக் 24, 2025 12:00 AM

மருத்துவம் மற்றும் சமையல் கலையில் அசத்தும், சேலம் மாவட்டம், ஓமலுாரைச் சேர்ந்த நித்யா பிராங்க்ளின்: சேலம், அரசு மருத்துவக் கல்லுாரியில் மருத்துவம் படித்தேன்; படிப்பு முடிந்ததும் திருமணம் ஆனது. கணவர் ஐ.டி., துறையில் வேலை பார்ப்பதால், திருமணத்திற்கு பின் சென்னை வந்தோம்; குழந்தை பிறந்ததும், சென்னை விஜயா மருத்துவமனையில் பி.ஜி., படித்து முடித்து, அதே மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்து, இன்றைக்கு குழந்தைகள் நல மருத்துவ பிரிவின் துணைத் தலைவராக இருக்கிறேன்.
எனக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்க உதவுவது, சமையல் தான். 'மாஸ்டர் செப் ஆஸ்திரேலியா' என்ற, 'டிவி' நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தேன்; பல ஆண்டுகளாக, பல நாடுகளில் நடக்கும் நிகழ்ச்சி இது.
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில், சமூக வலைதளங்களில் சமையல் குறிப்புகளை பதிவிட ஆரம்பித்தேன்; அதை பார்த்து தான், 'மாஸ்டர் செப்' தமிழ் நிகழ்ச்சியில் இருந்து அழைப்பு வந்தது.
இந்த நிகழ்ச்சிக்காக ஆறு மாதங்கள் ஒதுக்க வேண்டும். முதலில் தயங்கினாலும், 'தேடி வரும் வாய்ப்பை தவறவிடக்கூடாது...' என்று ஒப்புக் கொண்டேன். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்; பல கட்ட தேர்வுகளுக்கு பின், இறுதியாக தேர்வானவர்களில் நானும் ஒருத்தி.
நிகழ்ச்சியில், ஒரு அணிக்கு மதிய உணவிற்கான தேர்வு வைத்து, என்னை தலைவராக நியமித்தனர்; அத்தேர்வில், நவீன உபகரணங்கள் பயன்படுத்தாமல், பாரம்பரிய கருவிகளை வைத்து சமைக்க வேண்டும்.
அரிசி மாவில் செய்த நுாடுல்ஸை அரிவாள்மனையில் வெட்டி, 'லக்ஸா' என்ற மலேஷிய உணவை செய்து வெற்றி பெற்றோம். நடுவர்கள் மிகவும் பாராட்டியதும், முதன் முறையாக நம்பிக்கை வந்தது.
நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில், தமிழகத்தின் பிரபல உணவுகளை மாடர்னாக செய்து கொடுத்தேன். சூப்பராக சமைத்தும், விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருந்தது. ஆயினும், கற்றுக்கொண்ட விஷயங்களையும், அனுபவங்களையும் வைத்து, அடுத்த கட்டத்துக்கு போயிட்டே இருக்கணும் என்று புரிந்து கொண்டேன்.
இப்போது, ஆச்சி மசாலா குழுமத்தின், சைவ உணவகத்திற்கு சமையல் ஆலோசகராக இருக்கிறேன். சமையலை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பது முக்கியம். உங்களுக்கு சமையல் செய்வது பிடிக்கும் என்றால், அதுவே உங்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும் விஷயமாக இருக்கும்.
அதை ஒரு வேலையாகவோ, அலுப்புடனோ, சலிப்புடனோ செய்தால், மன அழுத்தமாக மாறும்; பிடித்து செய்தால், எந்த காரியமும் நம் மன அழுத்தத்தை போக்கக் கூடியது தான்!

