PUBLISHED ON : மே 09, 2026 12:00 AM

மருதாணி போடும் தொழிலில் அசத்தும், 'மெஹந்தி ஆர்ட்டிஸ்ட்' லட்சுமி:
கல்லுாரி படிப்பு முடித்ததுமே எனக்கு திருமணம் ஆனது. கணவர் மாற்றுத்திறனாளி; அவருக்கு குறைவான சம்பளம் தான் வந்தது. மகன் பிறந்த நான்கு மாதங்களில், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன்; என் வருமானம் குடும்பத்துக்கு மிக உதவியாக இருந்தது. இரண்டு மாதங்கள் நன்கு சென்றது.
திடீரென ஒருநாள், மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்று மூன்று நாள் விடுமுறை எடுத்தேன். நான்காவது நாள் வேலைக்கு சென்றபோது, 'இனி வேலைக்கு வர வேண்டாம்' என்று சொல்லி விட்டனர்.
சொந்தமாக தொழில் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். குழப்பமான அந்த நேரத்தில், என் தோழியின் திருமணம் வந்தது.
அங்கு வந்தோருக்கு இலவசமாக மருதாணி போட்டு விட்டேன். திருமணத்திற்கு வந்திருந்த பலருக்கும் நான் போட்ட மருதாணி டிசைன் பிடித்திருந்தது. அதுதான் என் வாழ்க்கையை மாற்றியது.
'உன் கையில் ஏதோ மாயாஜாலம் இருக்கிறது' என்று ஒரு பெண் பாராட்டினார். இதையே நம் தொழிலாக மாற்றினால் என்ன என்று யோசித்தேன். 2016ல் மருதாணி டிசைன் போடுபவராக மாறினேன்.
வேலைக்கு செல்லும் போது என் மாத சம்பளம் 5,000 ரூபாய் தான். ஆனால், இப்போது மாதம் பல லட்சங்களில் சம்பாதிக்கிறேன். 'லட்சுமி மெஹந்தி கலைக்கூடம்' என்ற பெயரில், நிறுவனம் ஒன்றையும் ந டத்தி வருகிறேன்.
சம்பளம் வாங்கிய நான், இன்று மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன். ஒரு கெடுதல் நடந்தால், அதற்கு பின் நல்லது நடக்கும்.
கஷ்ட காலத்தில் நாம்தான் தைரியமாக இருந்து, விடாப்பிடியாக போராடி வெற்றி பெற வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவர். நானும் அதேபோன்று போராடி வெற்றி பெற்று, என் குடும்ப சூழ்நிலையை மாற்றி உள்ளேன்.
இரவில் ஆர்டர் வந்தாலும், பயம் இல்லாமல் தனியாக செல்கிறேன். என் கணவர், ஓய்வு நேரங்களில் என்னுடன் துணைக்கு வருவார். மருதாணி டிசைன் போடுவதில், அரபு ஸ்டைல், இந்தியா ஸ்டைல், மொராக்கன் ஸ்டைல், இந்தோ - அரேபியன் ஸ்டைல் என்று பல வகைகள் இருக்கின்றன.
பூ வரைவது, மயில் படம், நகைகள் மாதிரியான உருவம், திருமண பெண்களுக்கு ஏற்ற டிசைன், பண்டிகை காலங் களுக்கு தகுந்த மாதிரி அதிகமான டிசைன்களும் இருக்கின்றன.
அதேபோல், விஷேச வீடுகள், திருமண மண்டபங்களில் கோலம் போடும் ஆர்டர்கள் எடுத்து, கோலங்கள் போட்டு தருகிறேன்.
நான் போடும் அந்த கோலங்களை, காணொளிகளாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் அதிகமான ஆர்டர்கள் கிடைக்கின்றன. மெஹந்தி டிசைனுக்காக, இளம் சாதனையாளர் விருதையும் வாங்கி உள்ளேன்.
