/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
லாபம் தரும் சிவப்பு முத்துச்சோளம்
/
லாபம் தரும் சிவப்பு முத்துச்சோளம்
PUBLISHED ON : மே 10, 2026 12:00 AM

நாட்டு ரக சிவப்பு முத்துச்சோளம் சாகுபடி செய்து, நிறைவான லாபம் பார்த்து வரும், பெரம்பலுாரை சேர்ந்த, 39 வயதான ராஜா: நாங்கள் விவசாய குடும்பம். 2 ஏக்கர் சொந்த நிலத்தில் அப்பா விவசாயம் செய்து வந்தார். பொருளாதார சிக்கல் காரணமாக, நிலத்தை விற்று கடனை அடைத்தார். குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழலில், நான் திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன்; ஊதியம் மிகவும் குறைவு.
ஒரு கட்டத்தில் மிகுந்த மன உளைச்சலில் வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்து, பால் கூட்டுறவு சொசைட்டியில் தற்காலிக ஊழியராக பணியில் சேர்ந்தேன். தினமும் விவசாயிகளை சந்தித்து பேசக்கூடிய சூழல் அமைந்ததால், நாமும் விவசாயம் செய்யணும் என்ற ஆசை வந்தது.
அதனால், 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தேன். எங்கள் ஊரை சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர், அரை கிலோ சிவப்பு முத்துச்சோள விதைகளை கொடுத்து, 'இதை சாகுபடி செய். இதற்கு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவையில்லை; போதுமான மழை இல்லை என்றாலும் வறட்சியை தாங்கி, ஓரளவுக்கு விளைந்து நல்ல விலை கிடைக்கும்' என்றார்.
அவர் கொடுத்த அரை கிலோ சிவப்பு முத்துச் சோள விதையை, 5 சென்ட் பரப்பில் விதைத்தேன். அதில் கிடைத்த 20 கிலோ சோளத்தில், 4 கிலோவை அந்த விவசாயியிடமே கொடுத்தேன்.
மீதி 16 கிலோ விதைகளை, 2 ஏக்கர் பரப்பில் விதைத்தேன். விளைந்ததில், 80 கிலோவை என் தேவைக்கு வைத்துக் கொண்டேன்.
மீதியிருந்த 1,070 கிலோ சோளத்தில் 60 சதவீதத்தை, ஒரு கிலோ 100 ரூபாய் என்று விற்பனை செய்தேன். 40 சதவீத சோளத்தை விதைகளாக தரம் உயர்த்தி, ஒரு கிலோ 250 ரூபாய் வரை விற்பனை செய்தேன். அதில் நல்ல லாபம் கிடைத்ததால், சாகுபடி பரப்பை அதிகரித்தேன்.
சிவப்பு முத்துச்சோளம் விதைத்து, 120 நாட்களில் கதிர்கள் முதிர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராகிவிடும். கதிர்கள் முற்றுவதற்கு முன், பால் சோளமாக விற்பனை செய்தால், மக்கள் விரும்பி சாப்பிடுவர்; உடம்புக்கு மிகவும் நல்லது.
அதனால், விதைத்த 90 நாட்களில், 3,000 சோளக்கதிர்களை பால் நிலையிலேயே ஒடித்து விற்பனை செய்தேன்; 75,000 ரூபாய் வருமானம் கிடைத்தது. பின், முதிர்ச்சி அடைந்த சோளக்கதிர்களை அறுவடை செய்து மணிகளை பிரித்தெடுத்தேன்.
இதில், 10 ஏக்கர் பரப்பிலும் சேர்த்து, 100 கிலோ எடையில் 100 மூட்டை மகசூல் கிடைத்தது.
விதைக்கு எடுத்து வைத்தது போக மற்றவற்றை விற்பனை செய்ததில், மொத்தம் 14 லட்சம் ரூபாய் கிடைத்தது; அதில் எல்லா செலவுகளும் சேர்த்து 2 லட்சம் போக, நான்கு மாதங்களில் 12 லட்சம் ரூபாய் லாபமாக கிடைத்து வருகிறது.
தொடர்புக்கு 80124 23005
*****************************
உங்கள் வெற்றி பதில் சொல்லும்!
சென்னையின், 'டாப் 10' சிகை அலங்கார நிபுணர்களில் ஒருவரும், 'ஸாஸில்' சலுான்களின் இயக்குநருமான, 35 வயதான கார்த்திக்:
வணிகவியலில் இளங்கலை படித்து முடித்தேன். பாடி பில்டிங்கில், 'மிஸ்டர் தமிழ்நாடு' பட்டம் ஜெயித்தேன்.
அடுத்த போட்டிக்காக தயாராகி கொண்டிருந்தபோது முதுகெலும்பில் அடிபட்டது;
அதனால் நிறுத்தி விட்டேன். 'படிப்புக்கேத்த வேலைக்கு போ' என்று சொல்லும்
வழக்கமான அறிவுரை எங்கள் வீட்டி லும் இருந்தது.
முயற்சி
செய்ததில், வங் கி வேலை கிடைத்தது. காலை முதல் மாலை வரை ஒரே இடத்தில்
உட்கார்ந்து, ஒரே மாதிரியான வேலை பார்ப்பது மனதிற்கு ஒட்டவில்லை. பெற்றோர்
திட்டினாலும் பர வாயில்லை என்று சிகை அலங்கார பயிற்சி முடித்தேன்.
'நல்லா யோசிச்சியா... இதெல்லாம் சரியா வருமா'ன்னு பெற்றோர் கேட்டனர்.
'இதுதான் எனக்கான கடைசி முயற்சி. இதில் நான் நிச்சயம் ஜெயித்து விடுவேன்'
என்று சொன்னேன். 8,000 ரூபாய் சம்பளத்தில், பிரபல சலுானில் மேலாளராக
வேலைக்கு சேர்ந்தேன்.
இன்று தமிழகம் முழுக்க, 20க்கும் மேற்பட்ட சலுான்கள் நடத்துகிறேன். மக்கள் விரும்பும் சிகை வடிவமைப்பாளராக வளர்ந்து நிற்கிறேன்.
என் வேலைகளை, மொபைல் போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில்
பதிவிடுவேன். ஒரு பெண்மணி ஒவ்வொரு ஆண்டும் சிகை அலங்காரம் செய்து கொள்ள
வருவார்.
அவருக்கு நான் செய்த கொரியன் சிகை அலங்கார வீடியோவை
பலரும் பார்த்தனர். எல்.கே.ஜி., படிக்கும் குட்டி பாப்பா, என் வீடியோக்களை
பார்த்து விட்டு, தன் பெற்றோரிடம் சொல்லி, என்னிடம் முடி வெட்டிக் கொண்டது.
முதுகில் அடிபட்டவுடன், 'உடம்பை மிகவும் வருத்திக்
கொள்ளக்கூடாது' என்று மருத்துவர் கூறிவிட்டார். ஒரு நாளைக்கு, 12 மணி நேரம்
நின்றபடியே வேலை செய்கிறேன்.
ஆ ண்களுக்கு சிகை அலங்காரம்
செய்யணும்னா, 360 டிகிரியில் நான் கழுத்தை திருப்பணும். பெண்களுக்கு
அப்படியில்லை. அதனால் பெண்களுக்கு மட்டும் சிகை அலங் காரம் செய்கிறேன்.
ஒரு காலத்தில், இளக்காரமாக பார்க்கப்பட்ட இந்த வேலை, இன்று, 'ஹேர் ஸ்டைலிஸ்ட்' என்று, கவுரவமான அடையாளமாக மாறி இருக்கிறது.
எவர் வேண்டுமானாலும் உங்களை அவமானப்படுத்தலாம்; முதுகிற்கு பின் பேசலாம்;
தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளலாம்; ஆனால், உங்கள் கனவை மட்டும் விட்டு
விடாதீர்கள்.
ஏனெனில், உலகம் உங்களை உயர்ந்து பார்க்க போகிற ஒரு
தருணத்தை, உங்கள் உழைப்பு கண்டிப்பாக உருவாக்கித் தரும்;
அவமானப்படுத்தியவர்களுக்கும் உங்கள் வெற்றியே பதில் சொல்லும்.
தொடர்பு எண்: 98888 46777

