/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ஆட்டோக்காரன் பொண்ணு சர்வதேச அளவில் பரிசு வாங்குகிறது!
/
ஆட்டோக்காரன் பொண்ணு சர்வதேச அளவில் பரிசு வாங்குகிறது!
ஆட்டோக்காரன் பொண்ணு சர்வதேச அளவில் பரிசு வாங்குகிறது!
ஆட்டோக்காரன் பொண்ணு சர்வதேச அளவில் பரிசு வாங்குகிறது!
PUBLISHED ON : அக் 29, 2024 12:00 AM

குத்துச்சண்டையில் சர்வதேச அளவில் பதக்கங்களை குவிக்கும், சென்னை கொடூங்கையூரைச் சேர்ந்த, 12 வயது சிறுமி ஜனுக் ஷனா: கடந்த ஐந்து ஆண்டுகளாக குத்துச்சண்டை கற்று வருகிறேன். வாங்காத அடி இல்லை; காயம் படாத இடமில்லை. நமக்கு பிடித்ததை செய்யும்போது, கஷ்டம் தெரியாது என சொல்வர்.
எனக்கும் அதுமாதிரி தான். இந்த டிரஸ், கிளவுசை மாட்டிக்கிட்டு கிரவுண்டில் நிற்கும் போது, 100 யானை பலம் கிடைத்த மாதிரி தோன்றும்.
சிறு வயதில், என் அக்காவை அடித்தபடியே இருப்பேன். அதனால், 'குத்துச்சண்டை கிளாசில் சேர்த்துடுவேன்' என, அம்மா மிரட்டுவாங்க. குத்துச்சண்டை என்றால் என்ன; எப்படி விளையாடுவாங்க என, 'டிவி'யில், 'யு டியூப்'பில் தேட ஆரம் பித்தேன்.
அடுத்த முறை அக்காவை அடிச்சதுக்காக, அம்மா திட்டுவதற்கு முன் நானே முந்திக் கொண்டு, 'குத்துச்சண்டை கற்றுக் கொள்ள வேண்டும்' என்று கூறினேன்.
நான் விளையாட்டுக்கு சொல்வதாக அம்மா நினைத்துக் கொண்டார். ஆனால், தொடர்ந்து கேட்டபடியே இருந்ததால், குத்துச்சண்டை வகுப்பில் சேர்த்து விட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளோர், உறவினர்கள் என அனைவரும் விமர்சனம் செய்தனர். எங்க அப்பா ஆட்டோ டிரைவர். 'ஆட்டோக்காரன் பொண்ணு குத்துச்சண்டை கற்றுக் கொண்டு ஒலிம்பிக்கிலா விளையாடப் போகுது?' என்றனர்.
ஆனால், அப்பா என்னை உற்சாகப்படுத்தியபடியே இருப்பார். குத்துச்சண்டை கற்றுக் கொள்வது ஈசி இல்லை.
நிறைய அடிபடும். எனக்குமே ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டமாகத் தான் இருந்தது. ஆனாலும், அடுத்த நாளே வகுப்புக்கு கிளம்பி விடுவேன்.
சின்ன சின்ன போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்றேன். அதன்பின், சர்வதேச போட்டிகளுக்கு செல்ல வாய்ப்பு வந்தது. ஆனால், அங்கு செல்வதற்கு பிளைட் டிக்கெட், தங்கும் இடம் என லட்சக்கணக்கில் ரூபாய் தேவைப்பட்டது.
அதை, அப்பா கடன் வாங்கி செய்து விடுவார் என்றாலும், அந்த கடனை அடைப்பதற்கு அப்பா, 24 மணி நேரமும் ஆட்டோ ஓட்ட வேண்டும். அதனால், நான் செல்ல மறுத்து விடுவேன்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு நடத்திய சர்வதேச போட்டிகளில் நான்கு முறை பங்கேற்றுள்ளேன். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் இதுவரை ஒன்பது தங்கப் பதக்கங்கள், கடந்தாண்டு நடந்த 'கேலோ இந்தியா' போட்டியில் வெள்ளிப் பதக்கம் வாங்கியுள்ளேன்.
ஒவ்வொரு முறை நான் பரிசு வாங்கிட்டு வரும்போதும், அப்பா அவரது நண்பர்களிடம் காட்டி சந்தோஷப்படுவார். 'ஆட்டோக்காரன் பொண்ணு சர்வதேச அளவில் பரிசு வாங்குகிறது' என சொல்லும் அளவுக்கு நிலைமை மாறி இருக்கிறது.

