/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பிரியாணி கடையை 'பிராண்ட்' ஆக மாற்ற வேண்டும்!
/
பிரியாணி கடையை 'பிராண்ட்' ஆக மாற்ற வேண்டும்!
PUBLISHED ON : நவ 02, 2024 12:00 AM

சென்னை, குரோம்பேட்டை நடைபாதையில், 'சிஸ்டர்ஸ் பிரியாணி' என்ற பெயரில் தள்ளுவண்டி கடை நடத்தும் வனிதா:
எம்.காம்., படித்திருக்கிறேன். படிப்பு முடிந்ததும், திருமணம் ஆகி அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் ஆனதால், வேலைக்கு செல்வது குறித்து யோசிக்க வில்லை. ஆனால், ஏதாவது ஒரு பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
'யு டியூப்' பார்த்து சமைக்க கற்றுக் கொண்டேன். 'நீ பிரியாணி கடை ஆரம்பிக்கலாம்'னு என் கணவர் அடிக்கடி சொல்வார். திடீரென ஒருநாள் அவர், 'நாளையில் இருந்து தள்ளுவண்டியில் பிரியாணி கடை ஆரம்பிக்கப் போறோம்; நீ தான் முதலாளி'ன்னு சொல்லிட்டாரு.
முதல் நாள், 2,000 ரூபாய் செலவழித்து, தரமான பொருட்கள் வாங்கி, 2 கிலோ பிரியாணி செய்தேன். நானும், கணவரும் மாலை 6:00 மணிக்கு கடையை ஆரம்பித்தோம்.
இரவு 8:00 மணி வரை ஒரு வாடிக்கையாளர் கூட வரவில்லை. கிட்டத்தட்ட மனசொடிஞ்சு அழும் நிலைக்கு வந்து விட்டேன். பிரியாணியை விற்றே ஆக வேண்டும் என முடிவு செய்து, தயக்கத்தை உடைத்து, கூவிக்கூவி விற்றேன்.
அவ்வளவு சிரமப்பட்டும், ஒரு கிலோ தான் விற்க முடிந்தது. அடுத்த நாளும், 2 கிலோ பிரியாணியுடன் அதே இடத்துக்கு சென்றேன்; திரும்பவும் நஷ்டம். ஆனால், நஷ்டத்தோட அளவு சிறிது குறைந்தது. ஒரு வார போராட்டத்துக்குப் பின், பிரியாணி நன்கு விற்பனையானது.
காலை, 10:00 மணிக்கு சமைக்க ஆரம்பித்து, மதியம், 12:00 மணிக்கு பிரியாணியை வியாபாரத்துக்கு எடுத்து செல்வேன். வியாபாரம் முடித்து திரும்பி, மாலை 4:00 மணிக்கு மீண்டும் சமைக்க துவங்கி, இரவு, 7:00 மணிக்கு வியாபாரத்தை ஆரம்பிப்பேன்.
இரவு, 10:00 மணிக்கு வியாபாரத்தை முடித்து, வீட்டுக்கு செல்ல நள்ளிரவு, 12:00 மணியாகும். என்னிடம் பிரியாணி வாங்கி சாப்பிட்ட மக்கள், அதன் சுவை பிடித்ததால், திரும்ப திரும்ப வாங்க ஆரம்பித்தனர்.
சில யு டியூபர்களும், என் கடையை பிரபலப்படுத்தினர். அதன் வாயிலாக விற்பனை சிறிது சிறிதாக அதிகமானது. கிடைத்த லாபத்தில் பெரிய பாத்திரங்கள் வாங்கினேன்; 35,000 ரூபாய்க்கு மூன்று சக்கர வண்டி ஒன்றும் வாங்கினேன்.
தற்போது ஒரு நாளைக்கு, 23 முதல் -25 கிலோ வரை பிரியாணி விற்பனை ஆகிறது; அரை பிளேட், 140 ரூபாய். பிசினஸ் ஆரம்பித்து ஏழு மாதங்கள் ஆகின்றன. ஓரளவு வருமானம் பார்க்க ஆரம்பித்ததால், பி.காம்., படித்துள்ள என் அண்ணனும், தன் வேலையை விட்டுவிட்டு, இப்போது என்னுடன் பிரியாணி தொழிலுக்கு வந்துவிட்டார்.
தற்போது மாதம், 50,000 ரூபாய் சம்பாதிக்கிற அளவுக்கு எங்கள் நிலைமை மாறியிருக்கு. இன்னும் பெரிய அளவில் பிரியாணி கடை திறந்து, 'பிராண்டாக' மாற்ற வேண்டும் என, நிறைய கனவுகள் இருக்கிறது!

