'நஷ்டத்தில் துவங்கிய தொழிலில் இன்று லட்சங்களில் வர்த்தகம்!'
'நஷ்டத்தில் துவங்கிய தொழிலில் இன்று லட்சங்களில் வர்த்தகம்!'
PUBLISHED ON : செப் 05, 2026 12:21 AM

'ஸ்ரீ அழகர் என்டர் பிரைசஸ்' நிறுவனம் வாயிலாக, சீருடைகள் தைத்து கொடுக்கும் தொழிலில் சாதனை படைத்து வரும் திருச்சி, தென்னுாரைச் சேர்ந்த திலகவதி:
நான் பிறந்தது, புதுக்கோட்டை மாவட்டம். பிளஸ் 2 வரை படித்துள்ளேன். 2003ல் திருமணமாகி, குடும்பத்துடன் திருச்சிக்கு குடிபெயர்ந்தோம். கணவரின் பேச்சும், நடவடிக்கையும் பிடிக்காததால், இரண்டு குழந்தைகளுடன் தனியே வந்தேன்.
என்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்து, 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில், 2011ல், 'ஷீ கேர்' என்ற நிறுவனம் வாயிலாக வீட்டிலேயே, 'நாப்கின்' தயாரித்து விற்றேன். மூன்று ஆண்டுகளாகியும் நஷ்டம் தான் வந்தது.
அதன்பின், தனியார் மருத்துவமனைகளை அணுகி, மகப்பேறு காலங்களில் பயன்படுத்தும் நாப்கின்கள் தயாரிக்க, 'ஆர்டர்' எடுத்தேன். திருச்சி, தஞ்சை, பெரம்பலுார் மாவட்டங்களில் உள்ள 30 மருத்துவமனைகள் தொடர்ந்து ஆர்டர்கள் கொடுத்தன. ஆனாலும், ஒரே ஒரு தயாரிப்பை மட்டும் விற்பனை செய்ததால், விலை கட்டுப்படியாகவில்லை.
அந்நேரத்தில் கொரோனா ஊரடங்கு வந்ததால், மருத்துவர்களுக்கு தேவையான, பி.பி.இ., எனும் பாதுகாப்பு கவச உடையை முதல் ஆளாக தயாரித்தேன். அதற்கான முதலீட்டுக்கு, மகளிர் திட்ட அதிகாரிகள் உதவியால் ஒரே நாளில், 5 லட்சம் ரூபாய் கடனுதவி கிடைத்தது.
மருத்துவர்கள், கவச உடையை பெறுவதற்காக என் வீட்டின் முன் காத்திருக்கும் அளவுக்கு ஆர்டர்கள் குவிந்தன. அந்த ஓராண்டில் மட்டும் 50 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
அதன்பின், தொழிலை சற்று மாற்றி, தனியார் நிறுவனங்கள், ஹோட்டல்கள், மருத்துவமனை நிர்வாகங்களை அணுகி, அவர்களின் ஊழியர்களுக்கு சீருடைகள் தயாரிக்க ஆர்டர் பெற்றேன். எங்களுடைய தரத்தை பார்த்து, தனி நபர்களும் ஆர்டர்கள் கொடுக்க ஆரம்பித்தனர்.
தையல் தெரிந்த 50 பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தேன். நாங்கள் வெட்டி தரும் துணிகளை, அவர்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று தைத்து தருவர். 'பீஸ்' கணக்கில் அவர்களுக்கு பணம் கொடுத்தேன். அதனால், கடந்தாண்டில் மட்டும், 26 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
என் வாழ்வில் அடுக்கடுக்கான ஏமாற்றங்களை சந்தித்தேன். அவற்றை என் தன்னம்பிக்கையால் மட்டுமே கடந்து வர முடிந்தது. யார் வேண்டுமானாலும், எந்த பொருளையும் எளிதாக உற்பத்தி செய்ய முடியும். ஆனால், அதை விற்பனை செய்யும் யுக்தி தெரியாமல் தான் பலரும் சறுக்குகின்றனர்.
எனவே, முதலில் கம்பெனி ஒன்றில் சேர்ந்து வேலை கற்று, அதில் கிடைக்கும் அனுபவத்துடன் தொழில் துவங்கினால் நிச்சயம் ஜெயிக்கலாம்.
