தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ 'போட்டித்தேர்வு எழுதி அரசு வேலைக்கு செல்ல வேண்டும்!'

'போட்டித்தேர்வு எழுதி அரசு வேலைக்கு செல்ல வேண்டும்!'

'போட்டித்தேர்வு எழுதி அரசு வேலைக்கு செல்ல வேண்டும்!'


PUBLISHED ON : செப் 04, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 04, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தன், 37 வயதில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பிளஸ் 2 தேர்வுக்கு தயாராகி வரும், கோவை மாவட்டம், சின்னபுத்துார் கிராமத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள்:

சிறு வயது முதலே எனக்கு படிக்க பிடிக்கும். 'நல்லா படி சாமி' என அப்பா சொல்லிக் கொண்டே இருப்பார். நான் 7ம் வகுப்பு படிக்கும்போது, அப்பா திடீரென இறந்து விட்டார். அதனால், குடும்பத்தை சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

பள்ளி செல்லாமல் தினசரி கூலி வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். அதன்பின் வீட்டில் திருமணம் செய்து வைத்து விட்டனர். படிக்காமல் நான் பட்ட கஷ்டத்தை, என் இரு குழந்தைகளும் படக்கூடாது என்று, அவர்களை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், குடும்ப பிரச்னையால் கணவரை பிரிந்து, இரு குழந்தைகளுடன் அம்மா வீட்டுக்கு வந்து விட்டேன். தினமும் கூலி வேலைக்கு சென்று வருகிறேன். அதுதான் எங்களுக்கு ஒரே வருமானம். எல்லா நாளும் வேலை இருக்காது.

ஆனாலும், மிகவும் கஷ்டப்பட்டு என் இரு குழந்தைகளையும் வளர்க்கிறேன். தற்போது, என் மகள் சட்டக் கல்லுாரியிலும், மகன் 10ம் வகுப்பும் படிக்கின்றனர். என் மகள் நன்கு படிப்பாள்; பிளஸ் 2 தேர்வில், பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றார்.

அவளை பார்த்து தான் எனக்கு மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. 35 வயதில், 'மீண்டும் படிக்க போகிறேன்' என்று கூறினால், மற்றவர்கள் என்ன சொல்வர் என்ற தயக்கம் இருந்தது; ஆனால் மகனும், மகளும் ஊக்கப்படுத்தினர். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் அரசு பணி தேர்வுக்கு படித்து வருகின்றனர். அவர்கள் தான் எனக்கு படிப்பு சொல்லி தருகின்றனர்.

என், 13 வயதில் நிறுத்திய படிப்பை, 35 வயதில் மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். 36 வயதில் எட்டாம் வகுப்பு தேர்வெழுதி வெற்றி பெற்றேன். அடுத்தாண்டு, 10ம் வகுப்பு தேர்வெழுதி, 223 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்தேன்.

இப்போது, பிளஸ் 2 தேர்வுக்கு படித்து வருகிறேன். தினமும் காலையில் விரைவாக எழுந்து, வீட்டு வேலைகளை முடித்து விட்டு, கூலி வேலைக்கு சென்று விடுவேன். மாலை வந்ததும், வீட்டு வேலைகளை முடித்து, இரவு துவங்கி, நள்ளிரவு வரை படிப்பேன்.

அடுத்து, தொலைதுார கல்வியில் பட்டப்படிப்பு படித்தபடியே, போட்டித்தேர்வு எழுதி அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்து வருகிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us