/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பல் மூலம் பார்வை தரும் மருத்துவர்கள்!
/
பல் மூலம் பார்வை தரும் மருத்துவர்கள்!
PUBLISHED ON : செப் 18, 2025 12:00 AM

'ஆசிட்' வீச்சால் பார்வையிழந்தவர்கள், தொழிற்சாலை விபத்துகளில் அமிலங்கள் பட்டு பார்வை பாதிக்கப்பட்டவர்கள், அதிதீவிர அலர்ஜி நோயால், நிரந்தரமாக பார்வையை பறிகொடுத்தவர்களுக்கு, அவர்களின் பற்கள் வாயிலாக, பார்வையை முழுமையாக மீட்டு தரும், சென்னையைச் சேர்ந்த, 'கோட் ஐ கேர்' மருத்துவமனையின் டாக்டர்கள் கீதா மற்றும் பாஸ்கர் ஸ்ரீனிவாசன்:
கீதா: கடந்த 2003 முதல், இந்த அறுவை சிகிச்சையை செய்து வருகிறோம். லென்சை பிளாஸ்டிக்கால் உருவாக்கி, கண்ணுக்குள் வைத்தால் வெளிச்சம் உள்ளே சென்று பார்வை கிடைத்து விடும். இந்த பிளாஸ்டிக் லென்சை கண்களில் பொருத்த ஒரு ஸ்டாண்ட் தேவை.
சில நேரங்களில், 'டைட்டானியம் பிளேட்'களை பயன்படுத்துவர். அதனால் பல தொந்தரவுகள் ஏற்படும். பாதிக்கப்பட்டவரின் பல்லையே எடுத்து அதில் லென்ஸ் பொருத்தி, கண்களில் வைக்கும்போது அது உடலோடு பொருந்தி போகும்.
இதற்கு நாங்கள் கோரைப்பல்லை மட்டுமே பயன்படுத்துவோம். எவருக்கு பாதிப்போ, அவருடைய பல்லை மட்டுமே பயன்படுத்த முடியும். இதை மூன்று நிலைகளில் செய்வோம். முதல் நிலையில் கண்களை மூடியிருக்கும் தசையை சுத்தம் செய்து, கண் பகுதியை தயார் செய்வோம்.
அடுத்த ஒரு மாதத்திற்கு பின் கோரை பல்லை வேர், சதை சுற்றியிருக்கும் எலும்புடன் பிடுங்குவோம். சதையை நீக்கி தனியாக வைத்துக் கொள்வோம். பல்லை தட்டை வடிவத்திற்கு கொண்டு வருவோம். பின், நடுவில் ஒரு ஓட்டை போட்டு, அதில் பிளாஸ்டிக் லென்சை பொருத்துவோம்.
பாஸ்கர் ஸ்ரீனிவாசன்: பல்லில் லென்ஸ் பொருத்தியதும், அப்படியே கண்ணுக்குள் பொருத்த முடியாது. இயற்கையாக உடலுடன் பொருந்துவதற்காக, கண்ணுக்கு கீழே இருக்கும் கதுப்பு பகுதிக்குள் வைத்து தைத்து விடுவோம். மூன்று மாதங்கள் அது உடலுக்குள் இருந்து ரத்த ஓட்டம் உருவாக வேண்டும்.
அதே நேரம், பல்லில் இருந்து எடுத்த சதையை கண்ணில் வைத்து வழக்கமான கண் மேற்பரப்பை போல் செயற்கையாக உருவாக்குவோம்.
மூன்று மாதங்களுக்கு பின், கதுப்பில் இருந்து லென்ஸ் வைக்கப்பட்ட பல்லை வெளியில் எடுத்து, கண் மேற்பரப்பில் சிறு ஓட்டை போட்டு, அதை பொருத்தி விடுவோம்.
பல்லில் இருந்த சதையையே கண்களில் வைத்திருப்பதால், பல் முழுக்க உடலுடன் பொருந்தி போகும். எல்லாம் முடிய ஆறு மாதங்கள் ஆகலாம். பல்லை பொருத்திய அடுத்த ஒரு மணி நேரத்தில், இயல்பான பார்வை கிடைத்து விடும்.
நரம்பு பாதிப்பு தவிர்த்து, பிற காரணங்களால், இனி பார்வை பெற வாய்ப்பே இல்லை என்று கைவிடப்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சை மிக பெரிய வரம்.
தொடர்புக்கு:
73050 46636