PUBLISHED ON : டிச 27, 2024 12:00 AM

மரச்செக்கு எண்ணெய், மசாலா பொருட்கள் தயாரிப்பில் மாதம் 8 லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்யும், திருச்சி மாவட்டம், நரசிங்கபுரத்தைச் சேர்ந்த பெண் வீரமணி செல்லையா: நான் பிறந்தது விவசாய குடும்பம்; பெரிதாக வசதியில்லை. 10ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை; 2004-ல் திருமணம் முடிந்தது.
கணவர், 'போர்வெல்' வண்டி டிரைவர். நான் வயலுக்கு கூலி வேலைக்கு சென்றேன்.
அதில் போதிய வருமானம் கிடைக்காததால், 'செக்கில் எண்ணெய் ஆட்டி விற்கலாம்' என்ற யோசனையை கணவரிடம் கூறினேன்.
என் சகோதரர் சரவணகுமார், எம்.பி.ஏ., படித்துவிட்டு மசாலா பொருட்கள் தயாரித்து விற்கும் தொழிலை ஏற்கனவே செய்து கொண்டிருந்தார். நானும், கணவரும் ஐடியாவை அவரிடம் சொல்ல, 'தயாரிப்பை நீங்க பாருங்க; மார்க்கெட்டிங்கை நான் பார்த்துக்கிறேன்' என்றார்.
என் சகோதரருக்கு மசாலா பொருட்கள் தொழிலில் ஏற்கனவே இருந்த வாடிக்கையாளர்களிடம், எங்கள் எண்ணெயையும் விற்றோம். பலரும், 'பிராண்டடு கடலை எண்ணெயையே, 1 லிட்டர் 190 ரூபாய்-க்கு தர்றாங்க; நீங்க, 300 ரூபாய்க்கு மேல சொல்றீங்களே...' என்றனர்.
'மூலப்பொருட்கள் விற்கும் விலைக்கு, தரமான கடலை எண்ணெய் தயாரித்தால், இந்த விலையில் தான் கொடுக்க முடியும்' என்று புரிய வைத்தோம். எங்கள் எண்ணெயை பயன்படுத்திப் பார்த்தவர்கள் தொடர்ந்து வாங்க ஆரம்பித்தனர். 'ஜீவி அக்ரோ என்டர்பிரைசஸ்' என்ற கம்பெனி பெயரில், 'சிவ அரண்' என்ற பிராண்டில் ஆரம்பித்த தொழில், ஆறு மாதங்களில், 'பிக்கப்' ஆனது.
இப்போது, திருச்சியில் மட்டும் 696 ரெகுலர் கஸ்டமர்களும், புதுக்கோட்டை, காரைக்குடி, சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, சென்னை, கோவை என 2,500 ரெகுலர் கஸ்டமர்களும் இருக்கின்றனர்.
ஒரு மாதத்திற்கு 1,600 கிலோ மசாலா பொருட்கள், 1,200 லிட்டர் கடலை எண்ணெய், 1,800 லிட்டர் நல்லெண்ணெய், 650 லிட்டர் தேங்காய் எண்ணெய் விற்கிறோம்.
எங்களிடம், 16 ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். திருச்சியில் இரண்டு இடங்களில், எங்கள் பிராண்ட் பொருட்களுக்கான நேரடி விற்பனை கடைகளை திறக்க இருக்கிறோம். பெண்கள், நம் பலத்தை நாம் முதலில் உணர வேண்டும்.
அதனால்தான், '10வது மட்டும் படிச்சு, கிராமத்துல இருந்துட்டு உனக்கு இதெல்லாம் வேண்டாத வேலை' என்று நான் கேட்ட வார்த்தைகள் எதுவும் என்னை முடக்கவில்லை.
நீங்களும் யாராலும், எதற்காகவும் முடங்கிப் போய் விடாதீர்கள்; முயற்சி எடுப்பதை இனியும் தள்ளிப் போடாதீர்கள்.
தொடர்புக்கு: 91590 11333

