'ரூ.5,000த்தில் துவங்கி இன்று ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வருமானம்!'
'ரூ.5,000த்தில் துவங்கி இன்று ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வருமானம்!'
PUBLISHED ON : நவ 22, 2026 12:00 AM

'எட்வர்ட் ஐ போட்டோகிராபி, கிரேட் ஹவுஸ் புரொடக் ஷன்ஸ்' என இரண்டு நிறுவனங்களை தொடங்கி, வெற்றிகரமாக நடத்தி வரும், கரூர் மாவட்டம், காந்திகிராமத்தைச் சேர்ந்த 24 வயதாகும் டிமோத் ஸ்டாலின்:
நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போதே, புகைப்படம் எடுக்கும் ஆர்வம் வந்து விட்டது. காரணம், எங்க அப்பா புகைப்பட நிபுணர். அவரை பார்த்து வளர்ந்ததால், இத்துறை மிகவும் பிடித்துப் போனது. அப்போது என் நண்பனிடம் இருந்த கேமராவை வச்சு தான் புகைப்படங்கள் எடுத்து பழக ஆரம்பித்தேன்.
சமூக வலைதளங்கள் வாயிலாக நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். வீட்டில் சிறிது பணக் கஷ்டம். நாம் கொஞ்சம் உதவி பண்ணலாம்னு, நண்பனிடம் இருந்து கேமரா வாங்கிச் சென்று, சிறு நிகழ்ச்சிகளுக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்தேன். அதில் கிடைத்த பணத்தை வைத்து, நண்பனின் கேமராவிற்கு வாடகை கொடுத்துட்டு, மீதியை வீட்டுக்கு கொடுப்பேன்.
இதை இன்னும் பெரிய அளவில் செய்வதற்கு, சொந்தமாக கம்ப்யூட்டர் வாங்க வீட்டுல பணம் கேட்டேன்; அம்மா, கடன் வாங்கி கொடுத்தார். அதில் ஒரு கம்ப்யூட்டரை வாங்கினேன்.
சில மாதங்களுக்குப் பின், குறும்படம் ஒன்றை, 'எடிட்' செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த வேலையை நன்கு செய்து தரவே, 5,000 ரூபாய் கொடுத்தனர். அதுவரைக்கும் நான் பார்த்த பெரிய வருமானமே அது தான்.
கல்லுாரி சேர்ந்த நேரத்தில், கொரோனா ஊரடங்கால் ஒன்றரை ஆண்டுகள் வீட்டிலேயே இருந்தேன். அந்த நேரத்தில், சினிமா காணொளி, 'எடிட்டிங்' குறித்து கூடுதல் விஷயங்களை நானே கற்றுக் கொண்டேன்.
கடும் முயற்சி செய்து நானே ஒரு வாடிக்கையாளரை பிடித்தேன். அவர் எனக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு காணொளி எடிட்டிங் வேலைகள் கொடுத்தார். அதில் கிடைத்த வருமானத்தில் என் படிப்பு செலவுகளை பார்த்துக் கொண்டேன்.
படித்து முடித்ததும் முழு நேரமாக புகைப்பட தொழிலில் இறங்கிட்டேன். 2023-ல் இருந்து அதிகமாக உழைக்க ஆரம்பித்தேன். நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். ஒரு மாதத்தில், 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்க ஆரம்பித்தது.
இதை வைத்து தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் சொந்தமாக வாங்கினேன். தற்போது என்னிடம் 10 பேர் வேலை செய்கின்றனர். 5,000 ரூபாயில் ஆரம்பித்த என் வருமானம், இப்போ ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இந்த தொழிலை தாண்டி, சினிமா இயக்குநர் ஆகணும் என்ற இலக்கும் இருக்கிறது.
'சினிமா என்னை சந்தோஷமாக வைத்திருக்கிறது!'
பல்வேறு சிரமங்களுக்கு இடையில், சினிமாவில் நுழைந்து புகழ் பெற்ற பிரபல நகைச்சுவை நடிகர் அப்புக்குட்டி:
என் உண்மையான பெயர் சிவபாலன். 'அப்புக்குட்டி' என்ற பெயர் சினிமாவுக்காக வைக்கப்பட்டது. திருச்செந்துார் அருகில் உள்ள நாதன்கிணறு தான் என் சொந்த ஊர்.
எட்டாம் வகுப்பு வரை தட்டுத் தடுமாறி படித்தேன். வீட்டில் சொல்ல முடியாத அளவுக்கு வறுமை. ஏதாவது வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நெருக்கடியில் சென்னை வந்தேன்.
சம்பளமும் தந்து, சாப்பாடும் போடும் ஹோட்டலில் வேலை கிடைத்தது; படிப்படியாக பதவி உயர்வு கிடைத்தது.
ஆனால், சினிமா ஆசை அதிகமானதால் வேலையை விட்டு விட்டேன்.
நான் நினைத்த மாதிரி சினிமா உலகம் இல்லை. மீண்டும் சாப்பாட்டுக்கு கஷ்டம்; சமையல் வேலைகளுக்கு செல்ல ஆரம்பித்தேன்.
சினிமா வாய்ப்பு தேட, அந்த வேலை தான் வசதியாக இருந்தது. அடுப்படி வேலை, அரவை வேலை என இழுத்துப் போட்டு செய்வேன். ஓரளவுக்கு காசு கிடைத்தது. வேலைக்கு செல்லும் இடங்களில் சாப்பாடு கிடைத்துவிடும். சினிமா வாய்ப்பு தேடி ஏறி, இறங்காத இடமில்லை.
ஒருவழியாக துணை நடிகராக கேமரா முன் வந்தேன். உள்ளே வந்து பெரிய நடிகர்களின் நடிப்பை பார்த்த பின், நடிப்பு என்பது நாம் நினைப்பது மாதிரி சாதாரணமில்லை; அது தனிக் கலை என்பது புரிந்தது. நடிப்பை கற்றுக்கொள்ள முயற்சி செய்தேன்.
இப்போது, 90 படங்களில் நடித்து முடித்து விட்டேன்.
சினிமாவில் சின்ன படம், பெரிய படம் என எதுவும் கிடையாது. கதையுள்ள படம் ஜெயிக்கும். நான் கதைகளை நம்புகிறேன். இங்கு வெற்றி, தோல்வியெல்லாம் ரொம்ப சகஜம். நான்கு படம் ஓடலைன்னாலும், ஒரு படம் கை துாக்கி விடும்.
நிறைய அவமானங்களைக் கடந்து வந்ததாலோ என்னவோ, இப்போது மிகவும் மன முதிர்ச்சியடைந்து விட்டேன். எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப் பழகி விட்டேன்.
அனுபவங்கள் தான் இந்த பக்குவத்தை கொடுத்திருக்கின்றன.
கஷ்டப்படுகிறேன்னு சொல்ல மாட்டேன். சினிமா இப்போதும் என்னை சந்தோஷமாக வைத்திருக்கிறது.
தேசிய விருது வாங்கிய பின், நகைச்சுவை நடிகராக நடிப்பதா, கதாநாயகனாக நடிப்பதா என்ற குழப்பம் வந்தது. ஆனால், கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதே சரி என்று முடிவெடுத்தேன்.
தேசிய விருது கிடைத்ததாலோ என்னவோ... விருது கதைகளாகவே என்னை தேடி வருகின்றன. 'நகைச்சுவை கதாநாயகன்' என்றே பெயர் வாங்க விரும்புகிறேன். அப்படி யாரும் என்னை பயன்படுத்துவதில்லை என்ற ஆதங்கம் எனக்குள் இருக்கிறது; விரைவில் அது நடக்கும்.
